Friday, April 3, 2015

வழக்குகள், எப்படிப்பட்ட கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்க

பல ஆண்டுகளுக்கு மேலான வழக்குகள், ஊர்  வம்பில் மாட்டிக் கொண்டு விழிக்கும் மாந்தர்கள், மருமகளிடம் சிக்கிய குடும்பத்தினர், மாமனார், மாமியார் கொடுமையில் குமுறும் பெண்கள் என எப்படிப்பட்ட கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்க  வேண்டுமா? நீங்கள் நம்பிச் சென்று தொழுது நிவாரணம் பெற ஒரு கோயில் உண்டு என்றால் அதுதான் சட்டநாதன் கோயில். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் மாலை வேளையில் சட்டநாதனை  ஆத்ம சுத்தியுடன், ஏகமனதாய் பூஜிக்க வேண்டும். எட்டு மாதத்தில் கை கண்ட பூரண குணம் கிட்டும் என்கின்றது அகஸ்தியர் நாடி.

 இங்கு இருபத்திரெண்டு புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. என்றாலும் எல்லா  சித்தர்களும் கொண்டாடக்கூடிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தமே ஆகும். வாழ்வில் ஒருமுறையாயினும் இதில் நீராட பிறவிப் பயனை அடையலாம். இங்கு சட்டை முனி சித்தர் என்ற 18 சித்தர்களுள் முக்கியம்  வாய்ந்த சித்தரின் ஜீவ சமாதி உண்டு. சதுரகிரி மலையில் இறைவனை நேரில் கண்டவர் இவர். ‘தோணியப்பர் என்ற பெயருடன், யாம் தோணிமேல் அமர்ந்திருக்கும் புண்ணிய க்ஷேத்திரத்தில் அடங்கி  எமை நாடி வருவாரை ஆசி செய்’ என்றான் சட்டநாதன். அதனாலேயே ஜீவசமாதி நிலை கொண்டு இறையருளால் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றார். ஒவ்வொரு அமாவாசை நடுநிசியில்  18 சித்தர்களும் கூடி இறைவனை ஆராதிக்கும் ஒரே கோயில் பூவுலகில் இதுவே என்கிறது நாடி. ‘‘மதியொழியுந் நிசிக்காலத்து மூவாறு சித்தருங் கூடி பிரும்மபுரியீசனை தொழக் கண்டின்புற்றேரும்’’  என்கிறார், அகஸ்தியர்.‘ஓம் சிவ சிவ ஓம்’ என ஒரு கோடி முறை ஒரு முகமாய் ஜபித்தால், சித்தர்கள் தரிசனம் கிட்டும் என்கிறது நாடி. ‘சரபேஸ்வரர்’ என்பது சிவபெருமானின் ஒரு ரூபம். இவர்  அழிக்கும் கடவுள் அல்ல, காக்கும் கடவுள். ‘சரபேஸ்வரர்’ என்றால், மகாவிஷ்ணுவும் பிரத்யங்கரா தேவியும் சிவனுள் கலந்து நிற்கும் அமைப்பாகும்.

எப்படிப்பட்ட குற்ற வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை வாங்கி தரத்தக்க தெய்வம். நீதிபதி பதவி வேண்டுவோரும் வழக்கில் இருந்து விடுபட வேண்டுபவரும் தொழத்தக்க தெய்வமே இந்த  சரபேஸ்வரர். இந்த சரபேஸ்வரரே சட்டநாதனை அஷ்டமி திதியில் தொழுகிறார். ஏன்? பக்தர்களின் குறைகளை போக்குகையில், அவர்களின் பாவ தோஷங்கள் இவரைப் பற்றிக் கொண்டு இவரது  புனிதத்தை கெடுக்கின்றனவாம். அதனால், இழந்த சக்தியை பெற சரபேஸ்வரர் இந்த சட்டநாதரைத் தொழுகிறாராம்! பஞ்ச நதிகளும் இவரை போற்றுகின்றன. பஞ்ச பூதங்களும் சட்ட நாதனை தொழுது  பணிவிடை புரிகின்றனர். 

என்னென்ன வேண்டுமென்று பட்டியல் இடத் தேவை இல்லை. தேவை இவை என்றால், என்ன புண்ணியங் கொண்டாய் என்று கேட்கும் இறைவர்கள் நிறையவே உண்டு. முன்னைய பிறவி பாவம்  அதனால் நீ அனுபவி துக்கத்தை என்பதே பெரும்பாலும் சித்தர்களும் ஜோதிடர்களும் கூறும் கூற்று. ஆனால் எவ்வளவு பெரிய பாவி ஆனாலும், அவனை மன்னித்து, நன்மை தரும் ஒரு கடவுள் குடி  கொண்டிருக்கும் கோயில், இந்த சட்டநாதன் கோயில். இங்கு தொழுபவர்களை அனைத்து சித்தர்களும் தேவர்களும் இன்னபிற இறைவர்களும் கண்டு கொண்டாடுகின்றனர். எனவே ஒருமுறையேனும் நாம்  அனைவரும் சட்டநாதன் சந்நதியில் நின்று தொழுது இன்புறுவோமே!

No comments:

Post a Comment