Tuesday, April 28, 2015

பிரெஞ்சு நகரில் கோடைச் சுற்றுலா

பாரதி பூங்கா
கடற்கரைக்கு அருகே உள்ளது அழகான பாரதி பூங்கா. அங்கே குழந்தைகள் விளையாட வசதியுண்டு. குடும்பத்துடன் வந்து இங்கே பொழுதைக் கழிக்கலாம். பாரதி பூங்காவையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் இல்லமான ராஜ்நிவாஸ், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் ஆகியவையும் உள்ளன. அருகருகே இருப்பதால் காலாற நடந்தபடியே இவற்றைப் பார்க்கலாம்.
அருங்காட்சியகம்
குழந்தைகளின் கலை ஆர்வத்துக்கு விருந்தளிக்கிறது இங்குள்ள அருங்காட்சியகம். இது புதுச்சேரி பாரதி பூங்கா அருகேயே உள்ளது. இங்கு ஏராளமான கலை பொக்கிஷங்கள் குவிந்துள்ளன. அதேபோல் ஆனந்தரங்கம்பிள்ளை அருங்காட்சியகம், பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த வீடுகள் ஆகியவற்றையும் மறக்காமல் பார்க்கலாம்.
பாரதியார் வீட்டில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருவதால் வெளியிலிருந்துதான் பார்க்க முடியும். பாரதிதாசன் வீடு அருங்காட்சியகமாக உள்ளது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்களையும், நூல்களையும் பார்த்துப் பரவசமடையலாம்.
பழைய பேருந்து நிலையம் அருகே தாவரவியல் பூங்கா உள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. எனினும், குழந்தைகளைக் கவரும் முக்கியப் பூங்கா இது. குட்டி ரயில், பழங்கால மரங்கள், அழகான புல்தரைகள் காண்போரைக் கவரும்.
பாரடைஸ் பீச்
புதுவையில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் ஏழு கி.மீ தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சுண்ணாம்பாறு படகுத்துறை உள்ளது. வங்கக் கடலை ஒட்டி சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் பகுதியில் இப்படகுத் துறை உள்ளது. இங்குள்ள படகில் ஏறினால் சுண்ணாம்பாற்றில் பயணம் செய்வது கடலில் செல்வது போன்ற உணர்வைத் தரும். பயண முடிவில் பாரடைஸ் பீச்சை அடையலாம்.
அழகான தீவு போலவே இருக்கும். சுண்ணாம்பாறு தண்ணீரும் கடலில் இருந்து வரும் பேக் வாட்டர் ஒரு பகுதியிலும் எதிரே கடலும் நடுவே தீவு போன்ற கடற்கரைப் பகுதி மணல்வெளியும் அழகாய் நம்மைக் கட்டிப்போடும். இக்கடற்கரை வெளிநாட்டிலிருப்பது போல் தோற்றம் தரும். அத்துடன் பாரடைஸ் பீச் பகுதியில் நீர் விளையாட்டுகளும் உள்ளன. படகுப் பயணம், நீர் விளையாட்டுகள் குழந்தைகளைக் கவரும்.
ஆரோவில்
புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. அன்னையின் கனவு நகரமான ஆரோவில் கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் தொடங்கப்பட்டது. இங்கு உலகெங்கும் 121 நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மண் எடுத்து வரப்பட்டு, தாமரை மொட்டு வடிவமைப்பு உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே மாத்ரி மந்திர் என்ற தியான மண்டபமும் உள்ளது. மாத்ரி மந்திரைச் சுற்றி 12 பூங்காங்கள் உள்ளன.
ஆரோவில்லின் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையமும் உள்ளது. அங்கு ஆரோவில் பற்றிய கண்காட்சி, மற்றும் படக்காட்சி ஆகியவற்றைக் காணலாம். உணவு விடுதி, ஆரோவில்லில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை, விற்பனை செய்யும் அங்காடிகள் உள்ளன. அதனைப் பார்க்க அன்பர்களுக்குத் தோட்டத்துக்குச் சென்று மாத்ரி மந்திரைத் தொலைவிலிருந்து பார்வையிட நுழைவுச்சீட்டு இலவசமாகத் தரப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, ஆம்பித் தியேட்டர் வரை சென்று தோட்டங்களைப் பார்வையிடலாம்.
பொதுவாக, ஞாயிறுக்கிழமையில் காலை 9.30 மணிமுதல் 12.30 வரையில் அனுமதி உண்டு. மற்ற நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரைக்கும் உண்டு. முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாத்ரி மந்திரினுள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே முன்கூட்டியே பதிவுசெய்து கொள்வது நல்லது.
நடந்தும் ரசிக்கலாம்
புதுச்சேரியில் பாரம்பரிய கட்டிடங்களைக் காண ‘ஹெரிட்டேஜ் வாக்’ அழைத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் சைக்கிள் ரிக் ஷா மூலம் நகரை வலம் வரும் பயணமும் புகழ் பெற்றது. சைக்கிள்களும் வாடகைக்குக் கிடைக்கும். அழகான கட்டிடங்கள், அமைதியான பூங்கா, எழில்மிகுந்த கடற்கரை என இயற்கையோடு இணைந்து விளையாட குட்டீஸ் களுக்கு அருமையான இடம் புதுச்சேரி. http://tamil.thehindu.com/society/kids/article7129739.ece

No comments:

Post a Comment