Friday, November 28, 2014

Allergic rhinitis என்ற நோயை ஆயுர்வேதத்தில் பீனஸம், பிரதிச்யாயம்

நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசு, மகரந்தம் போன்றவை மூக்கில் ஏறித் தும்மலை ஏற்படுத்தும். சில நேரம் உணவின் நறுமணமும் இச்செயலைச் செய்யும். மகரந்தத் துகள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒவ்வாமைக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
ஒவ்வாமையைத் தூண்டும் வஸ்துவை Allergen என்று அழைக்கிறார்கள். சிலருக்குப் பெயிண்ட் வாசனையால் ஒவ்வாமை ஏற்படும். சில செடி, கொடிகளின் மகரந்தம் காற்றில் பறந்து போகும்போது ஒவ்வாமை ஏற்படும். சூடான வறண்ட காற்று உள்ள நாட்களில் மகரந்தம் அதிகமாக இருக்கும். குளிர்ந்த மழை நாட்களில் இவை அதிகம் இருக்காது. சிலருக்குப் பரம்பரையாக இந்நோய் பாதிப்பு காணப்படும். தாய் அல்லது தந்தைக்கு இந்நோய் இருந்தால், குழந்தைகளுக்கும் வரலாம்.
பாதிப்பு
இந்நோய் காரணமாக மூக்கில் அரிப்பு தோன்றும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மணத்தை உணர முடியாது. மூக்கு ஒழுகிக்கொண்டே இருக்கும். தும்மல் ஏற்படும், கண்ணிலிருந்து தண்ணீர் வரும். பிறகு மூக்கு, காது அடைபடும். இருமல் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். அசதி, தலைவலி போன்றவை வரும்.
சில நேரங்களில் மருத்துவர்கள், eosinophilia அதிகரித்துள்ளதா என்பதையும், IgE அளவையும் பரிசோதிப்பார்கள். சம்பந்தப்பட்ட ஒவ்வாமையைத் தவிர்த்து வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். Nasal wash இதற்கு மிகவும் சிறந்தது. உப்பு நீரால் இதைச் செய்யலாம். கடையிலும் இதற்கான மருந்து கிடைக்கும்.
தீர்வு
ஒரு கோப்பைச் சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பும், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும் கலந்து செய்யலாம். ஒவ்வாமைக்கு anti histamine என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது சிலருக்குச் சற்று உறக்கத்தை ஏற்படுத்தும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்போது வண்டி ஓட்டவோ, இயந்திர வேலைகளைச் செய்யவோ கூடாது என்பது அறிவுரை.
இப்போது மூக்கில் அடித்துக்கொள்ள ஸ்பிரேகூட வந்துவிட்டது. காய்ச்சல் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். நவீன மருத்துவத்தில் மூக்கு வளைந்திருக்கிறது (deviated nasal septum) என்று சொல்லி அதற்கு x-ray, scan போன்றவற்றை எடுக்கச் சொல்லி, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அறுவை சிகிச்சை செய்த பிறகும் சளியோடும், தும்மலோடும் இருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
மூக்கு இருந்தால் ஜலதோஷம் வரும். நோய் எதிர்ப்புத் தன்மையைத்தான் அதிகரிக்க வேண்டும். இந்தப் பீனஸ நோய்க்குக் காரணங்களாக ஆயுர்வேதத்தில் சொல்லப்படுபவை:
1. ஒரு மனிதனின் ஆதி பலமாகிய அக்னி எனும் செரிக்கும் தன்மையின் பலம் குறைவது
2. மல, மூத்திரங்களைத் தொடர்ந்து அடக்குவதால் வருவது
3. நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்து வருவது
4. ஒவ்வாமையால் வருவது
இந்த நிலைகளில் கார்ப்பு சுவையுடைய சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சிற்றரத்தை, தாளிசபத்திரி போன்ற சூரணங்கள், இந்துகாந்த நெய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
நீர்க்கோவை என்ற பிரசித்தி பெற்ற மாத்திரையை இஞ்சிச் சாற்றிலோ, துளசிச் சாற்றிலோ அரைத்து மூக்கைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும். மீண்டும் நோய் வராமல் இருக்க நெல்லிக்காய் லேகியத்தைக் கொடுக்க வேண்டும். உடனடி நிவாரணத்துக்கு லெக்ஷ்மி விலாஸ ரசம், சுதர்ஸன சூரணம், துளசி கஷாயம் போன்றவை சிறந்த பலனை அளிக்கும். நோயிலிருந்து விடுபட்ட பிறகு மேலும் நோய் வராமல் இருப்பதற்கு நொச்சி தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லது. இனி எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்:
மூக்கடைப்புக்குக் கைமருந்து
# லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்துப் புளிச்சாற்றிலோ, தண்ணீரிலோ குழைத்து, சற்றுச் சூடாக்கித் தலையிலும், மூக்கைச் சுற்றியும் போட்டு வரலாம்.
# திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சிறிய அளவு படிகாரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்துகொள்ள ஒரு துணியில் சிறிய முடிச்சாகக் கட்டி முகர்ந்து பார்க்க அடைப்பு, அரிப்பு மாறும்.
# புதினா இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்துவர நோய் எதிர்ப்பு உருவாகித் தும்மல் வருவது குறையும்.
# சிற்றகத்தி இலை, வெள் வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு, பால், சாம்பிராணி ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தால், மேற்கொண்டு ஜலதோஷம் வராது. இத்துடன் நொச்சியிலைச் சாறும் சேர்த்துக்கொள்ளவும்.
# உணவில் மணலிக் கீரை சேர்த்துக்கொள்ளலாம்.
# மிளகு ரசம் வைத்துக் குடிக்கலாம்
# பூண்டு ஜூஸ் வைத்துக் குடிக்கலாம்.
# சூடான பாலில் மஞ்சள் பொடி சேர்த்துக் குடிக்கலாம்
# சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றைக் கஷாயமாக்கிப் பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம்
# வெள்ளைப் பூண்டு குழம்பு வைத்துச் சாப்பிடலாம்.
# பால் சேர்க்காத காப்பி குடிக்கலாம்.                              http://tamil.thehindu.com/general/health/article6631081.ece

No comments:

Post a Comment