Sunday, September 8, 2013

மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கை!

எய்ட்ஸ் பாதித்த, நூற்றுக்கணக்கான குழந்தைகளை படிக்க வைத்து, பராமரித்து வரும் மருத்துவர், மனோரமா பினாகபாணி: நான், குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுகிறேன். மின்சாரமே இல்லாத காலத்தில், விளக்கை வைத்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் செய்த மருத்துவ சேவையை, அப்பா கதையாக கூறுவார். அதனால், மற்றவர்களுக்கு உதவுவது தான் வாழ்க்கை என்ற எண்ணம் உருவாகி, மருத்துவம் படித்தேன். கடந்த, 1977ல், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மூத்த பயிற்சி மருத்துவராக பணியாற்றினேன். அப்போது, இரு குழந்தைகளுக்கு, எச்.ஐ.வி., இருப்பதாக மருத்துவ சோதனையில் அறிந்து, அழைத்து வந்தவரிடம் கூறினேன். அவரோ, "எங்கள் குழந்தைகள் காப்பகத்தில், 400 பேர் உள்ளனர். இந்த குழந்தைகளை மறுபடியும் அழைத்து சென்றால், மற்ற, 400 குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் பரவிவிடும். என்னால் அழைத்து செல்ல இயலாது' என, வெளியேறினார். வாயில்லா ஜீவன், சாலையில் அடிபட்டால் கூட, "புளூ கிராஸ்'க்கு தகவல் தெரிவித்து பலர் உதவுவர். ஆனால், இந்த குழந்தைகளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. நானே, வீட்டுக்கு அழைத்து சென்றேன். அன்று ஆரம்பித்த பணி, இன்று, " கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி' எனும், அமைப்பாக மாறி, 93 எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை வளர்ப்பதுடன், 252 குழந்தைகளுக்கு, மறு வாழ்வும் அளித்துள்ளேன். 1980களில், எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இக்குழந்தைகளை வளர்க்க, அதிகம் கஷ்டப்பட்டேன். ஆனால், இன்றளவும் எயிட்ஸ் பாதித்த குழந்தைகளை வளர்க்க, பெற்றோர் பயப்படுகின்றனர். எச்.ஐ.வி., பாதித்த பெண்களுக்கு குழந்தை பிறந்தால், மூன்றில் ஒரு சதவீத குழந்தைக்கு மட்டுமே, இந்நோய் தாக்கம் இருக்கும். முறையான சிகிச்சை அளித்தால், நோய் தாக்கத்தையும் குறைக்கலாம் என்பதால், பெற்றோர் பயப்பட தேவையில்லை. இப்படி, 43 குழந்தைகளை குணப்படுத்தியிருக்கிறேன். தொடர்புக்கு: 94440 77177

No comments:

Post a Comment