Monday, September 23, 2013

கோபுரங்களை காக்கும் "டப்போலா!'


கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பர். புராண கதைகள், திருவிளையாடல்கள், வாழ்க்கை அர்த்தங்களை விளக்கும் சிற்பங்களை உடைய, கோபுரங்களை தரிசிப்பது, உண்மையிலேயே புண்ணியம்தான். அதேசமயம், கோபுரத்தின் சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட இடத்தில், விருட்சமாய் வளரும் செடிகளை பார்க்கும்போது, மனம் பதை பதைக்கும். இவ்வகை செடிகள், நாளடைவில் பெரிதாக வளர்ந்து, கோபுரத்தில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும். காளஹஸ்தி கோவில் கோபுரம், இப்படித்தான் இடிந்திருக்க வேண்டும், என்கின்றனர். இதற்கு, முற்றுப்புள்ளி வைக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான், "டப்போலோ' மருந்து. "கோபுர செடிளை களைந்து, அந்த இடத்தில் இம்மருந்தை வைத்துவிட்டால் போதும், மீண்டும் செடி வளராது...' என்கிறார், திருச்சியை சேர்ந்த முருகானந்தம்.

இவர், கடந்த, 19 ஆண்டுகளாக, தமிழ்நாடு மற்றும் தென்மாநில கோவில்களில், கோபுர செடிகளை களைந்து வருகிறார். திருச்சி, "பெல்' நிறுவனத்தில், 14 ஆண்டுகளாக, மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றிய இவர்,கோபுர செடிகளை களைவதற்காகவே, துணைமேலாளர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது தாய்மாமா மறைந்த, கி.ஆ.பெ.விஸ்வநாத பிள்ளை."இந்த ஆர்வம், எப்படி ஏற்பட்டது' என்று, அவரிடம் கேட்டதற்கு, அவர் கூறிய பதில்: "பெல்' கம்பெனியில் வேலை பார்த்த போது, பஞ்சாப்பிற்கு, பணி நிமித்தமாக சென்றிருந்தேன். அங்கு, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்த போது, ஏராளமான பார்த்தீனிய செடிகள் இருந்தன. அதை அகற்றிய, ஒரு மாதத்தில், மீண்டும் வளர்ந்தது. விசாரித்தபோது, "அதை அழிப்பது கஷ்டம்' என்றனர். "ஏன் கஷ்டம்?' என, எனக்குள் கேள்வி எழுந்தது. இதுவே, "டப்போலோ' மருந்து கண்டுபிடிக்க, தூண்டுகோலாக அமைந்தது. இதற்கு, என் அம்மாவும் ஒரு காரணம். எங்கள் வீட்டுக்கு அருகில், பூலோகநாதர் கோவில் உள்ளது. அங்கே, தினமும், மாலை வேளையில், எங்கம்மா போய் உட்காருவாங்க. அப்போ, கோபுரங்களில் செடியை பார்த்து வேதனைபட்ட அவர், "அதை அகற்ற, நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது...' என்றார்.
உடனடியாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மருந்து கண்டுபிடிக்கும், முயற்சியில் ஈடுபட்டேன். பல கட்டங்களுக்கு பின், "டப்போலோ' மருந்தை கண்டுபிடித்தேன். 19 ஆண்டுகளில், இதுவரை, 6000 கோவில் கோபுரங்களில் வளர்ந்த செடிளை, களையெடுத்து உள்ளோம். முதன்முதலில், கர்நாடகா, உடுப்பி தர்மசாலாவுக்கு சொந்தமான கோவிலில் தான், இவ்வேலையை ஆரம்பித்தோம். இப்போ, நாங்க வேலை செய்யாத கோபுரங்கள் இல்லை எனும் அளவிற்கு, அரசு, தனியார் கோவில்களில் பணி செய்துள்ளோம். இதை, தமிழக அரசும் அங்கீகரித்து உள்ளது.

கோபுரங்களில் ஏன் செடிகள் உருவாகின்றன என்றால், காற்று, மழை, மண், பறவை எச்சங்களால், கோபுர இடிபாடுகளில் விழும் விதைகள், செடிகளாக முளைக்கின்றன. உதாரணமாக, அரசமர விதை லேசானது. அது, காற்று அடித்து, கோபுர இடிபாடுகளில் விழும்போது, அவ்விடத்தில், செடி வளர ஆரம்பிக்கிறது. அதேபோல், பறவை எச்சங்கள், செடிகள் உருவாவதற்கும், அவற்றிற்கு, உரமாகவும் பயன்படுகின்றன. இதனாலேயே, கோபுரங்களில் செடிகள் வளர்கின்றன. கோபுரங்களில் அரசமரம், ஆலமரம், மஞ்சணத்தி மரங்கள்தான் அதிகம் வளர்கின்றன. ஆலமர செடியை அகற்றிய இடத்தில், இம்மருந்தை வைத்தால், மீண்டும் அந்த இடத்தில், செடி வளராது. அதேசமயம், வேறு மரச்செடி வளருவதை தடுக்க முடியாது. இதனால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோபுர செடிகளை களைவது அவசியம். தங்க விமானங்களிலும், தங்கம் பாதிக்காத வகையில், இம்மருந்தை பயன்படுத்தி, வெற்றி கண்டிருக்கிறோம், என்கிறார், முருகானந்தம். இவரை தொடர்பு கொள்ள வேண்டிய, மொபைல் போன் எண்: 94444 10032.

No comments:

Post a Comment