டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இயற்கை முறைப்படி சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரு வந்துள்ளார். அங்குள்ள ஜிந்தால் மருத்துவமனையில் அவர் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெறவுள்ளார்.
ஜிந்தால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாபினா நந்தகுமாரிடம் பேசிய போது, கேஜ்ரிவால் வருகிற 15-ம் தேதி வரை இங்கு த‌ங்கி சிகிச்சைப் பெறுகிறார். தினமும் காலை 5.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அவருக்கு இயற்கை முறைப்படி (நேச்சுரோபதி) சிகிச்சை அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து டிடாக்ஸிஃபிகேஷன், ஹைட்ரோ தெரபி, யோகாசனம், மேனிபுலேட்டிவ் தெரபி, அக்குபிரசர், பிசியொதெரபி, டயட் தெரபி, நடைப்பயிற்சி, மண் குளியல், மூலிகை ஆவி பிடித்தல், எண்ணெய் மசாஜ் போன்ற இயற்கை முறையிலான சிகிச்சை அளிக்கப்படும். மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ரூ 20-ல் இருந்து மருத்துவ சேவை வழங்குவதால் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலே நோயாளியின் பாதி நோயை குணப்படுத்தி விடும்' என்றார்.
ஹசாரேவின் அறிவுரை 2012-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றதால் அண்ணா ஹசாரேவின் உடல் மிகவும் நலிவுற்றது. இதையடுத்து அவர் ஜிந்தால் மருத்துவமனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இயற்கை முறையில் சிகிச்சை பெற்று விரைவில் பூரணமாக குணமடைந்தார். இப்போது அவரது அறிவுரையின் பேரில் கேஜ்ரிவால் பெங்களூரு வந்துள்ளார்

17-03-2015
பெங்களூரு ஜிந்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிகிச்சை முடிந்து நேற்று டெல்லி திரும்பினார். தனக்கு இருமல் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாள‌ரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக‌ தொடர் இருமல், சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 300-க்கும் கூடுதலாக இருந்தது. இதனால் கடந்த 5-ம் தேதி தனது பெற்றோருடன் பெங்களூரு வந்தார். துமகூரு சாலையில் உள்ள ஜிந்தால் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக இயற்கை முறையில் சிகிச்சைப் பெற்ற கேஜ்ரிவால், நேற்று மருத்துமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு கேஜ்ரிவால் கூறியதாவது: இருமல் பிரச்சினையில் இருந்து முழுவதுமாக குணமாகி விட்டேன். ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு மிகவும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர் கிறேன். மீண்டும் எனது வழக்க மான பணிகளுக்கு திரும்ப உள்ளேன்.
ஜிந்தால் மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் சீதாராமுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு சிறப்பாக சிகிச்சையளித்த மருத்துவர் களுக்கும், ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற மருத்துவமனைகள் பெங்களூரு மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தொடங்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணி நெருக்கடியிலிருந்து விலகி, ஓய்வெடுத்ததால் நிறைய நேர்மறையான சிந்தனைகள் உருவாகியுள்ளன.
மேலும் கர்நாடகத்தில் அமல் படுத்தப்பட்டுள்ள இஸ்கானின் அட்சயபாத்திரம் மதிய உணவு திட்டத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன். இஸ்கானின் சமை யலறைகளை நேரில் சென்று பார்த்தபோது மிகவும் சுத்தமாக இருந்தது. இந்த திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக யோசித்து வருகிறேன். இவ்வாறு கூறிவிட்டு தனது பெற்றோருடன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இயற்கை சிகிச்சை முறை
இதுகுறித்து ஜிந்தால் மருத்துவமனையின் தலைமை மருத்துவ‌ர் பபீனா நந்தகுமார் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரி வாலுக்கு சிகிச்சைக்கு முன்பு தொடர் இருமலும், ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. மிகுதியான குளிர் பானம் அருந்துதல், சரியான நேரத்துக்கு சாப்பிடாமை உள்ளிட்ட காரணங்களால் உடலில் நச்சுப் பொருட்கள் அதிகரித்ததே அதற்குக் காரணம்.
அவருக்கு தினமும் காலை 5.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இயற்கை மருத்துவ‌ முறைப்படி சிகிச்சை அளித்தோம். ஹைட்ரோ தெரபி, யோகாசனம், மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி, மண் குளியல், விளக்கெண்ணெய் மசாஜ், அக்குபஞ்சர், முறையான உணவு கட்டுப்பாடு ஆகிய சிகிச்சை முறையைக் கையாண்டோம். சிகிச்சை நாட்களில் அதிகாலையில் மூலிகை சாறு, சுரைக்காய் சாறும் காலை உணவாக பப்பாளி பழமும், பிற்பகலில் சப்பாத்தியுடன் வேக வைக்கப்பட்ட காய்கறிகள், இரவில் பசியை தூண்டக்கூடிய காய்கறி சூப்பும் வழங்கப்பட்டது. இனி தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து பத்மாசன யோகா பயிற்சியை மேற்கொள்ளவும், உணவு கட்டுப்பாட்டை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ள‌ளது.
இயற்கை மருத்துவ முறை யால் கேஜ்ரிவாலின் உடலில் இருந்த நச்சுகளை அகற்றியுள்ளோம். இதனால் ரத்தத்தில் ச‌ர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துள்ளது. சளியும், இருமல் பிரச்சினையும் தீர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடந்த 2012-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் மிகவும் உடல் நலிவுற்றார். அப்போது ஜிந்தால் மருத்துவமனைக்கு வந்து 15 நாட்கள் தங்கி இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று குணமானார். அவரது அறிவுரையின் பேரிலேயே கேஜ்ரிவால் இங்கு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.