Saturday, March 21, 2015

நெல் ரகம்

சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது. 

அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது. கிச்சலி சம்பா நெல் ரகம் மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. சன்ன ரகம், மஞ்சள் நெல், வெள்ளை அரிசி, நூற்று முப்பத்து ஐந்து நாளில் அறுவடைக்கு வரக்கூடியது. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. சாயும் தன்மை கொண்டதாக இருந்தாலும் அறுவடைக்கும், நெல்லுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. மழை வெள்ளத்திலும் ஓரளவு தாக்குப்பிடிக்கும்.

கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். இந்த வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும். பால் சுரக்கும் திறன் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கும் ஏற்ற அரிசி ரகம் இது. சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக மருத்துவர்கள், நோயாளிகளிடம் அரிசி சோற்றை அதிகம் உண்ணாதீர்கள். காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள் என்கிறார்கள். அதில் அரிசியிலும் குட்டை ரகப் பயிர்கள், ஒட்டு ரகப் பயிர்கள், `பாலீஷ்’ என்ற பெயரில் சத்து நீக்கப்பட்ட அரிசி வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 9443320954 

 கொழுப்பைக் கரைக்கும் கொட்டார சம்பா
கொட்டார சம்பா நெல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உரிய நெல் ரகம். இதற்கு மொழிக் கருப்பு சம்பா என்ற பெயரும் உண்டு. இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகம். கொட்டாரம் என்றால் அரண்மனை என்று அர்த்தம். அரசர்களின் குடும்பத்துக்காகவே கொட்டார சம்பா நெல்லை நாஞ்சில் நாட்டு மக்கள் உற்பத்தி செய்து வழங்கிவந்துள்ளனர்.
 
முதன்மை உணவு  இந்த ரகம் நூற்று ஐம்பது நாள் வயதுடையது. ஐந்தடி வரை வளரும். மோட்டா ரகம், மத்திய காலப் பயிர், மஞ்சள் நெல், சிவப்பு அரிசி, பாரம்பரிய நெல் ரகங்களில் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்த அளவு கொண்ட நெல் ரகம். பல உணவு வகைகளுக்குப் பயன்படுத்தினாலும் கேரளத்தில் பிரசித்தி பெற்ற புட்டு - கடலைக்கறிக்கும் பெயர் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டு மக்கள் பிரதான உணவாக கொட்டார சம்பா அரிசியை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்கள். இந்த அரிசியை, தேங்காய்த் துருவல் சேர்த்துச் சாப்பிட்டால் சுவை கூடும். இயல்பாகவே இனிப்புச் சுவை அதிகம் கொண்டது.
 
மருத்துவ குணம் இந்த அரிசியை உண்பதால், மூளை வளர்ச்சியும் நோய் எதிர்ப்புச் சக்தியும் அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கொட்டார சம்பா அரிசியில் குழந்தைகளுக்கு உணவளித்துவந்தால், நோய் தாக்காமலும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.
பேறுகாலப் பெண்களுக்கு இந்த அரிசியில் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும், பருவமடைந்த பெண்கள் தொடர்ந்து இந்த அரிசியைச் சோறாக்கி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை கூடும். அதேபோல, கன்று போட்ட மாடுகளுக்கும் கொடுக்கலாம். உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் கொண்டது கொட்டார சம்பா நெல்.
 இளம் குழந்தைக்கு முதல் உணவு வாடன் சம்பா: நம் நெல் அறிவோம் 

மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் ரகம் வாடன் சம்பா. வறட்சியைத் தாங்கிக்கொண்டு, மழை பெய்யும்போது பயிர் வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. நூற்று நாற்பது நாள் வயதுடைய இந்த நெல், மஞ்சள் மற்றும் பழுப்பு நிற அரிசியைக் கொண்ட நீண்ட காலப் பயிர். சன்ன ரக அரிசி. நான்கடி வளரக்கூடிய நெல் ரகம்.

பராமரிப்பு ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும், ஒருமுறை பஞ்சகவ்யாவும் பயன்படுத்தினால் ஏக்கருக்கு இருபத்து ஐந்து மூட்டைவரை மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை. பூச்சி நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட ரகம் இது. மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால், பத்து நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும். சன்ன ரகமாகவும், சத்து மிகுந்த ரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு இந்த ரகம் அதிகம் விரும்பப்படுகிறது. உணவுத் திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகாரம் செய்ய விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். மிகுந்த ருசியுடன் இருப்பதால் மக்களிடையே வாடன் சம்பா பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
 
மருத்துவக் குணம் அத்துடன் மருத்துவக் குணமும் கொண்டது வாடன் சம்பா. மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் பத்தியம் இருக்க வேண்டும். அதற்கும் பேதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் வாடன் சம்பா அரிசிக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் பழக்கம் கிராமப் பகுதிகளில் இன்னும் இருந்துவருகிறது. குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குக் காரணம் விரைவில் ஜீரணம் ஆவதும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்ததுமான இந்த நெல் ரகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும் சிறந்ததாக இருக்கும் என்பதுதான்.

No comments:

Post a Comment