Monday, March 16, 2015

வட்டியில்லா கடன் உண்மையா?

இந்த 0% வட்டி என்கிற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என்பது முக்கியமானது. “வட்டியில்லாத தவணைத் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விற்பனையை அதிகரிக்கச் செய்வது மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் வாடிக்கை யாளர்களைக் கவர வேண்டுமானால் அந்த அஸ்திரத்தை பயன்படுத்தத்தான் வேண்டியிருக்கிறது என்கின்றனர். ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு முன்னணி கடனுதவி நிறுவனங்கள் மின்னணு சாதனங்களுக்கான கடனுதவியை நிறுத்திவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இப்போது கடனுதவி செய்து வருகின்றன. அதே சமயத்தில் சில விற்பனை நிறுவனங்கள் தங்களிடம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களே கடனுதவி செய்து வருகின்றன.அதாவது அவர்களிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு இஎம்ஐ மூலம் பணத்தைக் கட்டலாம். இப்போது இந்த வழியில்தான் 0% வட்டி என்பது மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த 0% என்பதற்கு பின்னணியில் பல விவரங்களும் உள்ளன. வட்டியில்லாமல் கடன் கொடுக்க அந்த நிறுவனங்களுக்கான நோக்கம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கலாம். ஆனால்       லாபம் இல்லாமல் விற்க முடியுமா? அல்லது கடனுதவிதான் செய்வார்களா? இங்குதான் இதன் பின்னாலுள்ள சூட்சுமங்களை விளக்குகின்றனர் விவரமறிந்தவர்கள்.

தவணையில் வாங்கும் பொருளுக்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி கணக்கிடத்தான் செய்கிறார்கள். இதை வெளிப்படையாக இத்தனை சதவீதம் என்று அறிவித்தால் வாடிக் கையாளர் தயங்குவார். அதனால்தான் வட்டியில்லாத கடனுதவி என்கிற அறிவிப்பு.
வட்டியில்லா கடனில் பொருட்களை வாங்குபவர்களுக்கு பேரம் பேசும் வாய்ப்பு கிடையாது. பேரம் பேசும்போது விலை குறைக்க வாய்ப்பு உள்ளது. விலையை குறைக்க வாய்ப்பில்லாத நிலை அல்லது அதிகமாக கூறுவார்கள். தவிர பிராசசிங் கட்டணம், டாக்குமெண்ட் கட்டணம், செல்லர்ஸ் அக்ரிமெண்ட் என பல மறைமுக கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கும். இதை எல்லாவற்றையும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட அந்த நிறுவனம் கணக்கிடும் வட்டி வீதத்துக்கு இணையாக இருக்கும் என்கின்றனர். தவிர ஒரு தவணை தவறினாலும் அபராதம், வட்டி என அதற்கும் தனியாக தொகைகள் கறந்து விடுவார்கள். இவை எல்லாவற்றையும் விட சில நிறுவனங்கள் முதலில் கட்டும் மார்ஜின் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிடுகின்றன. அதாவது பொருட் களை வாங்குகிறோம் என்றால் 3:1 என்கிற வீதத்தில் முன்பணம் கட்ட வேண்டும். அந்த ஒரு பங்கு முன்பணத்துக்கும் வட்டி கணக்கிடுகின்றனர். எனவே 0% வட்டி என்பதெல்லாம் வாடிக்கையாளர்களை இழுக்கும் உத்திதான். அதே நேரத்தில் இஎம்ஐ திட்டங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர். 
வீட்டு உபயோகப் பொருட்களை தவணையில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் இது சரியான பழக்கம் அல்ல. பொருட்களை உடனடியாக வாங்கி பயன்படுத்தும் வேகம் இருக்கிறது. ஆனால் அதற்கான வட்டி குறித்து யோசிப்பதில்லை. குறைந்த வருமான பிரிவினருக்கு வாய்ப்பு என்பதையெல்லாம் தாண்டி திட்டமிட்டபடி வாழ்க்கை அமைத்துக் கொண்டால் தவணைத் திட்டங்களில் ஏமாற வேண்டிய தேவை இருக்காது. அதே சமயத்தில் நமது தேவை களையும் நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்பதுதான் உண்மை.
http://tamil.thehindu.com/business/business-supplement/article6998520.ece?widget-art=four-all

No comments:

Post a Comment