Thursday, March 5, 2015

கூடுதல் விவரங்களுடன் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு

சிறு தவறுகூட இல்லாமல் கூடுதல் விவரங்களுடன் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்தில் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
நூறு சதவீதம் துல்லியமாக, ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய கூடுதல் விவரங்களுடன் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில் ‘வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது. தமிழகத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் சென்னை கோட்டையில் நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), கிரிராஜன், பரந்தாமன் (திமுக), பார்த்தசாரதி, இளங்கோவன் (தேமுதிக), கே.டி.ராகவன், சக்கரவர்த்தி (பாஜக), பாலசுப்பிரமணியன் (காங்கிரஸ்), அழகிரிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), செல்வசிங், ரமணி (மார்க்சிஸ்ட்) மற்றும் தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் சந்தீப் சக்சேனா கூறியதாவது:
‘சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’ என்பதுதான் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் திட்டத்தின் மையக்கரு. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்துகொள்வது, ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது, தற்போதைய புகைப்படத்தை சேர்ப்பது ஆகியவற்றுடன் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை சேர்ப்பது இந்த திட்டத்தின் தலையாய நோக்கங்கள்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதி யில் பெயர் இருந்தால் எளிதில் கண்டறிந்துவிடலாம். செல்போன் எண், இ-மெயில் முகவரி அளிப்ப தன் மூலம் எதிர்காலத்தில் வாக்கா ளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க முடியும்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும், ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களைச் சேர்க்கவும் ஏப்ரல் 12, 26, மே 10, 24 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு முகாம்களில் வாக்காளர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். கூடுதல் விசாரணை தேவைப்பட்டால்கூட அதற்கும் 15 நாட்களில் தீர்வு காணப்படும். இப்பணி முழுவதும் ஆன்லைனில் கண்காணிக்கப்படும்.
ஆதார் அடையாள அட்டை இன்னும் பெறாதவர்கள் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ‘டின்’ எண்ணை தற்போது அளித்து பின்னர் ஆதார் எண்ணை பதிவு செய்துகொள்ளலாம். இந்த திட்டம் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் விழிப்புணர்வு பணியிலும் ஈடுபடுவர். புதிய திட்டத்தின் செயல்பாடு இன்றே (நேற்று) தொடங்கிவிட்டன. எனவே, வாக்காளர்கள் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி விவரங்களை தமிழக தேர்தல் துறையின் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் இ-மெயில் மூலமும், செல்போனில் எஸ்எம்எஸ் செய்தும் சேர்க்கலாம்.
இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.
இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறும்போது. ‘‘வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான விழிப்புணர்வு பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், என்எஸ்எஸ், என்சிசி படையினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் ஈடுபடுத்தப்படுவர். சிறப்பாக பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விருது வழங்கப்படும்’’ என்றார்.
கூடுதல் விவரங்களால் என்ன பயன்?
வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதால் கிடைக்கும் முக்கியமான பயன்கள் வருமாறு:
* வாக்குப்பதிவு தொடர்பான விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்
* முகவரி மாற்றத்தை ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
* வாக்காளரின் தற்போதைய புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடலாம்.
* பூத் சிலிப் ஆன்லைனில் வழங்கப்படும்
* வாக்காளர் விருப்பம் தெரிவிக்காமல் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க முடியாது
* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்காலத்தில் ஏற்படும் புதுமைகளை வாக்காளர்கள் பெற முடியும்
* ஆதார் எண் இணைக்கப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை பின்வரும் வழிகளில் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.
* தமிழக தேர்தல்துறையின் இணையதளம் (www.elections.tn.gov.in) மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்
* தேர்தல் துறையின் இ-மெயில் முகவரிக்கு (ceo@tn.gov.in) தகவல் அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம்
* 51969 என்ற எண்ணுக்கு ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி பதிவு செய்யலாம்.
* 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து பதிவு செய்யலாம்.
* குறிப்பிட்ட படிவத்தில் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை குறிப்பிட்டு ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து தாலுகா அலுவலகங்களில் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பிற்பகல் நேரில் சமர்ப்பிக்கலாம். விரைவில் வீடு வீடாக வருகை தரவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் நேரில் படிவத்தை ஒப்படைக்கலாம்.

No comments:

Post a Comment