Wednesday, October 29, 2014

வளம் தரும் வாஸ்து

பெங்சூயி என்ற மேலைநாட்டு வாஸ்து விஞ்ஞானத்தின் சில துளிகளை தெரிந்து கொண்ட நாம், அவ்வப்போது வாஸ்துவின் பெருமைகளையும் நடைமுறைகளையும் தெரிந்து கொண்டால்தான் நம்ம ஊர் கலாசாரத்தை ஒட்டிய கலையுடன் இணைந்து செயலாற்ற முடியும்.

மதிற்சுவர்

ஒரு மனையின் முழு சக்தியும் நமக்குக் கிடைக்க மதிற்சுவர் உதவி புரிகிறது. வீட்டின் பிரதான வாயிற்கதவின் மேல்பகுதி தெரியும் உயரத்தில் மதிற்சுவர்  அமைய வேண்டும். வாசற்கதவு தெரியாமல் மறைத்தபடி மதிற்சுவர் உயரமாக இருக்கக்கூடாது. இதனால் ‘ச்சீ’ என்னும் நல்ல வாஸ்து சக்தி உள்ளே வருவதும்,  சூரியக்கிரணங்கள் வீட்டில் படுவதும் குறைந்து தீய பலன்களை நுகரும் நிலை ஏற்படும். சிறையில் வாழும் நிலையை ஒத்த சூழ்நிலையை அனுபவிக்க நேரிடும்.மதில் சுவர்களில் சதுர வடிவிலோ, வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ துளைகள் இருக்கலாம்.

எக்காரணம் கொண்டும் மதிற்சுவர் மீது இரும்புக்கம்பிகளைக் கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடாது. இது விஞ்ஞான முறையிலும் இடியை உள்வாங்கி  கட்டிடத்தை சேதப்படுத்துவதோடு, அந்த கட்டிடத்தில் வாழ்வோர் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும். மதிற்சுவர் மூலைகளை வில்போல வளைவாகக் கட்டலாகாது.  சக்தி அந்த வளைவில் வழுக்கிச்சென்று நற்பலனுக்கு பங்கம் ஏற்படும். இதனால் ‘ஷா’  எனப்படும் தீமைச்சக்தி உள்ளே பரவ ஆரம்பிக்கும். சாலைக்கு வெகு  அருகில் வீடு அமைந்துவிட்டால் அதுவும் வடக்கு/கிழக்கு எனில் தரைமட்டத்திற்கு கீழே தொட்டி கட்டி அதிலிருந்து நீரூற்று பீறிடுவதுபோல அமைக்கலாம்.

தெற்கு/மேற்கு எனில் தரையை விட உயரமாக பீடம் உருவாக்கி அதன் மேலிருந்து நீரூற்று பீறிடுமாறு அமைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் சிறப்பான  பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். வீட்டிற்கு அருகில் சாலை வந்து விட்டால், வீட்டிற்குள் செல்லும் பாதையை வளைவாக அமைக்கும்போது நீண்ட தூரம்  இருப்பது போன்ற பிரமையை உருவாக்கி, அதனாலும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். வாகனம் செல்வதற்கான வழி வட்டப் பாதையாக இருக்கும்போது அது  எளிமையாகவும், வசதியாகவும் இருக்கும்.

இதற்கு மத்தியில் சிறு பூக்களை புஷ்பிக்கும் செடிகளையும், புல் தரையையும் பசுமையாக வளர்ப்பது மேலும் சிறப்பான பலனை தரும். அது செயற்கை  புல்வெளியானாலும், நன்மைகளுக்குக் குறைவிருக்காது. பாதைக்கு அருகிலும், பிரதான கதவிற்கு அருகில் ஏதேனும் தடை இருந்தால், அதை உடனே  நீக்கிவிடவும். இவை நன்மை செய்யும் ஓட்டங்களை தடை செய்யக்கூடியவை. குறுகலான, தடையுள்ள பாதை, குடும்பத்தினரின் வளர்ச்சியை வெகுவாக  பாதிக்கும். சமநிலையை ஊசலாட வைக்கும்.

இப்படிப்பட்ட இடங்களில் வெளிச்சம் அதிகம் தரும் விளக்கைப் பொருத்தி, அது கூரையில் எதிரொலிக்கும்படி செய்தால் ‘ச்சீ’ பெருகி குறை நிவர்த்தி  செய்யப்படும். பிரதான கதவிற்கு அருகில் நடைபாதை குறுகலாகவும், போகப்போக அகலமாயும் அமையுமானால் குடும்பத்தினரை அது மேலோங்கச் செய்து  நற்பலன்களை வாரி வழங்கும். அரண்மனை, நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் குடியிருக்கும் வளாகங்களைப் பார்த்தால் இந்த அமைப்புகள் பின்பற்றப்பட்டிருப்பது  தெளிவாகத் தெரியும். நடைபாதையின் அகலம் கதவின் அகலத்தை விட குறைவாக இருக்கக் கூடாது.

இதனால் குறைவான ‘ச்சீ’ வீட்டினுள் நுழைய ஏதுவாகும். எனவே பாதையை அகலப்படுத்துவது நல்லது. அல்லது வண்ணங்களால் ஆன ‘சிம்ஸ்’ ஒன்றைக்  கதவில் கட்டி தொங்கவிட்டு அவ்வப்போது வெளியாகும் நல் ஓசை மூலம் சரிசெய்யலாம். நுழைவாயில் குறுகலாக இருக்கக் கூடாது. இப்படி இருந்தால், அருகில்  கண்ணாடிகளை பொருத்தி நுழைவாயிலை பெரிதாக்கிக் காட்டலாம். ஆனாலும் வெயில்பட்டு எதிரொளிக்காத வண்ணம் கண்ணாடியை நிலை நிறுத்தவேண்டியது  அவசியம். வாசற்படி ஆழ்ந்த வண்ணத்திலும், அருகிலுள்ள மதில் சுவர்கள் இளம் வண்ணத்திலும் வேறுபாட்டுடன் காணப்பட வேண்டும். ஒரே வண்ணத்தில்  இருப்பது ‘ச்சீ’யை அதிகப்படுத்த வழி இன்றி முடங்கும் நிலை உருவாகும்.

துளசி மாடம்

கிழக்கில் துளசியை தரைமட்டத்தில் வைத்தால் பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து அங்கே துளசி மாடத்தை  வைத்தாலும் நற்பலனே. ஆனால், துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது. வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும் மரங்களை  வைத்தால் வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய  மரங்களை நடாமல் இருப்பதே மேலான பலனைத் தரும். கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை வளர்க்கக்கூடாது.

வட்ட வடிவ இலை கொண்ட மரங்கள் சிறப்பானவை. செயற்கை முறையில் வளர்ச்சி குன்றிய குற்று மரங்கள் அதாவது, போன்சாய் போன்ற அலங்கார மரம்  வளர்ப்பது நல்லதல்ல. இதை தவிர்க்க வேண்டும். நறுமணம் கொண்ட செடி, மரங்கள் பவளமல்லி, மந்தாரை போன்றவற்றை பராமரிப்பது விருட்ச வேதை  எனப்படும் நற்பலன்களை அளிக்க வல்லவை. வாசற்படிக்கு நேர் முன்னால் உள்ள மரத்தால் நம் சந்ததியினர் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அந்த இடத்தில் மரக்  கன்று நடுவதோ, ஏற்கெனவே இருக்கும் மரத்தை வளர்ப்பதோ கூடாது; அதனை அப்புறப்படுத்துவது நல்லது.

முள் உள்ள செடி, மரங்களை வளர்த்தால் எதிரிகளால் தொல்லையும் அதனால் நஷ்டமும் ஏற்படும், மனதில் பயம் உருவாகும், தோல்விகளை சந்திக்க  வேண்டியிருக்கும். முக்கியமாக அயலார் பார்வையில் படும்படி இவை வீட்டின் முன்பகுதியில் இருக்கலாகாது. புளிய மரம், வில்வம், எலுமிச்சை, இலந்தை  மரங்கள் புகழைக் குறைப்பதுடன் மாளாத கஷ்டத்தை வரவழைக்கும். கழுகு எனப்படும் பாக்கு மரமும் வீட்டுள் நல்லதல்ல.

வாஸ்து பாஸ்கர்

No comments:

Post a Comment