Friday, February 20, 2015

மிக இளம் வயதுத் திருமணம், மணப்பெண், குழந்தை, அம்மா

http://en.wikipedia.org/wiki/Guatemala


மிக இளம் வயதுத் திருமணம்
புழுதி படிந்த சாலைகளைக் கொண்ட கிராமப் பகுதிகளிலிருந்து துணைக்கு அம்மாவையோ மாமியாரையோ அழைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு  வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நிதியம் என்ற அமைப்பும், ‘திருமணத்துக்கு மிகவும் இளையவர்கள் - கவுதமாலா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பும் இணைந்து இத்தகைய தாய்மார்களின் நலனுக்கான களப் பணியில் இறங்கியிருக்கின்றன. அவர்களின் சார்பில் நானும் சென்று இளம் பெண்கள் பலரைப் பேட்டி கண்டேன்.
மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு கர்ப்பவதியாகும் பெண்கள் அதிகமுள்ள நாடுகள் என்ற வரிசையில், நான் சுற்றிப்பார்க்கும் பத்தாவது நாடு இது. 2003 முதல் இப்படிப் பேட்டி கண்டு காணொலிக் காட்சிகளாக ஆவணப்படுத்திவருகிறேன். முதலில் ஆப்கானிஸ்தானில்தான் இப்படிச் சிலரைப் பார்த்தேன். 18 வயதுக்கு முன்னாலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போதும் இருக்கிறது. வளரும் நாடுகளின் கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. கவுதமாலாவின் கிராமங்களில் 20 முதல் 24 வயது வரையிலான பெண்களைப் பேட்டி கண்டதில் அவர்களில் 53% பேர் 18 வயதுக்கு முன்னரும், 13% பேர் 15 வயதுக்கு முன்னரும் திருமணம் செய்துகொண்டவர்கள் என்று தெரியவந்தது.
உயிருக்கே ஆபத்து
மிக இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள் அனைத்தும் இவர்களுக்கும் ஏற்படுகின்றன. முதலில் இவர்களுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. பள்ளியிறுதி வகுப்பைக்கூடத் தொட முடிவதில்லை. ஏராளமானோர் ஆரம்பக் கல்வியுடன் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். மகப்பேறு என்பது உயிருக்கே ஆபத்தானதாகப் பலருக்கு மாறிவிடுகிறது. ஊட்டச்சத்துக் குறைவு, போதிய மருத்துவக் கவனிப்பு இல்லாமை போன்றவையும் அவர்களை வாட்டுகின்றன. இந்தப் பெண்கள் கருத்தரித்தாலும் அவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதும், மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதும் வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுமதியைப் பொருத்துதான் இருக்கிறது. பெரும்பாலான பெரியவர்கள் (ஆண்கள்), பெண் என்பவள் வீட்டு வேலையைச் செய்வதற்கும் கணவனுக்கு சுகம் கொடுப்பதற்காகவும்தான் என்று கருதுகின்றனர். இயல்பாக உடலில் இருக்கும் சக்தியே போதும், மருத்துவ ஆலோசனையோ மருந்துகளோ அவசியம் இல்லை என்று தடுத்துவிடுகின்றனர். இதனால் தாயும் சேயும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளுக்குக் கிராமங்களிலிருந்து செல்ல மணிக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. பிரசவத்தின்போது தாய் இறப்பது கவுதமாலாவில் 1 லட்சம் குழந்தைகளுக்கு 172 என்ற அளவிலும், சிசு இறப்பு ஆயிரத்துக்கு 40 என்ற வீதத்திலும் இருக்கிறது.
குழந்தை அதிசயங்கள்
மருத்துவமனைக்கு நான் சென்றபோது, பிரசவத்துக்குப் பிறகு குழந்தைகள் கவனிப்புப் பிரிவில் நான்கு சிசுக்களே இருந்தன. அந்த நான்கும் 14 வயதுத் தாய்மார்களுக்குப் பிறந்தவை. ‘‘இந்தக் குழந்தைகளை நாங்கள் அதிசயங்கள் என்றே அழைக்கிறோம். ஏனென்றால், ஒன்றரை பவுண்டு எடைகூட இல்லை ஒவ்வொன்றும்’’ என்கிறார் டாக்டர் டேனியல் ஆல்வாரெஸ். இவ்வளவு சிறிய குழந்தைக்கு சிகிச்சை தர எங்களிடம் கருவிகள்கூட இல்லை என்கிறார் அவர். இந்த சிசுக்களை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிறகுதான் இந்த இளம் தாய்மார்களுக்குப் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. இந்த இளம் தாய்களை அவர்களின் கணவர்கள் அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகின்றனர். குடும்பத்தைக் காப்பாற்றச் சம்பாதிப்பது அல்லது வீட்டுவேலைகளுக்குப் போவது என்ற பொறுப்புடன் சிசுக்களை வளர்க்கும் கடமையும் சேர்ந்துகொள்கிறது.
அராஸ்லி என்ற பெண்ணின் துயரம் இன்னும் கடுமையானது. அவர் 4 மாதக் கர்ப்பம் என்று தெரிந்ததும் அவருடைய கணவன் கோபப்பட்டு, இது என்னுடைய குழந்தை அல்ல, இனி நான் உன்னோடு வாழ மாட்டேன் என்று கூறிச் சென்றுவிட்டான். 15 வயதாகும் அவர் இப்போது தனியாளாக அந்தக் குழந்தையையும் சேர்த்துப் பார்த்துக்கொள்கிறார். இந்த இளம் பெண்களுக்குக் குழந்தை தொடர்ந்து அழுதால், அதன் காரணம் என்ன என்றுகூடத் தெரியாத நிலைதான் காணப்படுகிறது.
“நான் கர்ப்பமாக இருந்தபோது என் கணவர் வந்துகூடப் பார்க்கவில்லை. செலவுக்கும் பணம் தரவில்லை. எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இப்போது 1 வயதாகிறது. நான்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது” என்று கண்ணீருடன் கூறினார். இவர் மட்டுமல்ல, அனேக இளம் பெண்கள் இப்படித்தான் குழந்தையும் கவலையுமாக இருக்கிறார்கள்.
2015-ல் மட்டும் 5.5 லட்சம் கவுதமாலா பெண்கள் தங்களுடைய 18 வயதுக்கு முன்னாலேயே திருமணம் செய்துகொண்டுவிடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. சராசரியாகத் தினம் 1,500 பெண்களுக்குத் திருமணம் நடக்கிறது. இது ஒரு தொடர்கதை!

No comments:

Post a Comment