சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நிற்கும் அந்த பெரிய வாகனத்தில் ஏறி, சென்னையின் மெரினா பீச் வழியாக கடலில் இறங்கி, தமிழகத் தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை நீங்கள் மிக எளிதாக கடலில் பயணம் செய்ய முடியும்.
உங்களது கார், பைக், மூட்டை, முடிச்சுகளையும் உங்களுடன் எடுத்துச் செல்லலாம். அந்த வாகனத்தின் அடிப்பாகத்தில் சரக்குகளை வைத்துவிட்டு, மேற் பரப்பில் இருக்கையில் அமர்ந்தபடி ஏகாந்தமாக கடலை ரசித்தபடி பயணிக்கலாம். நீரிலும் நிலத்திலும் செல்லும் 'ஹோவர் கிராஃப்ட்ஸ்'தான் அந்த வாகனங்கள். இப்படியான ஒரு திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார் தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னாள் அறங்காவலரான நந்திவர்மன்.
சமீபத்தில் 101 நதிகள் நீர் வழிப்பாதைகளில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமரின் ‘ஜல மார்க் யோஜனா’ என்கிற புதிய திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்நாட்டு நீர் வழி ஆணையம், தேசிய நீர் வழி திட்டத்தின்கீழ், பக்கிங் ஹாம் தெற்கு கால்வாய் திட்டத் தில் சோழிங்கநல்லூர் - கல்பாக்கம் நீர்வழிப் பாதை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் நந்திவர்மன் கூறுகையில், “இந்தியா 7,517 கி.மீ. நீளமான கடற் கரையை கொண்டது. இந்த இயற்கை அமைப்பை நாம் திறம்பட பயன்படுத்த முடியும். சாலை போக்குவரத்துக்கு ஒரு கி.மீட்ட ருக்கு ரூ. 1.50 செலவு ஆகிறது. அதுவே இருப்புப் பாதை போக்கு வரத்துக்கு ஒரு ரூபாய் செல வாகிறது. ஆனால், நீர்வழிப் போக்கு வரத்துக்கு 50 பைசா மட்டுமே செலவாகும். சாலைகளில் போக்கு வரத்து நெரிசலையும், விபத்துகளை யும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
தற்போது அறிவிக்கப்பட்ட பிரத மரின் ‘ஜல மார்க் யோஜனா’ திட்டம் என்பது புதியது அல்ல. ‘சாகர் மாலா’ என்ற பெயரில் 1999 - 2001-ம் ஆண்டு காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் அறிவிக்கப்பட்ட திட்டமே சில மாற்றங்களுடன் மீண்டும் அறிவிக்கப் பட்டுள்ளது. அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது நான் தூத்துக் குடி துறைமுகத்தின் அறங்காவல ராக இருந்தேன்.
அப்போதும் மேற்கண்ட சென்னை - கன்னியாகுமரி கடல் நீர் வழிப் பாதை திட்டம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினேன். அப்போது திட்டக்குழு உறுப்பினராக இருந்த டாக்டர் எஸ்.பி.குப்தா மேற் கண்ட திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் கொண்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் சாகர் மாலா திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
அரபிக் கடலில் குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாட கம், கேரளம் தொடங்கி வங்காள விரிகுடாவில் தமிழகம், ஆந்தி ரம், ஒடிசா, மேற்கு வங்கம் வரையில் இதுபோன்ற உள்ளூர் போக்குவரத்தை நடைமுறைப் படுத்தலாம். இந்த கடற்கரைகளை ஓட்டி 50 கி.மீட்டர் தொலைவுக்குள் மட்டும் 25 கோடி மக்கள் வசிக் கின்றனர். 3,600 மீன் பிடி கிராமங்கள் இருக்கின்றன. எனவே, மிகவும் லாபம் தரும் திட்டமாகவே இது அமையும். சுற்றுலா வளர்ச்சி என்கிற நோக்கத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும்.
தனியார் மற்றும் அரசு சார்பில் ஹோவர் கிராஃப்டுகளை சரக்கு மற்றும் பயணிகள் போக்கு வரத்துக்காக பயன்படுத்தலாம். இங்கிலீஷ் கால்வாயில் 1994ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே சுரங்கப் பாதை போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்படும் முன்பு ஹோவர் கிராஃப்ட்களே பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு பயன்பட்டன. உலகம் முழுவதும் கப்பல் மற்றும் படகுகளின் விலையை விட குறைவான விலைகளில் ஹோவர் கிராஃப்ட்கள் கிடைக் கின்றன” என்றார்.
எத்தனை மணி நேரம் பயணம்?
இதுகுறித்து கடல் ஆய்வாளரான ஒரிசா பாலுவிடம் கேட்டபோது, “சென்னை - கன்னியாகுமரி 338 கடல் (நாட்டிக்கல்) மைல் தொலைவு கொண்டது. இதை 8 மணி நேரத்தில் கடக்கலாம். ஆனால், சாலை வழியாக சென்னை - கன்னியாகுமரிக்கு சுமார் 700 கி.மீட்டரை கடக்க 12 மணி நேரம் ஆகும். கடல் நீர் வழித் தடத்தை உருவாக்குவதன் மூலம் தமிழர்களின் அழிந்துவரும் பாரம் பரிய கடல் சார் தொழிலான பாய் மரப் படகு (தோணி) தொழிலையும் மீட்டெடுக்கலாம்” என்றார்.