Sunday, May 25, 2014

குறிகேட்டா கல்யாணம்!

டிச. திருச்சானூர் தேர் திருவிழா

சிலருக்கு, என்ன தான் பரிகாரம் செய்தாலும், திருமணத்தில் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. அவர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.
திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன், திருமால், ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பரம ஏழையாக அவதாரம் செய்தார். ராஜா வீட்டுப் பெண்ணை, ஏழைக்கு, எப்படி திருமணம் செய்து வைப்பர்! எனவே, குறத்தி வேடமிட்டு, ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அரண்மனைக்குள் நுழைந்தார்.இங்கிருந்து தான், திருமணத்தடை உள்ளவர்கள், கதையை கவனமாக படிக்க வேண்டும். அந்தக் குறத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து, திருமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, விண்ணில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும் அசந்து போய் விட்டனர். ஆகாசராஜனும், அவன் மனைவியும், குறத்தியைப் பார்த்தனர். அவளது பேரழகும், முகத்தில் இருந்த பிரகாசமும், அவர்களை அறியாமலேயே, அவளை, அரண்மனைக்குள் அழைக்க வைத்தது. தங்களுடன் அழைத்துச் சென்று, தங்கள் மகள் பத்மாவதி முன் உட்கார வைத்தனர்.'குறத்தியே... உனக்கு எந்த ஊர்?' என்று கேட்டாள் பத்மாவதி.
'நான் முத்துமலையில் வசித்திருக்கிறேன்; குடகுமலையில் வாழ்ந்திருக்கிறேன்...' என்று, சொல்லிக்கொண்டே போனவள், 'இன்று, இந்த திருமலைக்கு வந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா மலைகளும், என் மலை தான்...' என்றாள். 'ஓகோ... அப்படியானால், நீ குறி சொல்வாயா?'
'என்ன... அப்படிகேட்டு விட்டீர்கள்... சிவனும், பார்வதியும் வசிக்கும் கைலாய மலைக்கு சென்று, அவர்களுக்கும் குறி சொல்லியிருக்கிறேன்; இந்திரலோகம் சென்று, தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் குறி சொல்லியிருக்கிறேன்...' என்று, பிரதாபித்தாள் குறத்தி. 'உங்கள் நாட்டில் எல்லாரும் நலமா?' என்று, கேட்டாள் பத்மாவதி. 'இளவரசி... எங்கள் நாட்டில் எல்லாரும் நண்பர்களே... பகை என்ற சொல்லே அங்குள்ளவர்களுக்கு தெரியாது. புலியும், பசுவும் ஒரே ஓடையில் தண்ணீர் குடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் ஊரில், வாழை, கிழக்கு நோக்கி குலை தள்ளும்; பலாப்பழமோ மேற்கு நோக்கி காய்க்கும்...' என்றாள். இவ்வாறு நடப்பது, ஒரு நாட்டிலும், வீட்டிலும், மங்கல நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள். பின், பத்மாவதியின் கையைப் பார்த்த குறத்தி, 'எந்தக் கை, இப்போது, உன் கையைப் பிடித்திருக் கிறதோ, அந்தக் கைக்கு நீ சொந்தமாவாய்...' என்றாள்.பத்மாவதி, ஏதும் புரியாமல், குறத்தியைப் பார்க்க, 'இளவரசி... உன் மனதுக்குப் பிடித்தவனே, உனக்கு கணவன் ஆவான்...' என்றாள்.பத்மாவதிக்கு, நிம்மதிப் பெருமூச்சு.
ஆம்... அவளுக்கு, உலகையே காக்கும் அந்தக் கோவிந்தனே தன் மணாளன் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறி, பத்மாவதி தாயார் திருச்சானுாரில் குடியிருந்து, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள். கார்த்திகை மாதத்தில், அவளுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.  அவள், 'அலர்மேல் மங்கை' எனப்படுகிறாள். சொல் வழக்கில், அலமேலு என்பர். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்ன இந்தக்கதையைப் படிப்பவர்கள், அன்னையின் தேரோட்டத்தை தரிசித்து வாருங்கள். விரைவில், திருமணம் நடக்க, அந்த அலர்மேல் மங்கை அருள் செய்வாள். 

No comments:

Post a Comment