Saturday, May 17, 2014

ஆன்மீகம்

 துளசியின் மகிமை துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுளும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும். துளசிக்கு தினமும் சந்தனம், குங்குமம் இட்டு விளக்கேற்றியபின், பால் நைவேத்யம் செய்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் துளசியை பூஜிக்க குறைந்தபட்சம் மூன்று மாதமாவது வளர்ந்த செடியாக இருப்பது அவசியம்.

கிண்ணத்தில் சோறு வாயில் மந்திரம்!
அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது பலி மந்திரம் சொல்லி பூஜையை முடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். திருமாலை வழிபடுபவர்கள் சுவாமிக்கு நைவேத்யம் செய்த அன்னத்தை சிறிது கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன:!மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம்ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா:! இதை சொல்ல முடியாதவர்கள், மகாபலி, விபீஷணன், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனன் முதலான விஷ்ணு பக்தர்கள் அனைவரும் இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார்களாக என்று சொல்ல வேண்டும். சிவபூஜை செய்பவர்கள்,பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதயமஹாதேவ ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹணந்து ஸாம்பவா: என்று சொல்ல வேண்டும். முடியாதவர்கள் பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி மகரிஷி முதலான சிவபக்தர்கள் இந்த அன்னத்தை விருப்பத்துடன் ஏற்க வேண்டும் என சொல்ல வேண்டும். இந்த அன்னத்தை காகத்திற்கு இடுவது அவசியம்.

60ம் கல்யாணம் அவசியமா?
சவுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 தொடங்கும் நாளில், காலயவனன், ஸுதூம்ரன் என்னும் துஷ்ட தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலுவிழக்கச் செய்கின்றனர். இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பவர்கள் மிருத்யுஞ்ஜயன், மார்க்கண்டேயர் போன்ற மனித தெய்வங்கள் ஆவர். இவர்களுக்கு பூஜை செய்து சாந்தி பரிகாரம் செய்வதே சஷ்டியப்த பூர்த்தியாகும். இவர்களின் அனுக்கிரகத்தால் ஆயுள் அதிகரிக்கும். ஒருவர் பிறக்கும்போது, வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால், இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

பிடிச்ச பாத்திரம்! கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது நைவேத்யமாக தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டில் பூஜை நடத்தும் போது அவரவர் விருப்பம் போல பழவகைகள், பொங்கல் என நைவேத்யம் படைத்து வழிபடலாம். இவற்றை படைக்கும் பாத்திரம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஹைரண்யம் ராஜதம் காம்ஸ்யம் தாம்ரம் ம்ருந்மயமேவ சபாலாசம் பத்மபத்ரம் வா பாத்ரம் விஷ்ணோ ரதிப்ரியம் என்கிறது பரசுராம கல்ப சூத்ரம்.தங்கம், வெள்ளி,வெண்கலம், தாமிரம், மண் இவற்றால் ஆன பாத்திரத்திலோ அல்லது தாமரை இலையிலோ நைவேத்யம் படைக்க வேண்டும். இவற்றில் வைத்தால் விஷ்ணு அந்த பிரசாதங்களை பிரியத்தோடு ஏற்றுக் கொள்வதாக இந்த ஸ்லோகம் கூறுகிறது

கோயில் இல்லாத இருவர்!

விஷ்ணுவின் பிள்ளைகளான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள்  லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித்தாமரையில் பிறந்ததால்  கமலஜர் என்று பிரம்மாவுக்கு பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவனுக்கு மனசிஜன் என்று பெயர். இந்த  இருவரும் இல்லா விட்டால், உயிர்கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக்கு காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற்கான உடலைக் கொடுப்பவர் பிரம்மா. இப்படி, உயிர்களை, பிறவிப்பிணியில் சிக்கித் தத்தளிக்க செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய் விட்டது, என்று கூறுகிறார் காஞ்சிப்பெரியவர்.


அக்னி நட்சத்திரத்தில் எந்தச் செயல்களைச் செய்யலாம்
அக்னி நட்சத்திர நாட்களில் சுபசெயல்களைச் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சில சுபசெயல்களை நடத்தலாம் என்கின்றன நட்சத்திரங்கள். திருமணம், சீமந்தம், சத்திரங்கள் கட்டுதல், உபநயனம், பரிகார வேள்விகள் ஆகியவற்றைச் செய்யலாம். ஆனால் வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதைத் தவிர்க்கலாம். தோட்டம், மலர்ச் செடிகள், குளங்கள், குட்டைகள் வெட்டுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு செய்தல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாக்குதல் ஆகியவை வேண்டாம். அக்னி நட்சத்திரத்துக்கு முன்னர் தொடங்கிய பணிகளை இக்காலகட்டத்தில் செய்யலாம். புதிய வாகனங்கள் பயிற்சி, குருவிடம் தீட்சை ஆகியவற்றை இக்காலகட்டத்தில் செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment