Monday, May 12, 2014

தமிழர்கள் எந்த அளவுக்கு யோக்கியஸ்தர்கள்?

ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சித் தலைவரின் குடும்பம் ஆசிய அளவில் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக மாறியிருப்பதையும்; ஒரு கட்சித் தலைவியின் காலில் அத்தனை அமைச்சர்களும், பார்க்கும் இடங்களிளெல்லாம் படபடவென்று விழுவதையும் உலகம் எப்படிப் பார்க்கும்? தமிழ்நாட்டிலிருந்து மந்திரியானவர்கள் யாருக்கும் நல்ல பெயர் இல்லை. கொஞ்சநஞ்சம் நம்மாட்கள் ஏதாவது துறை சார்ந்து திட்டங்கள் கொண்டுவந்தால்கூட அதைத் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய்விடுகிறார்கள்; நாடு முழுமைக்கும் இவர்கள் சிந்திப்பது இல்லை என்று நினைக்கிறார்கள்."
"அரசியல்வாதிகள்தான் என்று இல்லை; எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலை. தமிழர்களிடம் கட்டுமானப் பணியை நம்பிக் கொடுக்கவே அஞ்சுவார்கள். ஒரு பஞ்சாபியிடம் வீட்டு வேலையைக் கொடுத்தால், கூலியோடு வாங்கும் சாமான்களில் கிடைக்கும் கமிஷன் அடிப்பார்; தமிழரிடம் வேலையைக் கொடுத்தால் கூலி, கமிஷன் தவிர வாங்கும் பொருட்களிலும் போலியைக் கலப்பார்; வேலையையும் இழுத்துவிடுவார் என்பார்கள். ஒரு அசாமியத் தொழிலாளியிடம் வேலையைச் சொல்லிவிட்டு சாயங்காலம் நீங்கள் சென்றால், முழு வேலையும் முடிந்திருக்கும்; நம்மாட்களுக்கோ வேலை கொடுப்பவர்கூடவே நின்றாலும் பாதி வேலை மிச்சம் இருக்கும் என்பார்கள். முடிந்த மட்டும் காசு பார்ப்பதை நம்மாட்கள் சாமர்த்தியமாக நினைக் கிறார்கள். மற்றவர்களுக்கு அது ஏமாற்றுதானே? தமிழ் நாட்டுக்கு இங்கிருந்து கூலி வேலைக்கு வரும் வட மாநிலத் தொழிலாளிகளை நம்மாட்கள் எப்படி நடத்து கிறார்கள்? கொத்தடிமைகளைப் போலத்தானே நடத்துகிறார்கள்! மும்பையிலும் கொல்கத்தாவிலும் இருபது இருபத்தைந்து ரூபாய்க்கும் நாம் டாக்ஸியிலேயே ஏறலாம். சென்னையில் ஆட்டோக்காரர்கள் தொடங்குவதே நாற்பது ஐம்பது ரூபாயில்தான். இதையெல்லாம் பார்க்கும் ஒரு வெளியூர்க்காரருக்குத் தமிழர்கள் மீது என்ன சித்திரம் வரும்? நீங்கள் இப்போதுதானே இந்தியாவைச் சுற்ற ஆரம்பித்திருக்கிறீர்கள்? முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டுப் பாருங்கள். நம் ஆட்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு அசிங்கமாகப் பேர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவரும்."
இது வெறும் சோற்றுப் பிரச்சினையல்ல
நண்பர்கள் சொன்னதில் உள்ள உண்மை வெகு விரைவிலேயே எனக்கு நேரடியாக உரைக்கத் தொடங்கியது. பல விஷயங்கள். முக்கியமாக, சாப்பாட்டு விஷயத்தை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்பவர்களுக்கு நம்மூர் உணவு கிடைப்பது இப்போது சிரமம் அல்ல. அநேகமாக எல்லாப் பெருநகரங்களிலும் நம்மூர் உணவு கிடைக்கிறது. ஆனால், அதற்கு நம்மாட்கள் நிர்ணயிக்கும் விலை இருக்கிறதே… கொஞ்சமும் நியாயம் அற்றது.
அது டெல்லியோ, கொல்கத்தாவோ, மும்பையோ… எங்கு சென்றாலும் நூறு ரூபாய் இருந்தால் நல்ல பஞ்சாபி அல்லது குஜராத்தி அல்லது மராத்தி சாப்பாடு வயிறு நிறையச் சாப்பிட்டுவிடலாம். ஆனால், தமிழ் உணவு சாப்பிட்டால், பாதி வயிற்றுக்குத்தான் அது அடங்கும். ஒரு கொடுமையான உதாரணம், டெல்லியில் உள்ள நம்மூர் பிரபல பவன் உணவகச் சாப்பாடு. உடன் வந்த நண்பருக்குச் சின்னக் கிண்ணத் தில் வைக்கப்பட்ட கூட்டு போதவில்லை. கொஞ்சம் கூட்டு கிடைக்குமா என்று கேட்டார். கிடைக்கும்; ஆனால், அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள். சாதாரணச் சாப்பாடுதான். விலை எவ்வளவு தெரியுமா? ரூ. 210.
நான் இங்கு நம்மூர் சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, தென்னிந்தியச் சாப்பாடு என்று குறிப்பிடாமல், தமிழ்ச் சாப்பாடு என்று குறிப்பிடக் காரணம் இருக்கிறது. நம்மாட்கள் கடையில் சாப்பிடும்போதுதான் இப்படி யானை விலை, குதிரை விலை. ஆந்திர மெஸ்களில் இந்த நிலை இல்லை. நியாயமாக வாங்கிக்கொண்டு, வயிறும் மனதும் நிறையப் பரிமாறு கிறார்கள். உடுப்பி உணவகங்களிலும் இதே நிலைதான்.
இந்தப் பயணத்தில் தமிழ்ச் சாப்பாடு கிடைத்த இடங்களில் ஒரே மரியாதைக்குரிய உணவகம் மும்பை மாதுங்கா பகுதியில் இருக்கும் ‘மணீஸ் லஞ்ச் ஹோம்'. நியாயமான விலை, நல்ல தரம், ருசிக்குப் பேர்போன இந்த உணவகம் 1937-ல் தொடங்கப்பட்டது; சாப்பிடுவது சாப்பாடோ, தோசையோ, பொங்கலோ எதுவானாலும் வயிறாரப் பரிமாறு கிறார்கள். கடை நிர்வாகி கே.எஸ். நாராயணசாமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். "ஒருகாலத்தில் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதே பாவம் என்பார்கள். ஏதோ காலச் சூழல். இதுவும் ஒரு தொழிலாகிவிட்டது. காசையும் வாங்கிக் கொண்டு வயிற்றையும் நிரப்பாமல் அனுப்புவது மகா பாவம் இல்லையா? எனக்கே சொல்லச் சங்கடமாக இருக்கிறது. நம்மாட்கள் இங்கும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன் இப்படி மாறினார்கள் என்று புரியவில்லை" என்பவர், "உண்மையில் கடவுள் நமக்கு வேலை கொடுப்பவர் மூலமாகத் தான் நம்மை வாழவைக்கிறார். அவர்களை ஏமாற்றிவிட்டு எந்தத் தர்மம் பேசுவதிலும் புண்ணியம் இல்லை" என்கிறார்.
நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை விடவும் முக்கியம் அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது. எல்லாச் சமூகங்களிலுமே நியாயவான்களும் அநியாயக்காரர்களும் அடங்கியிருக் கிறார்கள். பணத்துக்காகப் பண்பு மாறுவது எல்லாச் சமூகங்களிலுமே நடக்கிறது. ஆனால் இந்த நியாயங்கள் நம் தவறுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவுமா?

http://tamil.thehindu.com/opinion/columns/08/05-2014

No comments:

Post a Comment