Saturday, August 9, 2014

மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஜெயிக்க வைக்கும் தாசில்தார்

இவரது சேவை எமக்குத் தேவை’ மதுரை தாசில்தார் பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் இப்படி பாராட்டுக் கடிதம் கொடுத் திருக்கிறார்கள். தாசில்தாரை பாராட்டி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் இப்படிக் கடிதம் கொடுக்கக் காரணம்தான் என்ன?
மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் 1989-ல் பணியில் சேர்ந்தவர் பாலாஜி. படிப்படியாக உயர்ந்து தாசில்தாரானார். எம்.எஸ்.சி., பி.எட்., மட்டுமல்லாது 14 டிகிரிகளை வாங்கி இருக் கிறார். வருவாய்த்துறை பணியில் சேர்வதற்கு முன்பாக புதுக் கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார் பாலாஜி.
மதுரையில் ராஜாஜியால் தொடங்கப்பட்ட சேவாலயத்தில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்ற மாணவர்கள் 175 பேர் தங்கிப் படிக்கிறார்கள். தொடக்கத்தில் இவர்கள்தான் பாலாஜியின் இலக்கு. மாலை 5 மணிக்கு பணி முடிந்ததும் நேராக சேவா லயம் வந்துவிடும் பாலாஜி, அந்த மாணவர்களுக்கு ஆங்கிலம்,
கணிதம் உள்ளிட்ட பாடங்களையும் ஒழுக்கத்தையும் போதித்தார். இரவு ஏழு மணிக்குப் பிறகு ஒன்பது மணிவரை, அன்னை சத்யா ஆதரவற்றோர் மகளிர் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு வகுப்பு எடுத்துவிட்டு அதன் பிறகுதான் வீடு திரும்புவார்.
ஒருகட்டத்தில், மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வார இறுதி நாட்களில் தாமாகவே போய் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார் பாலாஜி. அந்த ஆண்டு மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் ஏழு சதவீதம் அதிகரித்தது.
ஐந்து பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டின. 2011-ல் பத்தாம் வகுப்பில் தேற மாட்டார்கள் என்று சொல்லப்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 132 பேர் பாலாஜியிடம் ஒப்படைக் கப்பட்டார்கள். அவர்களுக்கு மட்டும் 20 நாட்கள் சிறப்பு வகுப்புகள் எடுத்து அதில் 76 பேரை தேர்வு பெறவைத்தார் பாலாஜி. பின்னர் நடந்தவைகளை அவரே சொல்கிறார்....
‘‘மதுரையில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலகத் திலும் பணியாற்றியதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலருக்கு என்னை தெரியும். அவர்கள்தான் என்னைப் பற்றி சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அதன்பேரில் மேயரின் விருப்பப்படி, 2012-ல் சென்னை மாநகராட்சி உயர் நிலைப் பள்ளிகளுக்கு நான் வந்து வகுப்புகளை எடுக்க ஆரம்பித்ததும் அவை 92 சதவீத தேர்ச்சியை எட்டின. 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டின.
2013-ல் ஸ்டேட் லெவல் ரேங்க் வரவேண்டும் என்று சைதாப்பேட்டையில் ஒரு மையத்தில் 20 நாட்கள் 32 மாணவர்களை தங்க வைத்து கோச்சிங் கொடுத்தேன். அதில் ஒரு மாணவன் 496 மதிப்பெண் எடுத்தான்.
இலக்கை எட்ட சென்னையில் நான்கு இடங்களில் தனியாக பயிற்சி மையங்கள் அமைத்து பாடம் நடத்துகிறேன். நிச்சயம் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவரையாவது மாநில அளவிலான ரேங்க் எடுக்க வைப்பேன்’’ தன்னம்பிக்கையுடன் சொன்னார் பாலாஜி. (தொடர்புக்கு: 9445190148)

No comments:

Post a Comment