Friday, August 29, 2014

புண்ணிய மோட்சபுரி

க்ஷிப்ரா நதிக்கரையில் வீற்றிருக்கும் இந்தச் சிறிய நகரம் அங்கு நடக்கும் தீப ஆராதனையில், மணியோசையில், அந்த ஆன்மீக அழைப்பில் விழித்துக் கொள்கிறது. அந்த மணியோசை எல்லோரையும் இணைக்கும் மொழியாக உள்ளது. நம் நாட்டின் புண்ணியத் தலங்களில் உஜ்ஜைனும் ஒன்று. தென் திசை நோக்கி இருக்கும் (தட்சிணாமுகி) மகாகாளேஷ்வர் கோவில் கொண்ட ஜோதிர்லிங்கம் இது ஒன்றுதான். இதை முக்தி ஸ்தலம் என்றும் அழைப்பர்.
ஸ்கந்த புராணம் இதன் புகழைப் பாடுகிறது.  சொர்க்கம் என்பது உஜ்ஜைனியின் மேம்பட்ட தோற்றம்தான் என்றால் அது வசீகரமாகத்தான் இருக்கும்” என்று மகாகவி காளிதாசர் கூறியிருக்கிறார்.
கங்கைக்கு நிகரான நதி
இந்த இடத்தில்தான் பூமியின் முதல் தீர்க்க ரேகை கடந்து செல்கிறது. கடக ரேகை உஜ்ஜைன் வழியாகச் சென்று இந்துப் பஞ்சாங்கத்தின் கணக்கீடுகளுக்கு அடிப்படையாக உள்ளது. கங்கைக்கு நிகராகக் கருதப்படும் இந்த க்ஷிப்ரா நதியின் கரையில்தான் கும்பமேளா 12 வருடத்திற்கு ஒரு முறை நடை பெறுகிறது. சிம்ஹச்த மகாபர்வா என்றழைக்கப்படும் இந்த விழா சித்திரை மாதம் பௌர்ணமி அன்று தொடங்கி வைகாசி மாதம் பௌர்ணமி வரை நடைபெறும். இந்தத் தலத்தில் நாம் காண வேண்டிய முதல் இடம் மகாகாளேஸ்வரர் கோவில்தான். புராணங்களின்படி துஷாணன் என்ற அரக்கன் இந்த புனிதத் தலமான அவந்தியைச் சித்திரவதை செய்தான். சிவபெருமான் மண்ணிலிருந்து தோன்றி அவனை வதம் செய்து , பின் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே மகாகாளேஸ்வரராகக் கோவில் கொண்டார். அது ஜ்யோதிர்லிங்கமாகவும் உருப்பெற்றது.இந்தக் கோவில் ஒரு ஏரிக்கரையில் மிகப் பெரிய பிரகாரத்தில் சுவர்கள் சூழ அமைந் துள்ளது. கோவிலின் ஐந்து நிலைகளில் ஒன்று பூமிக்கடியில் உள்ளது. செப்பு தீபங்கள் வழி காட்டுகின்றன. இந்த லிங்கம் தென் திசை நோக்குவதால் தாந்த்ரிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கோடிதீர்த்தம் மிகவும் சிறப்பானதாகும். கணேசர், பார்வதி, கார்த்திகேயர் சிலைகள் கருவறையைச் சூழ்ந்துள்ளன.கர்ப்பக்கிரகத்திலிருக்கும் மத்தியக் கூரை வெள்ளியிலான 100 கிலோ எடையுள்ள ருத்ர யந்திரமாகும் லிங்கத்திற்கு மேலிருக்கும் ஜலதாரியும் வெள்ளியிலானது.
பஸ்ம ஆரத்தி
கோவிலுக்கு நடுவில் லிங்க அபிஷேகத்திற்காகக் குளம் வெட்டப்பட்டுள்ளது. விடியற்காலையில் (4 மணி) நடைபெறும் பஸ்ம ஆரத்தி மிகவும் விசேஷம். முன்பெல்லாம் இடுகாட்டிலிருந்து கொண்டுவந்த சூடான சாம்பல் பூசப்பட்டது.
ஆனால் இப்போது கோவில் விதிகள் மாறி விபூதி பூசப்படுகிறது. இந்த உடல் இறுதியில் சுடுகாட்டில் சாம்பலாக மாறும் என்பதை நினைவுபடுத்தி, வாழ்க்கை அநித்தியமானது என்பதை உணர்த்தும் சடங்கு இது. நகரத்தின் சந்தடியிலிருந்து சற்றே விலகி இருப்பது மஹாகாளி கோவிலாகும். இங்குதான் காளிதாசருக்கு அம்மன் அருள் வழங்கினார். விக்கிரமாதித்தன் அருள் பெற்றதும் இங்குதான். கோவில் எளிமையாக உள்ளது. இதை போன்ற பொக்கிஷங்கள் இங்கு நிறைய உள்ளன. இதை மத்திய இந்தியாவின் சமயத் தலைநகரம் என்றே கூறலாம். க்ஷிப்ரா நதிக்கரையில் மற்றுமோர் அதிசயம் சித்தவட் மரம். பல்லாயிரம் வருடங்களாக அங்கேயே நிற்கிறதாம். பார்வதி தேவி இங்கேதான் தவம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது . நகரத்தின் எல்லை களுக்கு அப்பால் இருப்பது பத்ருஹரி குகை. க்ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் இது ரம்மியமாகவும் அமைதியாகவும் உள்ளது.
நீருக்கு அஞ்சலி
ராம் காட் என்னுமிடத்தில் சிப்ரா நதிக்கரையில் வாழ்வின் அமுதமான நீருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது . நதியை நோக்கி இறங்கும் படிகள் மாலை நேர பிரார்த்தனைக்கு சாட்சியாய் அமைகின்றன. பொழுது சாய்ந்து இருள் கவிகிறது. லய அதிர்வுகள் காற்றை நிரப்புகின்றன. படித்துறை நித்ய சடங்கு களுக்காக சுத்தம் சேய்யப்படுகிறது.பின் குருமார்கள் ஆரத்தி எடுக்கின்றனர். பக்தர்கள் ஏற்றி விடப்பட்ட தீபங்கள் நதியைப் பிரகாசிக்க செய்கின்றன. எங்கும் வியாபித்திருக்கும் ஆன்மீக ஒளி மனதை நிரப்புகிறது. மந்திர கோஷங்கள் காற்றில் எதிரொலிக்கின்றன. சற்று நேரத்தில் ஜ்வாலைகள் வெளிச்சமாய் மாறுகின்றன. இந்த படித்துறைகளில் இருக்கும் மற்ற கோவில்களும் தங்கள் பூஜையை தொடங்குகின்றன.

No comments:

Post a Comment