Thursday, July 18, 2013

குழந்தைகளுக்கானபல் பராமரிப்பு!

பிறந்த குழந்தைகளுக்கான, பல் பராமரிப்பு பற்றி கூறும் குழந்தை நல நிபுணர், பாலசுப்ரமணியம்: குழந்தைகள் பிறந்த, ஆறு முதல், ஏழாம் மாதத்தில் இருந்து, "பால் பற்கள்' முளைக்க ஆரம்பிக்கின்றன. 
அதிலிருந்து, குழந்தையின் பற்களை பராமரிக்கும் வேலையை, பெற்றோர் கவனமாகச் செய்ய வேண்டும். பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில், ஈறுகள், "நமநம'வென்று இருப்பதால், குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இதனால், எவ்வித பயமோ, அச்சமோ இல்லாமல், மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.

குழந்தை காலை எழுந்ததும், மெல்லிய, "மஸ்லின்' துணியை, தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை, மெதுவாக சுத்தம் செய்து விட வேண்டும். இரவு பால் குடித்ததும், இதே போல் சுத்தம் செய்த பின், தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை, இதைத் தொடர வேண்டும்.

ஒரு வயதான குழந்தைகளுக்கு, "புளூரைட்' குறைந்த பற்பசையை உபயோகிக்க ஆரம்பிக்கலாம். மென்மையான பிரஷ் அல்லது பிங்கர் பிரஷ் மூலம், காலை மற்றும் இரவு என, இரு வேளையும் பல் துலக்கி, வாய் கொப்பளிக்கவும் பழக்கப்படுத்தலாம்.
குழந்தைகள் விளையாடும் போது, கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொள்வர். உடனே, உடைந்த பல்லை பாலில் போட்டு, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், உடைந்த பல்லோடு, அதை ஒட்ட வைக்க முடியும். இது, எல்லா வயதினருக்கும் பொருந்தும்.

பல்லில் கறுப்பாக ஏதாவது இருந்தால், அது தான் பல் சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அப்பகுதியில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும். தாமதித்தால், பல் சொத்தையாகி, முழு பல்லையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு வகைகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை, சிறு குழந்தைகள் சாப்பிட பழக்கப்படுத்தக் கூடாது. பல்லில் படியும் இனிப்புகளை, பாக்டீரியா சிதைக்க ஆரம்பிக்கும் போது வெளிப்படும் ஆசிட், பற்களின் எனாமலை பாதித்து, பற்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

No comments:

Post a Comment