Saturday, September 13, 2014

மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்

தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தென்னை டானிக் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பாளையங்கோட்டையிலுள்ள பல்கலைக்கழகத்தின் வேளாண்மை உதவி மைய உதவி பேராசிரியர் முனைவர் சி. ராஜா பாபு கூறியதாவது:
தென்னை டானிக் ஊட்டப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து காய்களின் எண்ணிக்கை அதிகரித்து, காய்களின் பருமனும் தரமும் அதிகரிக்கிறது. தென்னை டானிக்கில் நைட்ரஜன், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்பிடினம் ஆகிய மரத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் சரியான விகிதத்தில் கலந்துள்ளன.
இந்த டானிக் மூலம் மரத்துக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் சரியான விகிதத்தில் நேரடியாக மரத் திற்குள் செலுத்த முடிகிறது. மேலும், நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்ளும் இயற்கையான எதிர்ப்பு சக்தியும் மரத்தில் அதிகரிக்கிறது. மரத்திலிருந்து மூன்று அடி தள்ளி மண்ணை தோண்டி யெடுத்து, பென்சில் கனமுள்ள வெள்ளைநிற உறிஞ்சும் வேர் ஒன்றை தேர்வு செய்து வேரின் நுனியை மட்டும் சாய்வாக சீவி விடவேண்டும்.
பின்னர், டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டி, டானிக் கீழே சிந்தாத வகையில், மண்ணை அணைத்து விட வேண்டும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் 12 மணிநேரத்துக்குள் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். 6 மாதங்களுக்கு ஒருமுறை வேர் மூலம் டானிக் செலுத்தினால் மரங்கள் செழிப்பாக வளர்ந்து உயர் விளைச்சல் கொடுக்கும். ஒரு மரத்துக்கு 200 மி.லி. டானிக் தேவை.
இந்த டானிக் பாலிதீன் பைகளின் மூலம் ரூ.10 என்ற விலையில் விற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0462-2575552 என்ற தொலைபேசி எண்ணி லோ அல்லது 9171717832 என்ற செல்போன் எண்ணிலோ பாளையங்கோட்டை வேளாண் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் ராஜா பாபு. http://tamil.thehindu.com/business/

No comments:

Post a Comment