Thursday, November 7, 2013

சர்க்கரை நோயை எளிதில் விரட்டலாம்!

சர்க்கரை நோயை விரட்டும் வழிமுறைகளை கூறும், சிறப்பு மருத்துவர் கருணாநிதி: நாம் சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில், குளுக்கோசாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. மேலும், நம் உடலில் உள்ள கல்லீரலும், திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக, தனியாக குளுக்கோசை உற்பத்தி செய்வதால், மனித உடலுக்கு இரு வழிகளில் குளுக்கோஸ் கிடைக்கிறது. இந்த முக்கியமான பணியை, கணையத்தில் சுரக்கும், 'இன்சுலின்' என்ற ஹார்மோன் செய்கிறது. எனவே தான், ஒருவருக்கு போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய ஆற்றல் இல்லாமல் இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதையே, 'சுகர்' அல்லது சர்க்கரை நோய் என்கிறோம். நம் விரலில் இருந்து, 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, 'குளுக்கோ மீட்டர்' உதவியுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டுபிடிக்கலாம். இக்கருவியின் விலை, 1,500 ரூபாய். சர்க்கரை நோய், 'பணக்காரர்களுக்கான வியாதி' என, சொல்லப்பட்ட காலம் போய், இன்று போதிய உடல் உழைப்பு இல்லாததால், அனைவருக்கும் வருகிறது. நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழலே, இந்நோய் வர முக்கிய காரணம். துவக்கத்தில், சாதாரணமாக இருந்தாலும், நாளடைவில் பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்த குழாய் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு போன்ற, பல பிரச்னைகளை ஏற்படுத்துவதால், 'சைலன்ட் கில்லர்' என, இந்நோயை அழைப்பர். ஒரே வேளையில் அதிகம் உண்பதை தவிர்க்க, ஒரு நாளுக்கு, ஐந்து முறை என, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். தினசரி உணவில் அதிக அளவு பச்சை காய்கறி, பழங்களை சேர்ப்பதுடன், 25 முதல், 30 கிராம் அளவிற்கு நார் சத்துள்ள உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். கடைகளில் விற்கப்படும் இனிப்பு, சர்க்கரை பொருட்களை தவிர்ப்பதும் நல்லது. உடல் எடை மற்றும் உணவுகளை குறைப்பதுடன், உடற்பயிற்சியை அதிகரித்தாலே, சர்க்கரை நோயை எளிதில் விரட்டலாம்.

No comments:

Post a Comment