Saturday, November 2, 2013

வீட்டிற்குள் காத்திருக்கும் ஆபத்து!



குழந்தை நல மருத்துவர் சுப்ரமணியன்: பிறந்த குழந்தையின் பாதுகாப்பிற்கு உலை வைக்கிற பல விஷயங்கள் பெரும்பாலும், வீட்டிற்குள் தான் இருக்கின்றன. எனவே, குழந்தை கள் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். பிறந்த குழந்தையின் படுக்கை, அதிக மென்மையானதாக இருக்க கூடாது. ஏனெனில், குழந்தை கவிழ்ந்து படுக்கும் போது, அதன் முகம் முழுவதும் மென்மை யான படுக்கை விரிப்பில் பதிந்து விடுவதால், தேவையான அளவு மூச்சு விட முடியாமல் இறந்து விடும் சூழ்நிலை உள்ளது. வெளிநாடுகளில், அதிக மென்மையான படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவதால், துாக்கத்திலேயே மூச்சடைப்பு ஏற்பட்டு, அதிக குழந்தைகள் இறப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு, 'சடன் இன்பன்ட் டெத் சின்ரோம்' என, பெயரிடப்பட்டுள்ளது. எனவே, சிறிதளவு மென்மையான படுக்கை விரிப்பை பயன்படுத்தினாலே, குழந்தைகள் நன்கு வெளி தூங்குவர். தண்ணீர் எப்போதும் தேங்கியிருக்கும், 'பாத்ரூம், டாய்லட்' போன்றவற்றை பெரியவர்கள் பயன்படுத்திய பின், மூடிவிட்டு வருவது நல்லது. ஏனெனில், குழந்தைகள் அங்கு சென்று என்ன செய்வதென்று தெரியாமல், வழுக்கி விழுந்து அடிபட வாய்ப்புகள் அதிகம். மேலும், வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயங்களில், சிறு குழந்தைகள், 'தண்ணீரில் விளையாட போகிறேன்' என, வெறும் ஒரு பக்கெட் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடும் சம்பவங்களும், தற்போது அதிகரித்து வருகிறது. 'மிக்சி, கிரைண்டர்' போன்ற மின் சாதனங்களை, குழந்தைகள் பார்க்கும்படி தரையில் வைத்து இயக்காதீர்கள். குழந்தைகள் தொடும் அளவிற்கு கீழே பிளக் பாயின்டுகள் வைத்திருந்தால், அதை பயன்படுத்திய பின், கடைகளில் விற்கப்படும், 'டம்மி பிளக்'கை சொருகி வையுங்கள். ஏனெனில், ஏதேனும் இரும்பு பொருட்களை அதனுள் சொருகினால், மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வீட்டின் கதவு திறந்து இருந்தாலும், குழந்தைகள் வெளியில் செல்லாமல் இருக்கவும், படிகட்டுகளில் ஏறுவதை தடுக்கவும், கனமான தடுப்பு அட்டைகளை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment