Friday, August 9, 2013

Aanmeegam News/ஆன்மிக தகவல்கள் -2

ஒரு மனிதன் மூன்று விதத்தில் பூலோகத்தில் கஷ்டங்களை அனுபவிக்கிறான். ஒன்று இயற்கை இடையூறுகளான பூகம்பம், வெள்ளம், உஷ்ணம் ஆகியன. மற்றது விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்து. மூன்றாவது கொடிய வியாதிகள் படுத்தும் கொடுமை. இவற்றில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து, "ஹரி ஹரி' என்று ஏழுமுறை சொல்ல வேண்டும். ஆண், பெண்கள் பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் "கேசவாய நம' என ஏழுமுறை சொல்ல வேண்டும். இவ்வாறு சொன்னால் அன்றையப் பணியில் தடங்கல் ஏதும் நிகழாது. சாப்பிடும் முன்பு கோவிந்தனை(திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும். இரவில் உறங்கச்செல்லும் போது "மாதவா... மாதவா' என ஏழுமுறை சொல்ல வேண்டும். பெருமாளின் நாமங்களே நோய்க்கு மருந்தாக இருக்கின்றன. 


* பிறந்த நட்சத்திரத்தையே குழந்தைக்குப் பெயராக வைக்கலாமா? நட்சத்திரங்களின் பெயர்களை நிறைய பேர் வைத்திருக்கிறார்களே! ரேவதி, கிருத்திகா, ஆதிரை என்று நட்சத்திரப்பெயர்களை வைக்கலாம். ஆனால், கூப்பிடுவதற்குப் பொருந்தாத பூரட்டாதி, மிருகசீரிடம் போன்ற பெயர்களை எப்படி வைப்பீர்கள்?


* பூஜையறையில் சுவாமி படங்களை எத்திசையில் வைத்து வழிபடுவது நல்லது? நடுக்கூடத்தில் மேற்குத் திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு பூஜையறை அமைத்து அதில் கிழக்குமுகமாக சுவாமி படங்களை வைத்து வழிபடுங்கள். வடக்கு அல்லது வடகிழக்கு ஆகிய திசைகளும் ஏற்புடையவை தான்.

* நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா? மற்ற உலோகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தங்கத்திற்கு உண்டு. எப்படி என்றால் பலமுறை நெருப்பில் இட்டு மாற்று அடிக்கப்படுவதால் எக்காலத்தும் தோஷம் ஏற்படாத பரிசுத்தமானதாகிறது. எனவே, நம் உபயோகித்திருந்தாலும் சுத்த நீரினால் தூய்மைப்படுத்தி தெய்வச்சிலைகளுக்கு அணிவிக்கலாம்.

* கலியுகத்தில் எந்த தானம் செய்தால் பலன் கிடைக்கும்? என்ன பட்ஜட் என்று கூறியிருந்தால் சொல்வதற்கு வசதியாக இருக்கும். ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். எல்லா யுகங்களுக்கும் ஏற்ற தானம் இது. வளமான இந்தியா உருவாக உதவியாக இருக்கும்.

* நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பதன் தாத்பர்யத்தை தெரிவியுங்கள். பெண்களின் உச்சிவகிட்டிற்கு "ஸீமந்தம்' என்று பெயர். திருமணமான பெண்கள் இங்கு அவசியம் குங்குமம் வைக்கவேண்டும். இதற்கு ஸீமந்த திலகம் என்று பெயர். இதனால் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்றுதேவியரும் மகிழ்கிறார்கள். பார்வதி தீர்க்க சுமங்கலிபாக்கியத்தையும், லட்சுமி அழகு, இளமையையும், வம்சவிருத்தியையும், சரஸ்வதி நல்லறிவையும் தருகின்றனர். உச்சிவகிட்டில் இருந்து கீழே செல்லும் நரம்பு கருப்பையைச் சென்றடைகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எட்டாம் மாதத்தில் வளைகாப்பின் போது முள்ளம்பன்றி ரோமத்தால் கீறி விடுவதுண்டு. இந்த ரோமத்துக்கு "ஸீமந்தம்' என்று பெயர். அபிராமிப்பட்டர் அம்பாள் பற்றி,"உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமும்' என்று பாடியுள்ளார்.

* எந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஜாதகத்தில் உள்ள பித்ருசாபம் நீங்கும்? காகத்திற்கு எள்அன்னம் வைப்பது பித்ருசாபம் போக்க உதவும். முடிந்தால் தினமுமோ அல்லது சனிக்கிழமையோ இதனைச் செய்யுங்கள். அனாதைக் குழந்தைக்கு இயன்ற வரை உதவி செய்யுங்கள். பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வீர்கள்.


** திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா ஏன்? மக்கள் நடமாடும் இடத்தில் திருஷ்டி கழித்த பொருட்களைப் போட்டிருந்தால் அதை மிதிப்பவர்களுக்குத் துன்பம் நேராது. யார் போட்டார்களோ அவர்களையே அந்தக் கஷ்டம் சேர்ந்து விடும். மக்கள் புழக்கம் இல்லாத இடத்தில் யார் கண்ணிலும் படாமல் திருஷ்டி கழித்துப் போட வேண்டும். இது தான் உண்மையாகவே திருஷ்டியைப் போக்கும். தெருவில் அறியாமல் மிதித்து விட்டால் கால்களைக் கழுவிவிட்டு திருநீறு பூசிக் கொண்டால் போதும்.


* பரிகாரம் செய்தால் முன்வினைப் பாவம் தீருமா? சுயநலம், ஆடம்பரம் இல்லாத பக்தி ஒன்று தான் பாவம் போக்கும் பரிகாரம்.

* இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் புரோகிதராகப் பணியாற்றுவதாக அறிந்தேன். இது சரிதானா? வழிபாட்டுப் பழக்கவழக்கங்கள் தட்சிணாசாரம், வாமாசாரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தட்சிணாசாரம் என்பது தென்னிந்திய வழிபாட்டு முறை. வாமாசாரம் என்பது வடஇந்திய வழிபாட்டுமுறை. சைவ, வைணவ சமயங்கள் பெரிதும் வளர்ந்து நிற்கும் தென்னிந்திய வழிபாட்டு முறைகளில் பெண்கள் புரோகிதராகக் கூறப்படவில்லை. வாமாசார முறைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. சரியா தவறா என்று கூறும் நிலையில் நாடு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தேசாசாரம் (நாட்டு வழக்கம்) தலைதூக்கி நிற்கிறது. ஊரோடு ஒத்துப்போக வேண்டிய நிர்ப்பந்த நிலை இருக்கிறது. அதை நினைத்தால் தலை சுற்றுகிறது.

* தேங்காய் உடைக்கும்போது அதில் பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே? இயற்கையாக நடக்கும் சில விஷயங்களை இப்படி எடுத்துக் கொள்வது வழக்கத்தில் வந்துவிட்டது. பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்று மகிழ்கிறீர்கள். அதுவே அழுகியிருந்தால் சகுனம் சரியில்லை என்று வருந்துகிறீர்கள். தேங்காயை ஸ்கேன் பரிசோதனை செய்து விடலாமா? இதை மூடவழக்கம் என்று தான் சொல்லவேண்டும்.

கோயிலுக்குப் போகும் போது, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும். இப்படி இப்படி வணங்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும். அவர்கள் வர மறுக்கத்தான் செய்வார்கள். எப்படியோ எடுத்துச் சொல்லி அழைத்துச்செல்ல வேண்டும். ஒருவேளை அறவே மறுத்து விட்டாலும், அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும், நாம் சொன்ன அறிவுரையை அவர்கள் கடைபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்று போடுகிற விதை அன்று முளைத்து விடும்.கோயிலுக்குப் போய் பகவானைப் பார்க்க பார்க்க அவனுக்குரிய சத்வகுணம் (சாந்தகுணம்) அவனையறியமாலேயே வந்து விடும். இன்று புதுமை, அறிவியல் என்ற பெயரால் தான் இளையவர்கள் பகவானின் அருகில் வர மறுக்கிறார்கள். அவர்களிடம், "ஒரு ஸ்லோகமாவது படி, காலாவது படி' என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கால், அரைக்கால் ஸ்லோகத்தில் கூட பகவான் இருப்பார். 

சொல்லியும் கேட்கவில்லை என்பதற்காக, அவர்கள் விஷயத்தில் பதட்டமே கூடாது. பதட்டம் என்பதே பாவத்தின் பலன் தான். இவர்களுக்கு தான் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு வரும். புண்ணியம் செய்திருந்தால் பதட்டமே வராது. 
இதனால் தான் சொல்கிறேன். நாம் நமது பழையமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டும். கடைசிகாலத்தில் இன்றைய எந்த நவீனமும் நம் கூட வராது. நாம் சொல்கிற கேசவ, நாராயண, கோவிந்த நாமங்கள் தான் கூட வரும்.

* கோயிலை விட்டு வெளியேறும்போது விநாயகரை வழிபட்டால் அருளை திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்வதில் உண்மை உண்டா? உண்மையா என்ற கேட்பதைப் பார்க்கும்போது நீங்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. சிறுபிள்ளைகளிடம் இது போலக் கூறினால் கூட சிரிப்பார்கள். உங்களிடம் இதைச் சொன்னவரிடம் ஒரு சந்தேகம் கேளுங்கள். தரிசனம் கொடுக்காமல் கதவை மூடிக் கொண்டு விடுவாரா என்று. கொடுப்பதற்குத் தான் தெய்வம் இருக்கிறது. திருப்பி எடுத்துக் கொள்வதற்காக அல்ல.

* ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் திருமண ஏற்பாடு செய்யலாமா? ஏழரைச்சனி என்றாலே கஷ்டம் என்று பயமுறுத்துகிறார்கள். சனிபகவான் இக்காலகட்டத்தில் சில நன்மைகளையும் செய்வார். திருமண வயது வந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தால் அவர் மகிழ்கிறார்.

* வடக்கு நோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி நடத்தலாமா? கிழக்குநோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி செய்வது முதல்தரம். மேற்கு இரண்டாம்தரம். வடக்கு மூன்றாம் தரம். பூஜை காரியங்களுக்கு மட்டும் ஏற்புடையது. தெற்கு கூடாது. 

** வாழ்வில் வெற்றி பெற முயற்சித்தால் போதுமா? அல்லது கடவுளின் அருள் தேவையா? 
முயற்சிதிருவினையாக்கும்' என்பது முதுமொழி. திருவினை என்ற சொல்லில் உள்ள "திரு' என்ற சொல்லை சற்று சிந்தித்துப் பார்த்தால் போதும். இறைவனுக்கு "திருவுடையான்' என்று பெயர். வெற்றி, மகிழ்ச்சி, மங்களம், கவுரவம், செல்வம், அழகு என பலபொருள் தரும் ஒரு சொல் "திரு'. முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எழுவது நம் அறிவில் தான். அறிவுக்கு அப்படிப்பட்ட ஆற்றலை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது வேறு யாராவது தர முடியுமா? இறையருள் இருப்பவர்களுக்குத்தான் அறிவாற்றல் அதிகமாக இருக்கும். தொடர்ந்து இறை வழிபாட்டுடன் நம் முயற்சிகளை செய்து கொண்டிருந்தால் வினை எனப்படும் முயற்சியின் பலன் "திரு' எனும் அடைவுடன் சேர்ந்து விடும். உங்கள் முயற்சி இறையருளால் திருவினையாகிறது.

* சிவலிங்கம், குழலூதும் கிருஷ்ணர் படங்களை வீட்டில் வழிபடக்கூடாதாமே ஏன்? யார் சொன்னது? சொன்னவரிடம் காரணம் கேட்கவில்லையா? சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்வதற்கும், குழலூதும் கிருஷ்ணரை வழிபடுவதற்கும் பலபிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் புண்ணியம் செய்திருப்பதால் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். செய்யக்கூடாது என்று சொன்னவர் கடுகளவு புண்ணியம் கூட செய்தவராகத் தெரியவில்லை.

** ஹோமகுண்டத்தில் போடப்படும் பட்டுப்புடவையை ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியம் தானே?

வயலில் போடும் விதை நெல்லை ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன என்பது போன்றது தான் உங்கள் கேள்வி. ஹோமத்தில் போடும் ஒரு புடவையை எத்தனை ஏழைகளுக்குக் கொடுப்பீர்கள். வயலில் இட்ட நெல் பன்மடங்காகப் பெருகி எல்லோருக்கும் பயன்தருவது போல ஹோமத்தில் இடும் திரவியங்கள் எல்லாம் நம்மையே திரும்ப வந்தடைகின்றன. ஹோமத்தை ஏற்கும் அன்னை, மழை பொழியச் செய்தும், பருத்தி, பட்டு என எல்லாவற்றையும் விளையச் செய்தும் அருள்புரிவாள்.

* ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு கடவுள் வழிபாட்டில் இல்லாமல் இருப்பது ஏன்?
ஒரு சில தெய்வங்கள் இரு சக்திகளோடு இருப்பது தத்துவங்களின் அடிப்படையில் தான். இதனை இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையாக எடுத்துக் கொள்வது தவறு. மனிதவாழ்வில் கூறப்படும் மனைவி வேறு. தெய்வநிலையில் சக்தி என்பது வேறு. காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. நாம் வாழ்வதற்கு பூமியும், செல்வமும் தேவைப்படுகின்றன. இதனை இரு சக்திகளாக அதாவது தனது திறன்களாக விஷ்ணு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். ஒன்று ஸ்ரீதேவியாகிய செல்வம். மற்றொன்று பூதேவியாகிய பூமி. ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். நமது விருப்பம் சரியா தவறா என்று அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து பிறகு அதை அடைய முயல்கிறோம். விருப்பம், அறிவு, செயல் என மூன்றும் சேர்ந்தால் தான் ஒருவிஷயம் நிறைவுபெறும். 
இம்மூன்றும் முருகப்பெருமான் வடிவம். விருப்பம் என்னும் இச்சாசக்தி வள்ளி, அறிவு என்னும் ஞானசக்தி முருகன், செயல் என்னும் கிரியாசக்தி தெய்வானை. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தெய்வங்களுக்குரிய சக்தியை மனைவியாகச் சித்தரித்துள்ளனர். சக்தியைப் பெண்ணாக்கி வழிபடுவது நம் மரபு. 

* பவுர்ணமியன்று முடிவெட்டக்கூடாது என்பது உண்மை தானா? நாம் செய்யும் காரியம் நம்மை மட்டும் பாதிப்பதில்லை. நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. காலவிதானம் என்னும் நூலில், குறிப்பிட்ட சில திதிகள், நட்சத்திரங்களில் சவரம் செய்து கொண்டால், குறிப்பிட்ட உறவினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

* குரு உபதேசம் இல்லாமல் மந்திரம் ஜெபிக்கக்கூடாதா? மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அதிகமாக ஜெபம் செய்தவர்களிடத்தில் மகிமை பெருகியிருக்கும். பிறருக்கு உபதேசிக்கும்ஆற்றல் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இவர்களை அடையாளம் காண்பது கடினமான விஷயம். அவர்களை குருநாதராக ஏற்று உபதேசம் பெறும் மந்திரமே தெய்வத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். ரிசர்வ் வங்கி மூலம் அச்சடித்த பணமே செலாவணிக்குரிய உண்மைப் பணமாகும். அதையே நாம் அச்சடித்தால் போலியாகிவிடும். பணத்திற்கு அரசு அங்கீகாரம் எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஜபத்திற்கு குருஉபதேசம் முக்கியமானது. 

* கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடந்தேற எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?
படிப்பு வேலை என்று பல காரணங்களைச் சொல்லி பெண்கள் திருமணத்தைத் தட்டிக் கழித்து விடுகின்றனர். வெள்ளிக்கிழமையில் காலையும், மாலையும் துர்க்கையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா ??
* கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி,
* தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்,
* தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது,
* சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது,
* நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது,
* சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது,
* ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும், கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.

* ஸ்ரீசக்ரம் என்பது என்ன? அதை பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன? சக்தியந்திர வழிபாடுகளில் மிக உயர்ந்தது ஸ்ரீசக்ரம். யந்திர ராஜா என்ற இதனைக் கூறுவர். ஒரே அளவிலான 43 முக்கோணங்களைக் கொண்டது இந்த யந்திரம். சிவாலயங்களில் உள்ள மனோன்மணி எனப்படும் அம்பாள் சந்நிதிகளில் இச்சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்ய ஆகமநூல்களில் கூறப்படவில்லை. துர்க்கை, ராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்வதும், யந்திரத்தைத் தனியாக வழிபாடு செய்வதும் வழக்கில் இருந்தது. சக்திவாய்ந்த இதனை வழிபடுபவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும். உபதேசம் பெற்று உரிய நியமங்களை அறிந்து ஸ்ரீசக்ரத்தை வழிபடவேண்டும். 

* சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்? சூரியோதயத்திற்கு முன் விடியற்காலை 4.30-6மணி வரை பிரம்ம முகூர்த்தம். இரவில் தூங்கி மீண்டும் எழுவதே ஒரு மறுபிறப்பு தான். பிறப்பு என்பது படைத்தல் அதாவது சிருஷ்டி சம்பந்தப்பட்டது. சிருஷ்டியைச் செய்யும் பிரம்மனின் பெயரால், ஒருநாளின் துவக்க நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடுவர். இவ்வேளைக்கு தோஷம் என்பதே கிடையாது. நேரம் பார்த்து செய்ய இயலாத ஒருசில அவசியமான சுபநிகழ்வுகளை பிரம்மமுகூர்த்தத்தில் செய்யலாம். 

* எனக்கு அறுபதாகும் போது மணிவிழா செய்ய இயலவில்லை. மனைவிக்கு 60 வயது ஆகும்போது சஷ்டியப்த பூர்த்தி செய்யலாமா? உங்களுக்கு 60வயது பூர்த்தியான பொழுது செய்திருந்தால் அது சஷ்டியப்த பூர்த்தி. இதுவே உங்களுக்கும், மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நலன் கிடைக்கச் செய்யப்படுவதாகும். மனைவிக்கு 60வயதாகும்போது குடும்பத்தில் எல்லோருக்குமாக ஆயுள்ஹோமம் செய்யுங்கள். இது பொதுவான விஷயம் தான் என்றாலும், உங்களின் மணிவிழாவாக நினைத்து செய்து கொள்ளுங்கள்.

* குழந்தைக்கு ஏற்படும் பாலாரிஷ்டதோஷத்திற்குப் பரிகாரமாக யாரை வழிபடவேண்டும்? பாலாரிஷ்டம் நீங்க சாந்தி ஹோமம் செய்வது நன்மை தரும். வேதவிற்பன்னர்களைக் கேட்டால் வழிகூறுவார்கள். பொதுவாக முருகன், சந்தானகோபாலன், மாரியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுவது நன்மை தரும். 

** கோயில் கிணற்றில், குளத்தில் பக்தர்கள் காசைப் போடுவது ஏன்? ஒருவர் போட்டுத் துவங்கி வைக்கிறார். ஏன் எதற்கு என்று கூட சிந்திக்காமல் எல்லோரும் அதைச் செய்கின்றனர். இதைச் செய்யாதவர்களை செய்தவர்கள் தூண்டுவது தான் வேடிக்கை. தேவையில்லாத ஒன்றை பலநாட்கள் செய்யப்பழகிவிட்டால் அது வழக்கமாகி விடுகிறது. கேள்வி என்று வரும்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசிக்க வைத்து 
விடுகிறார்கள். 

** குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்? அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.

* தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா? சென்றபிறவியில் செய்த பாவபுண்ணியபலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத் தான் அவன் திருந்தும்வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார். இந்த கருணையைப் புரிந்து கொண்டவர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து அலட்சியப்படுத்துபவர்களும் தீயவழியில் சென்று 
பாவத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்பதுன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண்டேயிருப்பார். ஒரே பிறவியில் மனிதனைத் திருத்துவதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தராது.

* பெற்றோர் இருக்கும்போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா? தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர்வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.

* ஆண்வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா? நேரடியாகக் கொடுக்க முடியாது. உங்கள் தந்தைவழி அதாவதுசித்தப்பா,பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.

* கோயிலில்உடைத்த சிதறுகாயைப் பிரசாதமாகக் கருதி சாப்பிடலாமா? தேங்காய் சிதறுவது போன்று நம் தடைகள் மற்றும் கஷ்டங்கள் சிதறுவதாக அர்த்தம். எனவே, அது பிரசாதம் கிடையாது. சில விஷயங்களை இல்லாதவர்களுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.

* வீட்டிலேயே எள்தீபமிட்டு சனீஸ்வரரை வழிபடலாமா? எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது. கோயிலில் தான் ஏற்ற வேண்டும். 

* வீட்டில் விக்ரஹபூஜை செய்வதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் யாவை? எண்ணெய், பால், பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். வஸ்திரம், சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்து சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்ட வேண்டும். தனியாக சாதம் வடித்து அதில் சிறிது நெய், பருப்பு சேர்த்து பிரசாதம் செய்ய வேண்டும். பிறகு கற்பூரம் காட்ட வேண்டும். அந்தந்த தெய்வத்திற்குரிய தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இம்முறையில் பூஜை செய்வது சிறப்பு. பஞ்சலோக விக்ரஹமாக இருந்தால் எண்ணெய் சாத்தவேண்டாம்.

** கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? அல்லது சுவாமி பெயருக்கு செய்யலாமா? நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும். குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் அதன் உடம்புக்கு ஆகாது என்று வாங்கித்தர மறுக்கிறோம். இதனால் குழந்தைக்கு நல்லதைச் செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இறைவனிடம் நாம் கேட்பதும்! நமக்கு எது ஏற்புடையதோ அதை நாம் கேட்காமலேயே ஆண்டவன் கொடுப்பார். இதைப் புரிந்து கொண்டால் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்யலாம். இல்லாவிட்டால் நம் பெயருக்குச் செய்து கொள்ளலாம்.

* கோளறு பதிகத்தை எல்லாரும் பாராயணம் செய்யலாமா? கோளறு பதிகத்தை எல்லாரும் தாராளமாகப் பாராயணம் செய்யலாம். சொல்லில் தவறு ஏற்படாமல் இருக்க யாராவது சொல்ல அதைக்கேட்டு, தினமும் காலையும், மாலையும் சுவாமி முன்பு பாராயணம் செய்யுங்கள். கிரக தோஷம் நீங்குவதுடன் பயம் நீங்கி மனத்தெளிவும் உண்டாகும்.

* அலுவலகத்தில் பணிசெய்யும் நேரத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிக்கலாமா? அல்லது சுவாமி முன் அமர்ந்து தான் சொல்ல வேண்டுமா? "நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்று சுந்தரரும், "இடரினும் தளரினும்' என்னும் சம்பந்தர் தேவாரத்திலும் எப்போதும் சுவாமி நாமத்தை ஜபம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது. பணியின் போது தாராளமாக ஜபம் செய்யலாம். 

* சிலகோயில்களில் மட்டும் ஆண்களை சட்டையோடு அனுமதிப்பதில்லையே ஏன்? அந்தச் சில கோயில்களில் தான், நம் கலாச்சாரம் ஓரளவாவது காப்பாற்றப்பட்டு வருகிறது. கோயிலும் தெய்வங்களும் பாரம்பரியமானவை. இவ்விஷயத்தை மதித்துத்தான், நாம் கோயில்களுக்குச் செல்கிறோம். தெய்வத்தின் மீதுள்ள மதிப்பை வெளிப்படுத்த நாமும் பாரம்பரிய உடையில் செல்வது அவசியம். திருமணத்திற்கு இரவல் வாங்கியாவது பட்டுப்புடவையும், நகைகளும் அணிந்து செல்வதில்லையா? அதுபோல கோயிலுக்குச் செல்லும்போது பக்தி அவசியம். பக்திக்கு பாரம்பரியத்தைப் போற்றும் பண்பும் அவசியம். எனவே, கலாச்சாரத்தை நாமாகவே முன்வந்து, எல்லா கோயில்களிலும் பின்பற்றுவோமே! 

*உலகிலேயே பாரதம் சிறந்த ஆன்மிக பூமியாகத் திகழ்வதற்கு சிறப்பான காரணம் உண்டா? ஆன்மிகத்தின் மூலம் மக்களை நெறிப்படுத்தும் வழியை முதலில் கூறியது வேதங்கள் தான். மதம் என்ற பெயரில் ஆன்மிகம் பிரிவதற்கு முன்பே அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சநாதன தர்மம் என்ற பெயரில் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஆன்மிகம் உலக மக்களிடையே பரவியிருந்தது. தேவர்களின் நிலைப்பாடுகளையும், யாகங்களின் மூலம் அவர்களை திருப்தி செய்து, மழை, பயிர் வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவற்றைப் பெறலாம் எனவும் கூறும் வேதங்கள், தெய்வ வழிபாட்டுக்குரிய விஷயங்களாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ராமேஸ்வரத்துக்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை (இமயம் முதல் குமரி வரை என்றும் சொல்லலாம்) புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற இடமாகக் கூறுகிறது. வேதத்தில் குறிப்பிடப்படுகின்ற புண்ணியநதிகளாகிய கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி நதிகள் இங்கு தான் உள்ளன. சிவன், விஷ்ணு, பார்வதி, விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் திருவருட் செயல்கள் இங்குதான் நிகழ்ந்தன. யாராலு<ம் தோற்றுவிக்கப்படாதது என்ற சிறப்புடைய சநாதன தர்மம் பல அருளாளர்களாலும், குருமார்களாலும் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு இந்து மதமாக வளர்ந்துள்ளது. எந்த நாட்டவராயினும் பிறரையும் அரவணைத்துக் கொள்வது நம் பாரததேசம் தான். ஆன்மிகம் என்பது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு ஆலமரம் என்றால் அதன் ஆணிவேர், நமது புண்ணிய பாரததேசம்தான்.

* திருஷ்டி போவதற்கு பூசணிக்காயை நடு ரோட்டில் உடைப்பது முறையானதா? இருசக்கர வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் இதில் சறுக்கி விழுந்து கஷ்டப்படுகிறார்கள். எனவே விழுந்தவர்களுக்கு இருந்த திருஷ்டி தோஷம் நீங்கி விடுகிறது. விழுந்தவர்கள் கடும் சாபமும் பூசணிக்காயை நடுரோட்டில் முறையில்லாமல் உடைத்தவரையே சேருவதால், திருஷ்டி தோஷம் கழிவதற்கு பதில் பல தோஷங்கள் சேர்ந்து விடுகின்றன.

* ஒரு வயது வரை குழந்தைக்கு ஜாதகம் கணிக்கக்கூடாது என்பது ஏன்? அதற்குள் ஜாதகம் கணித்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒரு வயது வரை குழந்தையின் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை கூட செய்யக்கூடாது. குங்குமம் இடுதல், பூ வைத்தல் போன்றவை கூடாது. தாய்ப் பாலைத் தவிர வேறு உணவு தரக்கூடாது. இவற்றையெல்லாம் ஏன் ஏற்படுத்தினார்கள் என்றால் குழந்தைக்கு உடல் ரீதியாக பாதிப்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காகத்தான். ஓராண்டு முடிந்து ஆயுஷ்யஹோமம் செய்யப்படும் வரை குழந்தை தெய்வ சம்பந்தமுடையதாக இருப்பதால் அர்ச்சனை செய்வது, ஜாதகம் பார்ப்பது போன்றவை தேவையில்லை.

* கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன? "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது, சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

* வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹோமம் நடத்துவது சரியா? குடியிருக்கும் வரை அது உங்கள் வீடு தான். வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்று மற்ற விஷயங்களை ஒதுக்கி விடுவதில்லையே. ஹோமம் நடத்துவது சிறப்பானதே. 

** எண்களில் எட்டு ஒதுக்கப்பட்டதா? பலரும் இந்த எண்களை விரும்புவதில்லையே ஏன்?  வெள்ளையர்களின் வரவால் விளைந்த விபரீதங்களில் இதுவும் ஒன்று. நம்மைப் பொறுத்தவரை எட்டு மிக உயர்ந்த எண். இதனை "அஷ்ட' என்று சொல்வார்கள். அஷ்ட லட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட மூர்த்தி என்று எவ்வளவோ எட்டைப் பற்றிச் சொல்லலாம்.

* தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன? மனிதசக்திக்கும், தெய்வசக்திக்கும் வேறுபாடு உண்டு. ஒரே நேரத்தில் தெய்வத்தால் பல செயல்களைச் செய்ய முடியும். கோடிக்கணக்கானவர்களுடன் ஒரே சமயத்தில் பேச முடியும். எந்த தீய சக்தியையும் அழிக்கும் ஆற்றலை உணர்த்தும் வகையில் கைகளில் ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இதை நாம் உணர்வதற்காக பல கைகளும், தலைகளும் தெய்வ வடிவங்களில் 
சித்தரிக்கப்படுகின்றன.

* நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது? நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது. 

* தகுதிக்கு மீறிய பரிகாரங்களை ஜோதிடர்கள் சொல்லும்போது எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எளிய பரிகாரத்தை இறைவன் ஏற்கமாட்டாரா? நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். இறைவன் ஏற்றுக் கொள்வார். 

* ஒருவர் வேண்டிய காணிக்கையை மற்றொருவர் மூலம் செலுத்துவது ஏற்புடையது தானா?
வேண்டிக்கொண்ட காணிக்கையை காலம் தாழ்த்தாமல் எப்படியாவது இறைவனுக்கு செலுத்திவிட வேண்டும் என்ற அடிப்படையில் இது சரியானது தான். 

* தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா? கிடையாது. தர்ப்பணம் முடிந்தபின் கைகால்களைக் கழுவி விட்டு திருநீறு அல்லது திருமண் திலகமிட்டு பூஜை செய்யலாம். குளிக்கக்கூடாது.

* திருவிளக்கு பூஜையில் கன்னிப்பெண்கள், சிறுமிகள், சுமங்கலிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். இதற்கு ஏதேனும் வயது வரம்பு உண்டா? பெண்களுக்கு வயது அடிப்படையில் சில பெயர்கள் உண்டு. ஏழுவயது வரை பாலா, பதினொரு வயதுவரை கன்னி, அதன்பிறகு திருமணமாகும் வரை வதூ, திருமணமான பின் சுமங்கலி, வயது முதிர்ந்த சுமங்கலிக்கு சுவாசினி என்று பெயர். சுமங்கலி, சுவாசினி ஆகியோர் திருவிளக்கு பூஜை செய்வது தான் சிறந்தது.

* அமாவாசையை சிலர் நிறைந்தநாள் என்று சொல்லி சுபநிகழ்ச்சி நடத்துவது சரியா? திருமணம், நிச்சயதார்த்தம் அமாவாசையில் செய்யக் கூடாது. வியாபாரரீதியாக சில விஷயங்களை முடிவெடுப்பது, ஒப்பந்தம் செய்வது போன்றவற்றை சமீபகாலமாக சிலர் செய்து வருகிறார்கள். சாஸ்திரரீதியாக இதற்கு பதில் சொல்ல முடியாது. அவர்களது அனுபவத்தில் நல்லதாக இருக்கலாம்.

** ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே சரியானதாக என் மனதிற்குப் படுகிறது. ஆத்திகத்தை முழுமையாக ஏற்க வழிகாட்டுங்கள்.? நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்றும் இருக்கும். எது நமக்குப் பயனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தேர்வு செய்து கொள்வதே நல்லது. இந்த அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் ஆத்திகம் நல்லது. மனித வாழ்விற்கு உறுதுணையாகவும், கவலையைப் போக்குவதாகவும் உள்ளது. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் கைகொடுப்பார் என நம்பினால் காப்பாற்றப்படுகிறோம் என்பதை உங்கள் அனுபவங்களின் மூலமே சீர்தூக்கிப் பார்க்கலாம். நாத்திகம் நம் கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்குகிறது. உலகப்பொதுமறையான திருக்குறள் கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது. சிறந்த ஆன்மிகவாதியாக இருந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

*சுவாமிக்குப் பிரசாதம் படைக்கும்போது திரையிட்டுக் கொள்வது ஏன்? வீட்டில் சாப்பிடும்போது எல்லோரும் பார்க்கும்படி வாசலில் உட்கார்ந்து நாம் சாப்பிடுவதில்லையே. குளிப்பது, சாப்பிடுவது, ஜெபிப்பது போன்ற விஷயங்களை பிறர் பார்க்கும்படி செய்வது கூடாது என்பது நியதி. தெய்வத்திற்குப் பிரசாதம் படைக்கும் நைவேத்யத்தை ரகசியமாக செய்யும்படி சாத்திரங்கள் கூறுகின்றன. கவுரவம், பயபக்தியோடு மட்டுமே கடவுளுக்கு உணவு படைக்கவேண்டுமே தவிர மேடை காட்சியாக செய்யக்கூடாது. 

*பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வழிபாட்டில் தேங்காய் உடைக்கக் கூடாதா ஏன்? கர்ப்பமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. பெண்கள் தேங்காயை உடைக்கவோ, பூசணிக்காயை வெட்டவோ கூடாது. ஆண்கள் தான் எப்போதும் செய்ய வேண்டும். 

** நமக்கு ஏழுபிறவிகள் இருப்பது உண்மையா? சொர்க்கம் நரகம் போன்ற உலகங்கள் எங்கிருக்கின்றன?
எல்லா உலகங்களும் உங்கள் கண்ணெதிரிலேயே உள்ளன. அறிவாற்றலைப் பெருக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் எல்லாமே சொர்க்கம் தான். மனதை அடக்கும் சக்தி இல்லாவிட்டால் நாம் வாழும் சூழலே நரகமாகி விடுகிறது. பேரின்பநிலையை அடையும் வரை உயிர் வேறு வேறு உருவில் பிறப்பு, இறப்பை அடைந்து கொண்டே இருக்கும். இந்த அடிப்படையில் பிறவிகளுக்கு எண்ணிக்கையே கிடையாது. ஏழு ஜென்மம் என்பது ஒரு வரையறைக்காக சொல்வதாகும். இவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு தேவையான அறிவாற்றல் பெற பக்தி செய்வதே நம் கடமையாகும். 

** செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

* கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா? கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

* திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன? அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா? பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா? இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

*பூஜையறையில் ஏற்றும் விளக்கை லட்சுமிவிநாயகர் போன்ற தெய்வ உருவம் பொறித்த பித்தளை தாம்பாளத்தின் மீது வைக்கலாமா? கீழே தெய்வ உருவம் இருக்கும்போது அதன்மீது விளக்கேற்றி வைப்பது கூடாது. சாதாரண தாம்பாளத்தில் ஏற்றி வைக்கலாம். தெய்வ உருவம் பொறித்த தாம்பாளங்களில் பூ, பழம் வைத்து பயன்படுத்தலாம்.

* நாடிஜோதிடம் உண்மையா? அதில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்தால் குறை தீருமா? நாடி என்ற சொல்லுக்கு காலஅளவு என்று பொருள். இந்த நாழிகையில் இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால் இன்னின்ன நிகழ்வுகள் என்பதை தமது தவவலிமையால் வசிஷ்டர், அகத்தியர் போன்ற முனிவர்கள் நாடிஜோதிடத்தை எழுதி வைத்துள்ளனர். மனிதவாழ்வு மட்டுமின்றி இயற்கைநிகழ்வுகளான மழை, புயல், அமாவாசை, பவுர்ணமி, சூரியசந்திர கிரகணம் பற்றிய குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அதனால் நாடிஜோதிடம் உண்மையே. கஷ்டநிவர்த்திக்காக பரிகாரம் செய்வதும் சரியே. ஆனால், ஜோதிடர் நம்பகம் உள்ளவராக இருப்பது மிகமிகஅவசியம். ஒருசிலரின் தவறான போக்கால் ஜோதிடம் மூடநம்பிக்கையாகி விடுகிறது.

கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் கூறுங்கள். எல்லா தெய்வங்களும் கும்பாபிஷேக நேரத்தில் சங்கமிக்கிறார்கள். தெய்வத்தின் சக்தியை வரவழைக்கும் அற்புத நிகழ்ச்சி அது. அந்நேரத்தில் தரிசித்தால், எல்லா தெய்வங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் கவலை நீங்கும். எண்ணியதெல்லாம் வெற்றி பெறும்.

1 comment:


  1. Wonderful article....To get more information about Aanmeegam news visit here Maalaimalar

    ReplyDelete