Sunday, January 1, 2017

ஆர்கானிக் சோப்பு: அசத்தும் விவசாயி


காலம் காலமாக கழனியில் உழைத்து விளைவித்து, யார் யாரோ சம்பாதிக்க கருவியாய் உழன்ற விவசாயிகள், தற்போது மதிப்புக்கூட்டும் மந்திரத்தை கற்றுக் கொண்டு, 'என் விளைச்சல்; என் லாபம்' என விற்பனைச்சந்தையின் விற்பன்னர்களாக மாறி வருகின்றனர். 
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி, மது ராமகிருஷ்ணன். இயற்கை விவசாய முறையை பிரதானமாகக்கொண்டு, தேங்காய், குறுமிளகு, ஜாதிக்காய் போன்றவைகளை விளைவித்து வருகிறார்.
ரசாயன பொருட்களுக்கு தனது தோட்டத்தில் இடம் இல்லை என இவர் எடுத்த முடிவு, இன்று இவரை இயற்கை முறை விவசாயியாக மட்டுமின்றி 'ஆர்கானிக் சோப்' தயாரிக்கும் தொழில் முனைவோராகவும் மாற்றியுள்ளது.
மண் எடுத்து, நீர் கலந்து, மனதை ஒருமுகப்படுத்தி பானை செய்து, காற்றில் உலர வைத்து, நெருப்பில் சுட்டு எடுக்கும்போதுதான் மண்ணிற்கே மதிப்பு கிடைக்கிறது. விவசாயிகளும் தங்கள் விளைப்பொருட்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு மாற்றி, மதிப்புக் கூட்டினால்தான் மார்க்கெட்டில் விலை கிடைக்கிறது என்கிறார் கோட்டூர் விவசாயி மது ராமகிருஷ்ணன்.
இவருக்கு தென்னை விவசாயம் தான் பிரதான தொழில். தேங்காய் உற்பத்தியுடன் நின்று விடாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது தோப்பில் முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், விர்ஜின் தேங்காய் எண்ணெய் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையை துவக்கினார்.
தற்போது, ஆர்கானிக் தேங்காய் எண்ணெய், இயற்கை நிறமிகள், வாசனைபொருட்களை கொண்டு ஆர்கானிக் குளியல் சோப்பினை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறார். 
ஆர்கானிக் குளியல் சோப்பு தயாரிக்கும் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: விவசாய விளைபொருட்களுக்கு, உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதால், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி, குளியல் சோப்பு தயாரிக்க முடிவு செய்தேன். இதற்காக காசர்கோடு, கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து, 3 முறை பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
ஆரம்பத்தில் கிடைத்த பயிற்சி மற்றும் ஆலோசனைகள், சோப்பு தயாரிப்புக்கு பக்கபலமாக இருந்தன, என்றாலும், மூன்று ஆண்டுகள் இது தொடர்பான எனது தேடல்கள், இதில் என்னை பக்குவப்படுத்தியது.
ஒரு பக்கம் விவசாயம், இன்னொரு பக்கம் கருந்தரங்கம், விவசாயிகளுடன் சந்திப்பு, ஆலோசனை, எழுத்துப்பணி, அத்துடன் 'ஆர்கானிக் குளியல் சோப்பு ' தயாரிப்பில் ஈடுபாடு என மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பிற்கு பின்புதான் இதில் வெற்றி கிடைத்தது. 
பிறகு மெல்ல மெல்ல நானே சோப்புகளை தயாரித்து பலருக்கு நேரடியாக விற்பனை செய்தேன். தற்போது நூறு சதவீதம் இயற்கை நிறமி, வாசனை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி குளியல் சோப்பு தயாரிக்கிறேன். 
தேங்காயை பறித்து விற்றபோது கிடைத்த வருமானத்தை காட்டிலும், அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி வியாபாரம் செய்யும் போது கிடைக்கும் லாபத்தில் பலமடங்கு வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment