கனவு இல்லம் சாத்தியமாக வீட்டுக்கடன் கைகொடுக்கிறது. வங்கிகள், வீட்டுக்கடன் நிறுவனங்கள், பல வகையான திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், வீட்டுக்கடன் பெறும்போது, அவை செயல்படும் விதம் பற்றிய அடிப்படையான விஷயங்களை அறிந்திருப்பது அவசியம். இதுதொடர்பாக பலரும் அறிந்திராத கட்டணங்கள், அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அம்சங்கள்:
அறியாத கட்டணங்கள்
விண்ணப்ப கட்டணம்: வீட்டுக்கடன் விண்ணப்பத்திற்காக வசூலிக்கப்படும் கட்டணம். இந்த கட்டணம் திருப்பி செலுத்தப்படக் கூடியதல்ல. விண்ணப்பித்த பிறகு ஏதேனும் காரணத்திற்காக கடன் பெறும் முடிவை மாற்றிக் கொண்டாலும் இந்த கட்டணம் உண்டு.
செயல்பாட்டுக் கட்டணம்: விண்ணப்ப படிவத்துடன் செலுத்தப்பட வேண்டிய கட்டணம். இந்த கட்டணமும் திருப்பி செலுத்தப்படக் கூடியதல்ல. வங்கிகள் நினைத்தால் இந்த கட்டணத்தை குறைக்கலாம். உறுதியாக பேசுவது உங்கள் கையில் தான் இருக்கிறது.
அடமான பத்திர கட்டணம்: வீட்டுக்கடனுக்காக செலுத்த வேண்டிய மற்றொரு கட்டணம். இது கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கலாம். கடன் பெறும் போது செலுத்த வேண்டிஇருக்கும். ஆனால் சில வங்கிகள் இதை வசூலிக்காமல் இருக்கின்றன.
சட்டச் செலவு: நீங்கள் வாங்க இருக்கும் வீடு, சட்டரீதியான வில்லங்கம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வங்கிகள், வழக்கறிஞர்கள் ஆலோசனையை நாடுகிறது. இதை வீட்டுக்கடன் பெறுபவரிடம் இருந்து வசூலிக்கின்றன.
முன்கூட்டியே செலுத்தினால் அபராதம்: உரிய காலத்திற்கு முன்னதாக கடன் தொகை அல்லது அதன் ஒரு பகுதியை திருப்பி செலுத்தினால், வங்கிகளுக்கு வட்டி இழப்பு ஏற்படுவதால் அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது. மாறாத, கடன் விகித வட்டிகளுக்கு இது வசூலிக்கப்படுகிறது.
அறிய வேண்டியவை
நிதி திட்டமிடல்: வீட்டு கடன் பெறுவதற்கு முன், உங்கள் நிதி நிலை பற்றி நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட வேண்டும். செலவை குறைத்து, சேமிக்கத் துவங்க வேண்டும்.
கடனில் கவனம்: நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் கடன் பெற்றிருந்தால், வீட்டுக்கடனும் சேருவதால் அதிகரிக்க கூடிய மாதத்தவணை பற்றி யோசித்தாக வேண்டும். கடனை சமாளிக்க, கூடுதல் வருவாய் ஆதாரம் இருப்பதும் நல்லது.
கடனுக்கான மார்க்: வங்கிகள், கடன் கொடுப்பதற்கு முன், 'சிபில் ஸ்கோரை' பரிசிலிக்கின்றன. ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தும் தன்மைக்கு ஏற்ப, அவரது சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. சிபில் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொள்ளவும்.
டவுன் பேமென்ட்: வீட்டுக்கான தொகையில் ஒரு பங்கை, கடன் பெறும்முன் செலுத்த வேண்டும். இது, 10 - 15 சதவீதமாக இருக்கலாம். கடன் பெறும் உற்சாகத்தில் இதை மறந்து விடக் கூடாது. இதற்கான வழியை திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
வட்டி விகிதம்: மாறும் வட்டி விகிதம் ஏற்றதா, மாறாத வட்டி விகிதம் ஏற்றதா எனும் குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு. மொத்த வட்டி விகிதம், கால அளவு உள்ளிட்டவற்றை பரிசீலித்து முடிவு எடுக்கவும். http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25526&ncat=1332
No comments:
Post a Comment