Thursday, December 22, 2016

மாற்றுப் பாலின் ஊட்டம்

அரிசிப் பால் பிறந்து ஒரு வாரத்திலேயே ஒரு குழந்தை “தாய்ப்பால், பவுடர் பால், பசும் பால் போன்ற பால் வடிவிலான அனைத்தையுமே நிராகரிக்கிறது, என்ன செய்யலாம்?’’ என்று என்னிடம் கேட்கப்பட்டது. “எனக்கு அப்போதைக்குத் தோன்றியது, புழுங்கல் அரிசியைக் குழைய வேகவிட்டு பாலின் அடர்த்தியில் கஞ்சி நீர் வடித்துச் சிட்டிகை உப்பு போட்டுப் புட்டியில் ஊற்றிப் புகட்டுங்கள்” என்றேன். செய்தார்கள், வெகு ஆவலுடன் பருகத் தொடங்கியது குழந்தை. “தாயும் தொடர்ந்து இதேபோன்று கஞ்சியை முழு ஆகாரமாக உண்டுவந்து, ஒரு வாரம் கழித்துப் பால் கொடுத்தால், ஒருவேளை குழந்தை தாய்ப்பாலை ஏற்கலாம்” என்று கூறினேன்

பல் முளைவிடும் ஐந்தாறு மாதக் குழந்தைக்குச் செரிவான மாற்றுப் பால் கேழ்வரகை அரைத்து வடித்துப் பெறுவதாகும். இந்தப் பாலை அருந்தத் தொடங்கி விட்டால், அதற்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பாலே தேவையில்லை.
சுமார் நூறு கிராம் கேழ்வரகை எடுத்துப் பன்னிரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறின நீரை வடித்துவிட்டு அம்மியில் வைத்து நிதானமாக அரைத்தால், அதன் உயிர்ச்சத்து சிறிதும் சிதையாமல் கிடைக்கும்.
பல வீடுகளில் அரைப்பதற்காக அல்லாமல் அம்மியை டம்மியாகச் சாஸ்திரச் சடங்குக்காக வைத்திருக்கிறார்கள். சரி போகட்டும், அம்மி இல்லை என்பதற்காகச் சத்து மிக்க கேழ்வரகுப் பாலை விட்டுவிட வேண்டாம்.
எப்படிச் செய்வது?
ஊற வைத்த கேழ்வரகின் நீரை வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் இட்டு அரைபடுவதற்கு ஏதுவாகச் சிறிதளவு நீரை விட்டு அரைக்கவும் (நிறைய நீர் விட்டால் பூமிப்பந்தைப் போன்று உருண்ட கேழ்வரகு, பிளேடுக்குச் சிக்கி அரைபடாமல் வழுக்கிக்கொண்டு சுழன்று ஓடும்). எனவே, குறைவான நீர் விட்டு அரைத்தால்தான் பால் விடும்.
முக்கால் பாகம் அரைபட்ட அரைவையை எடுத்து ஃபில்டரில் பாலை வடிகட்டிவிட்டு, மீண்டும் நீர் ஊற்றி அரைக்க வேண்டும். இரண்டாம் முறை அரைத்ததும் கேழ்வரகு சக்கையாகிவிடும். இதையும் முந்தைய பாலுடன் சேர்த்து வடிகட்டிவிட வேண்டும்.
இப்போது இரண்டு பாலையும் எடுத்து அடுப்பைக் குறைவான தணலில் வைத்துக் கெட்டிப் பதம் ஆகும்வரை காய்ச்சி ஆறவிட்டு, உடன் பனங்கற்கண்டு (அ) சர்க்கரை கலந்து, குழந்தையின் மலப்போக்கு இறுகலாக இருந்தால் சற்றே வெண்ணெய் சேர்த்துப் புகட்டலாம்.
இந்த ராகிப் பால் ஊட்டத் தொடங்கிய இரண்டே வாரங்களில், ஆரோக்கியமான முறையில் குழந்தைக்கு எடை அதிகரிக்கத் தொடங்கும். பலருக்கும் இந்த முறையைப் பரிந்துரைத்தபோது, நல்ல பலன் கிடைத்ததாகச் சொன்னார்கள்.
அவசரம் தேவையா?
என் மகளுக்குக் குழந்தை பிறந்த நான்காம் மாதத்தில் இருந்தே கேழ்வரகுப் பால் ஊட்டத் தொடங்கினோம். வாய்க்கும் போதெல்லாம் குடுகுடுவென்று தவழ்ந்து சென்று எங்களது குடியிருப்பின் 24 மாடிப்படிகளை அடுத்தடுத்து இரண்டு முறை ஏறி வெற்றிக் களிப்பில் சிரிப்பான் பேரன்.
பத்து மாதக் குழந்தைக்குக் குளியல் டப்பில் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாகிலும் ஆட்டம் போட அனுமதி அளிக்க வேண்டும். குழந்தைக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சளி பிடிக்கும். காய்ச்சல் அடிக்கும். நாட்டு மருந்து உட்பட எவ்வித மருந்தும் இன்றி இரண்டு அல்லது மூன்றே நாளில் சளியும் காய்ச்சலும் போயே போய்விடும். ஆம், போயே போயிந்தி!
குழந்தைகள் எப்போதும் திருகிவிட்ட பொம்மைகள் போல் குதித்து விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்ப முடியாது. பிள்ளைகள் இயற்கைக்கு மாறாக அவசரமாக வளர்த்து, அவசரமாகப் பள்ளியில் சேர்த்து, அவசர அவசரமாகப் படித்து, அவசர அவசரமாக எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என்று பெற்றோர் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் படும் அவசரத்தைப் பார்த்தால் யூரியா போட்டும்கூடப் பிள்ளைகளை வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது.
பிள்ளைகள் நமக்குப் பிறந்தவர்கள் என்றாலும் நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அவர்களால் வளர முடியாது. இயற்கையின் போக்கில்தான் வளர முடியும்.
சளி பிடித்தல் இயற்கையானது. வளர்ச்சிக் கட்டத்தில் உடலின் பழைய திசுக்களை எரிக்கும் நடவடிக்கையே காய்ச்சல். காய்ச்சலின் மூலமாகக் குழந்தைகள் நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்று, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டால் உடனடியாக மருத்துவரிடம் தூக்கி சென்று உயிரெதிர்ப்பு (ஆன்டிபயாடிக்) ஆற்றலைச் செலுத்தி, சுயமாக ஓரிரு நாட்களில் தணிய வேண்டிய காய்ச்சலை மருந்தைக் கொடுத்து அமுக்கி வாரக் கணக்காக நீடிக்கச் செய்யும் தவற்றை இழைக்க மாட்டோம்.
சாதாரணக் காய்ச்சலை மருந்து கொடுத்து அமுக்கினால் அது காய்ச்சலைக் காட்டிலும் கடுமையான நோயாக உருவெடுத்து, குழந்தையை நிரந்தரத் தொல்லைக்கு உள்ளாக்கும்.
இது போதும்
மேலே சொன்ன கேழ்வரகுப் பாலை, சோறு வடித்த நீருடன் கலந்து இளங் கன்றுக்குட்டிக்கு பீடிங் பாட்டிலில் ஊற்றிக் கருணைமிக்க பசு நேசர்கள் புகட்டுகிறார்கள். கன்றை ஈன்ற மாடு இறந்துவிட்டாலோ அல்லது ஊர்க்காலி மாடுகளுடன் தாய்ப்பசு மேய்ச்சலுக்குச் சென்ற நேரத்தில் கன்று பாலுக்காக ம்…..ம்ம்மம்மாமா…. என்று மனதைச் சுண்டும் குரல் எழுப்பினாலோ கேழ்வரகுப் பால் ஊட்டும் பழக்கம் இன்றும் நீடிக்கவே செய்கிறது.
சில இடங்களில் மாட்டுக்கு ஸ்டீராய்டு ஊசி குத்தி, காற்று போன பலூனாக பால்காம்பு வற்றும்வரை கறந்துவிட்டு, கன்றுகளை நாய்க்குட்டி அளவுக்கு எலும்பும் தோலுமாக வற்றச் செய்கிற மனதைப் பிசையும் அவலங்களும் நம் காலத்தில் குறைவில்லை.
சரி, நம் குழந்தைக்குத் தேங்காய்ப்பால், கேழ்வரகுப் பால் மட்டுமே அனைத்துச் சத்துகளையும் அளித்துவிடுமா என்ற கேள்வி எழலாம். இந்த இரண்டை மட்டுமே அருந்தினால் போதுமானதுதான்.
இந்த மாற்றுகளுக்கும் இன்னொரு மாற்றுப் பால் உள்ளது. அதுவும் நம் கைக்கெட்டும் தொலைவிலேயே இருக்கிறது. அது என்ன என்று அடுத்த வாரம் பார்ப்போம்.
(அடுத்த வாரம்: மாட்டுக்கே கொடுக்கப்படும் மாற்றுப் பால்!)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

No comments:

Post a Comment