Friday, May 20, 2016

முப்பது நாளில் இந்தி படிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தி எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள இருபது மணி நேரம் போதும் என்கிறார் விஸ்வநாதன் தம்பியண்ணா.
எளிதில் கற்கலாம்
மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள விஸ்வநாதன் தம்பியண்ணாவின் Language Learners Link பயிலகம் மொழியை மட்டுமல்ல. வாழ்வியல் பயிற்சி, வாழும் திறன் இவற்றையும் கற்றுத்தருகிறது. இருபது நாளில் இருபது மணி நேரத்தில் யார் வேண்டுமானாலும் எளிதில் இந்தி பேச எழுதக் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லும் தம்பியண்ணா அதற்கான சாத்தியத்தையும் விளக்குகிறார்.
“இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி இந்தி. இதன் 70% சதவீத வாக்கிய அமைப்புகள் தமிழ் போன்றும் 25 சதவீதம் ஆங்கிலம் போன்றும் 5 சதவீதம் பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் போன்றும் இருக்கும். ஆக, 95 சதவீத வாக்கிய அமைப்புகள் நமக்குத் தெரிந்த மொழிகளிலேயே இருப்பதால் இந்தி கற்பது எளிது. பிறந்த குழந்தை ஓரிரு வயதில் பிரமாதமாக மொழி பேசுகிறது. அதற்கு யார் கற்றுக்கொடுத்தது? 50 சதவீதம் கேள்விகள், 50 சதவீதம் பதில்கள். இதே முறையில் படித்தால் யாரும் மொழியை எளிதில் கற்றுக்கொண்டுவிட முடியும்” என்கிறார் தம்பியண்ணா.
மொழியோடு ஆளுமையும்
யாராவது இந்தி படிக்க விரும்பினால் அவர்கள் இடத்துக்கே சென்று இருபது நிமிடங்கள் டெமோ கிளாஸ் எடுக்கிறது தம்பியண்ணா குழு. அந்தக் கொஞ்ச நேரத்திலேயே, இந்தி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். பொதுவாக இந்தி ஆசிரியர் என்றாலே பலருக்கு எரிச்சல் வரும். அப்படியொரு அனுபவத்தைச் சம்பாதிக்காமல் இருப்பதற்காக, இந்திக்கு நடுவே, வாழ்வியல் பயிற்சி, வாழும் திறன் இவற்றையும் மெல்ல ஊட்டுகிறார் தம்பியண்ணா. இதனால், இவரது வகுப்புகளை ஆர்வமாகக் கவனிக்கிறார்கள் மாணவர்கள்.
தமிழ் - இந்தி அகராதி உருவாக்கியிருக்கும் தம்பியண்ணா கடந்த முப்பது ஆண்டுகளில் லட்சம் பேருக்கு இந்தி கற்றுத்தந்திருக்கிறார். வாழ்க்கைத் திறனை வளர்த்துக்கொள்வதற்காக இவர் கதை ஒன்றையும் சொல்கிறார். எலி குடும்பம் ஒன்று சுற்றுலா புறப்படுகிறது. அதில் ஒரு சிறு எலியானது வழியில் பூனையை வழிமறிக்கிறது. அதற்குப் பெரிய எலியானது, அனைவரையும் அருகிலுள்ள மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளச் சொல்லிவிட்டு ஒரு கல்லை அருகில் இருக்கும் தகரத்தின் மீது எறிகிறது. அந்தச் சத்தம் கேட்டு நாய் குரைத்ததும் பூனை ஓடிவிடுகிறது. எலிக் குடும்பம் பயணத்தைத் தொடர்கிறது.
இது வெறும் கதை போலத் தோன்றலாம். ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் தன்னை அறிதல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளுதல், தொடர்பாற்றல், உறவு பேணுதல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆக்க சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல் ஆகிய பத்து வாழ்க்கைத் திறன்களும் இந்த எலிக் கதைக்குள் இருப்பதாகச் சொல்லி சுவாரஸ்யமாக விளக்குகிறார் தம்பியண்ணா.
“பெரிய எலி தன்னை அறிவதுடன் மற்றவர்களை பற்றியும் தெரிந்துவைத் திருந்ததால் மரத்தின் பின்னால் ஒளியச் சொல்லி தனது தொடர்பாற்றலை வெளிப்படுத்தி உறவைப் பேணுகிறது. அடுத்ததாக, பிரச்சினையைச் சமாளிக்க ஆழ்ந்து சிந்தித்து ஆக்கத்துடன் ஒரு முடிவை எடுத்துப் பிரச்சினையைச் சிக்கலின்றி தீர்க்கிறது.
தனக்கிருந்த மன அழுத்தத்தைத் தனக்குள்ளேயே கையாண்டதுடன் ‘என்னால்தான் பிழைத்தீர்கள்’ என்று உணர்ச்சிவசப்படாமல் ‘நாயின் மொழியும் தெரிந்திருந்ததால் தப்பித்தோம்’என்கிறது பெரிய எலி. ஆகவே, இன்னொரு மொழியும் தெரிந்திருந்தால் அது நமது வாழ்க்கைக்கு நிச்சயம் பயன்படும்’’ என்று எலிக் கதைக்கு முத்தாய்ப்பு வைக்கிறார் தம்பியண்ணா.
தன் பேருக்கு ஏற்ப உற்ற அண்ணனைப் போலவும் தம்பியைப் போலவும் செயல்பட்டு 20 நாட்களில் 20 மணி நேரத்தில் மாணவர்களை இந்தி படிக்கப் பேச வைத்துவிடுகிறார் விஸ்வநாதன் தம்பியண்ணா. தம்பியண்ணாவை அழைக்க: 9994866277

No comments:

Post a Comment