ரிசர்வ் வங்கி உருவாக்கும் ரூபாய்களின் அளிப்பை பற்றி பார்ப்போம். reserve money என்பது மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் + வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் வைப்பு நிதி + ரிசர்வ் வங்கியிடம் உள்ள மற்ற வைப்பு நிதி என்று நேற்று பார்த்தோம். பொதுவாக ரிசர்வ் வங்கியிடம் நான்கு சொத்துக்கள் இருக்கும்: (1) அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த நிகர கடன், அதாவது அரசு கடன் பத்திரத்தை ரிசர்வ் வங்கி வாங்குவது, (2) ரிசர்வ் வங்கி கொடுத்த வியாபார கடன், (3) ரிசர்வ் வங்கியிடம் உள்ள வெளிநாட்டு கடன் பத்திரங்கள், (4) அரசு வெளியிட்ட காசுகள். இந்த நான்கு சொத்துகளிலிருந்து ரிசர்வ் வங்கியின் பணமில்லாத கடன்களை கழித்தால், மீதம் உள்ள சொத்துக்கு நிகராக பணத்தை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் அல்லது வைப்பு நிதியாக வைத்துக்கொள்ளும்.

இதில் அரசின் கடன் பத்திரத்தை வாங்கும்போதேல்லாம் ரிசர்வ் வங்கி பணத்தை வெளியிடுகிறது. அதே போல் வியாபார கடன் (வங்கிகளுக்கு) கொடுக்கும்போதெல்லாம், அந்நிய செலாவணியை வாங்கும்போதெல்லாம், அரசு வெளியிடும் காசுகளை வாங்கும்போதெல்லாம் ரிசர்வ் வங்கி பணத்தை வெளியிடுகிறது. இதில் பெரிய சிக்கலே அரசு கடன் பத்திரம் தான். அரசுக்கு தன்னுடைய பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் கடன் பத்திரம் வெளியிடும். இதனை நிதி அமைப்புகளோ, மற்றவர்களோ வாங்கும் போது அவர்களிடம் உள்ள பணம் அரசுக்குச் சென்றுவிடும், புதிதாக பணம் அச்சிட்டு வெளியிடவேண்டியதில்லை. ஆனால், அரசு கடன் பத்திரத்தை ரிசர்வ் வங்கி வாங்கும் போது அதற்கு நிகராக பணம் வெளியிட வேண்டியுள்ளது. இதுவே பணவீக்கம் ஏற்பட காரணமாகிறது. அரசின் பற்றாக்குறையில் எந்த அளவிற்கு ரிசர்வ் வங்கி பணமாக வெளியிடுகிறதோ அது பணமாக்கப்பட்ட பற்றாக்குறை (Monetized Deficit). இதுதான் சட்டரீதியான பணம் உருவாகும் கதை.