Thursday, July 3, 2014

business deal நல்ல வேகை கிடைக்க...டீல்கள்

நல்ல வேகை கிடைக்க...
முன்று வருடங்களுக்கு ஒருமுறை வேலை மாற்றுகிறவர், ஒரே வேலையில் நிலைத்திருப்பவரைவிட, அதிகச் சம்பளம் வாங்குகிறார், உயர் பதவிகள் பெறுகிறார். நல்ல வேலை கிடைக்கவேண்டுமா? வேலையில் முன்னேறி சம்பள உயர்வும், பதவி உயர்வுகளும் பெறவேண்டுமா? அல்லது வேலையை மாற்றவேண்டுமா? இவற்றில் நீங்கள் எதைச் செய்ய நினைத்தாலும், உங்களுக்கு டீல்களை முடிக்கத் தெரியவேண்டும். எப்படி என்று வழிகாட்டுகிறார்கள் பல அறிஞர்கள், அனுபவசாலிகள்.
எவ்வளவு சம்பளம் வேண்டும்?
பல கம்பெனிகளின் இன்டர்வியூக்களில் நான் அடிக்கடி பார்க்கும் நிகழ்ச்சி இது. இன்டர்வியூவுக்கு வந்தவரிடம் கம்பெனி அதிகாரி கேட்பார், ”நீங்கள் நல்ல வேலையில் இருக்கிறீர்கள். ஏன் வேலையை மாற்ற விரும்புகிறீர்கள்?” பதில் வரும், “எனக்குச் சம்பளம் குறைவாக இருக்கிறது. அதிகச் சம்பளம் வேண்டும்..” “அதிகச் சம்பளம் என்றால் எவ்வளவு? தெளிவாகச் சொல்லுங்கள்.”
வேலை தேடி வந்தவர் தட்டித் தடுமாறுவார். ஏதோ ஒரு நம்பரைச் சொல்லுவார். அடுத்த கேள்வி நாங்கள் கேட்போம், “உங்களுக்கு நாங்கள் அத்தனை சம்பளம் ஏன் தரவேண்டும்?” பதிலே வராது. வந்தாலும், ஏனோ தானோ பதில்கள். கடைக்கு சோப் வாங்கப்போகிறீர்கள். விலை கேட்கிறீர்கள். குறிப்பிட்ட விலை சொல்லாமல் கடைக்காரர் மழுப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ”வியாபாரமா பண்ணுகிறான்?” என்று கமென்ட் அடிப்பீர்கள். பக்கத்துக் கடைக்குப்போவீர்கள். சோப் விற்கவே இத்தனை பீடிகைகள். உங்கள் திறமையை, அனுபவத்தை, உழைப்பை, ஒரு நிறுவனத்துக்குத் தரும்போது, அவற்றுக்கு ஈடாக எத்தனை ஊதியம் வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எந்தக் கம்பெனி உங்களுக்கு வேலை தருவார்கள் நண்பரே?
இன்டர்வியூவுக்குப் போகும் முன்பே, எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருங்கள். இந்தத் தொகையை எப்படித் தீர்மானிப்பது? பக்கத்துக் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டா கண்டுபிடிக்க முடியும்? தேவை, கொஞ்சம் ஆராய்ச்சி. அந்த கம்பெனியில் அல்லது அதே போன்ற கம்பெனிகளில், நீங்கள் தேடுவதுபோன்ற வேலைகளுக்கு என்ன ஊதியம் கொடுக்கிறார்கள் என்று விசாரியுங்கள். பத்திரிகைகளில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களிலும் இந்த விவரம் கிடைக்கலாம். www.glassdoor.co.in என்னும் இணையதளத்துக்கு விசிட் அடியுங்கள். பல கம்பெனிகள், பல்வேறு பணிகளுக்குத் தரும் சம்பள விவரங்கள் கிடைக்கும்.
உங்கள் படிப்பு, அனுபவம், தனித்துவமான ஏதேனும் திறமைகள், மேற்சொன்ன விவரங்கள், கம்பெனிக்கு உங்கள் பங்களிப்புகள் என்னவாக இருக்கும் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் கேட்கும் சம்பளத்தைச் சுருக்கமாகச் சொல்லி, நியாயப்படுத்துங்கள். இன்டர்வியூ செய்பவர் அசந்துவிடுவார். உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகும்.
ஒரு சின்ன க்ளூ. நீங்கள் மாதம் 25,000 ரூபாய் எதிர்பார்க்கிறீர்களா? 30,000 – த்திலிருந்து 40,000 வரை எதிர்பார்க்கிறேன் என்று சொல்லுங்கள். அவர் பேரம் பேசுவார். ஒருவேளை 30,000 தரலாம். வேலை தேடுபவர் எந்தத் தொகையைக் கேட்டாலும், அதற்கு அதிகமாக எந்தக் கம்பெனியும் கொடுத்து நான் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் பற்றிச் சொன்னவுடன், உங்களைப் பேட்டி காண்பவர் கீழ்க்கண்ட பதில் தரலாம்: ”நாங்கள் இன்னும் நிறையப் பேரை இன்டர்வியூ செய்யவேண்டியிருக்கிறது. சம்பளம் பற்றிப் பிறகு பேசலாம்.” உங்கள் அதிருப்தியையோ, ஏமாற்றத்தையோ காட்டாதீர்கள். “தாங்க் யூ. உங்கள் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுங்கள்.
என்ன வேலை?
சாதாரணமாக, இன்டர்வியூக்களில், அவர்கள் கேள்விகள் கேட்டு முடித்தபின், “உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டுமா? உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா? என்று கேட்பார்கள். உங்கள் தனித்தன்மையை வெளிச்சம்போட்டுக்காட்டக் கிடைக்கும் அற்புத வாய்ப்பு இது. ஆனால், 100 –க்கு, 99 பேர், இந்த வாய்ப்பைக் கோட்டை விட்டுவிடுகிறார்கள். இன்டர்வியூவுக்கு வருமுன், கம்பெனியின் இணையதளம், உங்கள் நண்பர்கள் ஆகிய தொடர்புகள் மூலமாக கம்பெனி பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப்பற்றி, என்ன கேள்விகள் கேட்கலாம் என்று பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். இவை புத்திசாலித்தனமான கேள்விகளாக இருக்கவேண்டும், உங்களுக்கு அறிவுத் தேடல் இருக்கிறது என்பதை நிரூபிக்கவேண்டும். வேலையின் முக்கிய அம்சங்கள் என்ன, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி, இடமாற்றங்கள் வருமா ஆகிய அம்சங்களை நீங்கள் கேட்கும் வாய்ப்பு இது. எல்லோருமே தங்கள் சாதனைகளைப் பற்றிப் பேச ஆசைப்படுவார்கள். பார்லே பிஸ்கட் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குப் போகிறீர்களா? அவர்களுடைய பார்லே ஜி பிஸ்கெட்தான் 5,000 கோடி ரூபாய் வருட விற்பனை, உலகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் பிஸ்கெட், 1929 முதல் இன்றுவரை 85 வருடங்களாக நிலைத்து நிற்கும் பிராண்ட். “இவை அத்தனையையும் எப்படிச் சாதித்தீர்கள்?” என்று கேளுங்கள். நீங்கள் இண்டர்வியூவுக்காக ஹோம் ஒர்க் செய்திருக்கிறீர்கள் என்பதையும் இதன் மூலம் நீங்கள் தெரியப்படுத்துவீர்கள். பேட்டி காண்பவர்களை இம்ப்ரெஸ் செய்ய நல்ல வழி இது. இதுதானே உங்கள் லட்சியம்?
டீலை முடிப்பது
இன்டர்வியூக்கள் முடியும் நேரம். “மிக நன்றாகப் பதில்கள் கொடுத்து, எக்கச்சக்க நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துபவர்களும் சறுக்கும் நேரம் இது” என்று சொல்கிறார் மனிதவள ஆலோசகர் சந்தர். ”இன்டர்வியூ முடிகிறது” என்பதைப் பலர் புரிந்துகொள்வதேயில்லை” என்கிறார் அவர். இதுதான் வேலைதேடும் டீல் முடிகிற நேரம். உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தைக் கம்பெனி நிர்வாகிகள் மனங்களில் ஆழமாகப் பதிக்கக் கிடைக்கும் வாய்ப்பு. பேட்டி காண்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். பதற்றம் காட்டுகிறார்களா, செல் போனையும், வாட்சையும் அடிக்கடி பார்க்கிறார்களா? சம்பளம் பற்றிப் பேசி முடித்துவிட்டார்களா? வேறு ஏதாவது கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டார்களா? “தாங்க் யூ ஃபார் கமிங்” என்று நன்றி சொன்னார்களா? ”உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடமிருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லி, விடை பெறுங்கள்.

சில சமயங்களில், நீங்கள் மிகப் பொருத்தமானவர் என்று நினைத்தால், நிர்வாகிகள் உங்களுக்கு வேலையே தந்துவிடலாம். அப்படி நடந்தால், நம்மை விட்டால், இவர்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லை போலிருக்கிறது என்று தலைக்கனத்தோடு நடந்து கொள்ளாதீர்கள். வேலை பற்றிய முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். முடிவெடுக்க இரண்டு நாட்கள் தேவை என்று அனுமதி பெறுங்கள். வெளியில் கம்பெனி பற்றி விசாரியுங்கள்.

ரகுபதி, கெமிக்கல் எஞ்சினீயர். சென்னையில் வேலை. பரோடாவில் ஒரு உரத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அவர் எதிர்பார்த்ததைவிட அதிகச் சம்பளம் கொடுத்தார்கள். கம்பெனி குறித்துப் பலரிடம் விசாரித்தார். அப்போது கிடைத்தது அந்த அதிர்ச்சிச் செய்தி – அந்தத் தொழிற்சாலையில் பாதுகாப்பு வசதிகள் குறைவு, விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. ரகுபதி வேலையில் சேர இயலாமையைத் தெரிவித்தார்.
புதிய வேலை என்பது புதிய கம்பெனி மட்டுமல்ல, புதிய வாழ்க்கையின் தொடக்கம். வேலை தேடும் டீல்களைச் சாமர்த்தியமாகக் கையாண்டால், ராஜபாட்டையில் அடியெடுத்து வைப்பீர்கள். குட் லக்!

முரட்டுப் பிடிவாதக்காரர்களைச் சமாளிப்பது எப்படி?

நண்பர் கேசவன் வித்தியாசமான மனிதர். நீங்கள் ஒருமுறை அவரைச் சந்தித்தால், அதற்கு அப்புறம் அவர் வரும் திசையை விட்டே ஓடி விடுவீர்கள். அறிவாளி. ஆனால், தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்னும் கர்வம். தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, ஊழல், காஷ்மீர் தகராறு ஆகிய எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் வழி அவருக்குத் தெரியும்.
அதுவும், தனக்கு மட்டும்தான் அவை தெரியும் என்பதில் அவருக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகம் கிடையாது. ஒபாமா தொடங்கி, நரேந்திர மோடி தொடர்ந்து, ரஜினிவரை, வெளிநாட்டுக்கொள்கை, நிர்வாகம், சினிமா என்று அத்தனை சப்ஜெக்ட்களிலும் ஆலோசனைகளை அள்ளி வீசுவார்.
என் நமக்கு ஏன் இரண்டு காதுகள், ஒரே ஒரு வாய்? அதிகமாகப் பிறர் பேசுவதைக் கேட்கவேண்டும், குறைவாகப் பேச வேண்டும் என்பதால்தானே? கேசவனுக்குத் தெரியாத உண்மை இது. அவரோடு பேசத் தொடங்கினீர்களோ, இரு பக்கக் கருத்துப் பரிமாற்றமே கிடையாது. மோனோ ஆக்டிங் மாதிரி, தானே பேசிக்கொண்டே இருப்பார். கேசவன் ரோடில் வந்தால், அவரைச் சந்திப்பதைத் தவிர்த்து ஓடிவிடலாம். ஆனால், கேசவன் போன்றவர்களை நம் வாழ்க்கையில், பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். பேச்சு வார்த்தைகளில் கேசவன்கள் வரும்போது, வாழ்க்கையே வெறுத்துவிடும்.
நம்பிக்கையை இழக்காதீர்கள். இத்தகைய முரட்டுப் பிடிவாதக்காரர்களை, தலைக்கனம் பிடித்தவர் களைச் சமாளிக்க, அவர்களோடு டீல்களை முடிக்க, வழிகள் இருப்பதாக அனுபவசாலிகள் சொல்கிறார்கள்.
1. சந்திப்பின் அடிப்படை விதிகளைத் தெளிவாக்குங்கள்
ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி விதிமுறைகள் உண்டு. கிரிக்கெட் ஆடுவதுபோல், கால்பந்து ஆடக்கூடாது. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று இவை தெளிவாகச் சொல்லும். இதேபோல், அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை, அனுமதிக்கப்படாதவை எவை என்று பேச்சு வார்த்தைகள் தொடங்கும் முன்பாகவே, இவர்களோடு முடிவு செய்யுங்கள்.
உதாரணமாக, தனிநபர் தாக்குதல் கூடாது, மீட்டிங்கில் இல்லாதவர் மீது குற்றப் பத்திரிகை படிக்கக்கூடாது, கோபத்தில் வெளிநடப்பு கூடாது, யாரையும் ஒருமையில் அழைக்கக்கூடாது, வயதில், பதவிகளில் குறைவானவர்களையும் நீங்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை அமைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில சமயங்களில், இந்த விதிகளை யாராவது மீறலாம். ஆனால், பேச்சு வார்த்தைகள் பண்பாட்டோடு நடக்க இந்த வரம்புகள் உதவும்.
2. பிடிவாதத்தின் காரணங்களைக் கண்டுபிடியுங்கள்
சிலர் அடிப்படையிலேயே, முரட்டுத்தனம் உள்ளவர்கள். சிலர் டீல்களின்போது மட்டும் அப்படி நடந்துகொள்வார்கள். என் நண்பர் ராகவன் அப்படித்தான். பழக இனிமையானவர். ஒரு பெரிய கம்பெனியில் பர்ச்சேஸ் ஆபீசராக இருக்கிறார். தனக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் கறாராகப் பேசுவார். அடிமாட்டு விலை கேட்பார். அவர்கள் தரும் நியாயங்களைக் கேட்கவே மாட்டார்.
குறைந்த விலையில் பொருட்களை வாங்குபவர் என்று உயர் அதிகாரிகளிடம் பெயர் வாங்கவேண்டும் அவர் பிடிவாதத்தின் அடிப்படைக் காரணம் இதுதான். ”முரட்டுத்தனமானவர்கள்” என்று பெயர் வாங்கியவர்களோடு டீல் நடத்தவேண்டுமானால், அவர்களைப் பற்றி விசாரியுங்கள். எப்படி அவர்களை மசியவைப்பது என்பது தெரியவரும்.
3. அவர் பேசுவதைக் கேளுங்கள்
எதிராளி பிடிவாதக்காரர், பேசிக் கொண்டேயிருப்பார் என்னும் முன் அனுமானங்களோடு அவரைச் சந்தித்தால், நம் மனக்கதவுகள் மூடிவிடும். அவர் நல்ல கருத்துகளைச் சொன்னாலும், அவை நம் சிந்தனையில் பதியாது. எனவே, உங்கள் விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் பேச்சைக் கூர்ந்து கவனியுங்கள். அவர் சொல்வது புரியாவிட்டால், கேள்விகள் கேட்டு அவரை விளக்க வையுங்கள். நல்ல கருத்துகள் சொன்னால், அவரைப் பாராட்டுங்கள். மன இறுக்கம் தளர்ந்து, நட்பு மனப்போக்குக்கு அவர் வரலாம்.
4. உங்கள் பேச்சைக் கேட்க வையுங்கள்
நிச்சயமாக அவர்தான் முதலில் பேசுவார். அவர் சொல்வதில் எந்த அம்சத்தையாவது புகழுங்கள். அவர் சில வினாடிகள் நிறுத்துவார். அப்போது, விவாதத்தில் அவர் அறியாமலே, புகுந்துவிடுங்கள்.
5. முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்
ஜல்லிக்கட்டுக் காளையின் முன்னால் சிவப்புத் துணியைக் காட்டலாமா? அவர்கள் இன்னும் முரட்டுத்தனமாக எகிறுவார்கள். முள்ளில் துணி விழுந்தால் என்ன செய்வோம்? துணி கிழியக்கூடாது என்பது நம் குறிக்கோள். மெள்ள மெள்ள எடுப்போம்.
அதுபோல், பொறுமையோடு அவர்களை வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அவர்கள் நடைமுறை உங்கள் பொறுமையைச் சோதித்தால், சில நிமிடங்கள் வெளியே போய்விட்டுத் திரும்ப வாருங்கள்.
6. சுலபமாக விட்டுக் கொடுக்காதீர்கள்
அவர்களுடைய அநியாயக் கோரிக்கைகள் எவற்றுக்கும் இணங் காதீர்கள். முரட்டுத்தனத்தால் காரியத் தைச் சாதித்துவிடலாம் என்னும் எண்ணத்தை அவர்கள் மனதில் வளர விடாதீர்கள். அப்புறம், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், கோரிக்கை களுக்கும் எல்லையே இல்லாமல் போய்விடும். அநியாயமான கோரிக் கைகளை அவர்கள் முன்வைத்தால், தெளிவாக, கண்டிப்பாக மறுத்து விடுங்கள்.
7. ஒண்டிக்கு ஒண்டி வேண்டாம்
எத்தனை முரடர்களாக இருந்தாலும், நான்கு பேர் கருத்துகள் பற்றிக் கவலைப்படுவார்கள். தனியாகப் போகாமல் அணியாகச் செல்லுங்கள். அவரும் தன் அணியை அழைத்து வரட்டும். அவருடைய முரட்டுத்தனத்துக்கு, கோபத்துக்கு, ஆட்கள் எண்ணிக்கை கடிவாளம் போடும்.
8. அவர் ரெடி, நீங்கள் ரெடியா?
அநியாயமான கோரிக்கைகளை அவர் முன்வைக்கலாம். அவற்றுக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்று உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
9. பல தீர்வுகளைச் சொல்லுங்கள்
சாதாரணமாக, பிரச்சினைக்கு ஒரு தீர்வோடுதான் போவது வழக்கம். அது இணக்கமானதாக இருந்தாலும், பிடிவாதக்காரர்களின் ஈகோ இதை ஒப்புக்கொள்ளாது. அவர்களைப் பொறுத்தவரை, பேச்சு வார்த்தைகள் என்பது ஒரு யுத்தம். ஒருவர் ஜெயிக்கவேண்டுமானால், மற்றவர் தோற்கவேண்டும். உங்கள் குறிக்கோள், யார் ஜெயிக்கிறார்கள் என்பதல்ல, பிரச்சனைக்குச் சுமுகமான முடிவு கிடைக்கவேண்டும் என்பது. ஆகவே, பல தீர்வுகளை எடுத்துவையுங்கள். அவர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கட்டும். தான் முடிவெடுத்ததாக அவர் பெருமைப்படட்டும், பிரச்சனை முடிந்ததாக நீங்கள் கொண்டாடுங்கள்.
10. பேச்சு வார்த்தை முடிவுகள் எழுத்து வடிவம் எடுக்கட்டும்
இவர்களில் பலர் நேர்மை குறைவானவர்கள். தங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பது மட்டுமே இவர்கள் குறிக்கோள். தங்களால் செய்யமுடியாத காரியங்களிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். உடனேயே அவற்றை மறந்துவிடுவார்கள். பேச்சு வார்த்தைகள் முடிந்தபின், விவாதங்களின் சுருக்கம், முடிவுகள் ஆகியவற்றை அறிக்கையாக எழுதுங்கள். கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் அனுப்புங்கள்.
11. வெளிநடப்புச் செய்யத் தயாராக இருங்கள்
எத்தனைதான் பொறுமையோடு நீங்கள் பேசினாலும், விட்டுக் கொடுத்தாலும், சிலர் இணங்கியே வரமாட்டார்கள்; உங்கள் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள்; தாங்கள் முதலில் சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வார்கள்.

இவர்களிடம் தொடர்ந்து பேசுவது டைம் வேஸ்ட். அவர்களின் இந்த அணுகுமுறை தொடர்ந்தால், பேச்சு வார்த்தைகளிலிருந்து விலகிக் கொள்வோம் என்று இரண்டு முறை பயமுறுத்துங்கள். அப்படியும் அவர்கள் கேட்காவிட்டால், மறு சிந்தனையே இல்லாமல் நடையைக் கட்டுங்கள்.

டீல்களின் தடைக்கற்கள்
உங்களுக்கும் இன்னொருவருக்கும் சின்ன பிரச்சினை. பேசி முடிக்கச் சந்திக்கிறீர்கள். பேச்சு ஆரம்பிக்கிறது. திடீரென, காரணம் புரியாமல் இரு தரப்பிலும் வார்த்தைகள் தடிக்கின்றன. பேச்சு விவாதமாகிறது, சண்டையாகிறது. உரசல்கள் விரிசல்களாகின்றன. ஏழு விதமான காரணங்களால், இவை ஏற்படலாம் என்று மனோதத்துவ மேதைகள் சொல்கிறார்கள். அந்தத் தடைக்கற்கள் இவைதாம்:
1. எல்லைத் தடைகள் (Physical Barriers)
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாம் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வீட்டில் 10, 15 பேர் வாழும் இடத்தை, தூங்கும் இடத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் குணம் குழந்தைகளுக்கு இயற்கையாக வந்தது. இன்று கூட்டுக் குடும்பங்கள் உடைந்துவிட்டன. குழந்தைகளுக்குத் தனி அறைகள் தருகிறோம். தனி அறையின் கதவு வெறும் கதவு அல்ல, உறவைப் பிரிக்கும் இடைவெளி.
அலுவலகங்களிலும், உயர் அதிகாரிகள் தனி அறைகளில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு பெரிய ஹாலில் உட்கார்ந்திருப்பார்கள். இருவரும் சமமாகப் பழக முடியாது என்று அறிவிக்கும் நிர்வாகத்தின் மொழி இது. இந்த அடிப்படையில், பேச்சு வார்த்தைகளின்போது, ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்க்கும்படியாக இருக்கைகளைப் போடவேண்டும்.
2. கண்ணோட்டத் தடைகள் (Perceptual Barriers)
பழைய எம். ஜி. ஆர் சினிமாக்களை மனதுக்குக் கொண்டு வாருங்கள். ஹீரோ அரும்பு மீசை வைத்திருப்பார், கண்களில் கனிவு இருக்கும். வில்லன் நம்பியாருக்குப் பெரிய மீசை, உருட்டும் விழிகள். நம்பியார் நிஜத்தில் மிக நல்ல மனிதர், கெட்ட பழக்கங்கள் இல்லாதவர். ஆனால், நம்பியாரைப் பார்த்தவுடன் வில்லன் நினைவுதான் நமக்கு வரும். நம்பியார் மாதிரித் தோற்றம் கொண்டவரைப் பேச்சு வார்த்தைகளில் சந்திக்கிறீர்கள். அவர் வில்லனாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவரோடு பேசத் தொடங்குவோம். தொடரும் அனுபவங்கள் அவர் நல்லவர் என்று நிரூபிக்கும்வரை இந்தத் தடைகள் தொடரும்.
3. உணர்ச்சித் தடைகள் (Emotional Barriers)
என் நண்பன் நாகராஜனுக்கு இரண்டு முகங்கள் உண்டு. நண்பர்களுக்காக உயிரையே கொடுப்பான். ஆனால், தன் உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்று நினைத்தால், நட்பு அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களுக்கு எதிராகக் கொடி தூக்கத் தயங்கமாட்டான். உயர் அதிகாரிகளோடு சண்டை போடுவது, சட்ட திட்டங்களை எதிர்ப்பது என அவனுக்குப் போராளி குணம்.
நாகராஜனின் அப்பா நாராயணன் சார் பள்ளிக்கூடத்தில் எங்கள் கணக்கு வாத்தியார். அவன் தவறு செய்வதாக அவர் நினைத்தபோதெல்லாம், அவனுக்குத் தண்டனை கொடுத்தார். பேச்சுவார்த்தைகளின்போது, ஒருவருடைய பழகும் முறையோ, உடல் மொழியோ, நாராயணன் சாரை நினைவுபடுத்தினால், நாகராஜனின் ஆழ்மனதுக்குள் தூங்கும் போராளி விழித்துக்கொள்வான். திடீரென நாகராஜனின் அணுகுமுறை மாறுவது, தன் அப்பாவைப் பற்றிய உணர்வு கலந்த நினைவுகளால், என்பது எதிர்த் தரப்புக்கு எப்படித் தெரியும்?
4. மொழித் தடைகள் (Language Barriers)
பேசுவதற்கு மொழி அத்தியாவசியம். அந்நிய மொழி மட்டுமல்ல, நம் மண்ணிலேயே, நம் தாய்மொழியிலேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனை சிரமங்கள்? கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். “ லே மக்கா, இப்பம் சோலியா இருக்கேன். பொறவு வா.“ புரியவில்லையா? வார்த்தை வார்த்தையாகப் பார்ப்போம். லே - பொருள் கிடையாது. வெறும் விளிச் சொல் மக்கா - மகனே இப்பம் - இப்பொழுது சோலியா - ஜோலியாக / வேலையாக பொறவு - பிறகு அதாவது, “ லே மக்கா, இப்பம் சோலியா இருக்கேன். பொறவு வா“ என்றால், “ மகனே, இப்பொழுது வேலையாக இருக்கிறேன். பிறகு வா“ என்று அர்த்தம். குமரி மாவட்டத்தில் பேசும் வட்டார மொழி மதுரையில், திருச்சியில், சேலத்தில், கோவையில், சென்னையில் புரிவதில்லை. இந்தியாவில் 452 மொழிகளும் 2000 - க்கும் அதிகமான வட்டார மொழிகளும் இருக்கின்றன. உலக அளவில் 6912 மொழிகள் உள்ளன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலின் அடிப்படையே மொழிதான். மொழி பெயர்ப்பவர் எத்தனைதான் வல்லுநராக இருந்தாலும், வீரியம் குறையாமல் நம் கருத்துகளை அவர் எடுத்துவைக்க முடியுமா?
5. கலாசாரத் தடைகள் (Cultural Barriers)
தில்லியில் ராக்கேஷ் ஷர்மா காகிதம் தயாரிக்கும் எந்திரங்கள் தயாரிக்கிறார். கம்பெனி பெயர் ஸ்வஸ்திக் இண்டஸ்ட்ரீஸ். ஒரு இஸ்ரேல் நாட்டுக் கம்பெனியின் தொழில் நுட்ப உதவியோடு, நிறுவனத்தை மேம்படுத்த விரும்பினார். அனில் கபூர் என்ற நிர்வாக ஆலோசகரை அணுகினார். அவர் கொடுத்த முதல் அட்வைஸ், “உங்கள் கம்பெனி பெயரை மாற்றுங்கள்.“ அனில் கபூர் சொன்ன காரணம், “ இஸ்ரேல் நாட்டு மக்கள் யூதர்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் லட்சக் கணக்கான யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் சின்னம் ஸ்வஸ்திகா. பெயரிலும், வடிவத்திலும், நம் ஸ்வஸ்திக் அவர்களுக்கு ஸ்வஸ்திக்காவை நினைவூட்டும். இந்த டீல் நடக்காது.“ பாரம்பரிய பிஸினஸ்களில் மட்டுமல்ல, தொழில்நுட்பத் துறைகளிலும் இந்தச் சிக்கல்கள் உண்டு. நம் சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் ப்ராஜெக்ட்கள் தருகிறார்கள். என் அமெரிக்க நண்பர் ராபர்ட் சொன்னார், ”இந்திய கம்பெனிகளோடு பேசும்போது ஒரு முக்கிய பிரச்சனை. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னொருவர் குறுக்கிட்டுப் பேசக்கூடாது என்பது எங்கள் பழக்கம். இந்தியர்கள் இதைப் பின்பற்றுவதேயில்லை.” பிற நாட்டுக்காரர்கள் அல்லது பிற கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடப்போகிறீர்களா? அவர்களின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெர்ந்துகொள்ளுங்கள். எந்த விதத்திலும் இந்த உணர்வுகள் காயப்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. ஆண் - பெண் குணநலத் தடைகள் (Gender Barriers)
ஆண்களும் பெண்களும் அறிவிலும், திறமையிலும் சரி நிகர் சமமானவர்கள்தாம். ஆனால், அவர்களுடைய மனப்பாங்குகள் அடியோடு மாறுபட்டவை என்று மனோதத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக, ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை - அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள்: பெண்கள் விரும்புபவை அன்பு, பழகுதல், அழகு, உறவுகள். பிரச்சினைகள் வரும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, ஆண்கள் தனிமையை விரும்புகிறார்கள். தாங்களே தீர்வுகள் காண ஆசைப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மட்டுமே பிறரோடு ( மனைவியோடு) அவற்றைப் பகிர்ந்துகொண்டு தீர்வுகள் குறித்து ஆலோசனை கேட்கிறார்கள். பெண்கள் பிரச்சினைகள், மன உளைச்சல் குறித்துப் பிறரோடு (கணவரோடு ) பேச விரும்புகிறார்கள். கணவர்கள் தங்கள் பேச்சைக் கேட்காவிட்டால், மனம் உடைந்து போகிறார்கள். ஆட்சியில், நிர்வாகத்தில், கார்ப்பரேட் உலகத்தில் பெண்கள் நுழைவு அதிகமாகிவருகிறது. பேச்சு வார்த்தைகளிலும் அவர்கள் அதிகமாகப் பங்கேற்கிறார்கள். எனவே, ஆண்களும் பெண்களும், பிரச்சினையைத் தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காமல், ஆண்-பெண் குணநலத் தடைகளையும் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. பழகும் முறைத் தடைகள் (Interpersonal Barriers)
நாம் ஒவ்வொருவரும் குணநலன்களால் மாறுபட்டவர்கள், சிலர் ஒருவரைச் சந்திக்கும்போது, தயக்கமே இல்லாமல் அவர்களோடு பேசுவார்கள், நெருங்கிப் பழகுவார்கள். சிலர் புதியவர்களிடம் பேச மாட்டார்கள், எளிதில் மனம் திறக்கமாட்டார்கள். சாதாரணமாக, முதல் தரப்பினரோடு பேச, பழக நாம் விரும்புகிறோம். அடுத்த தரப்பினரைத் தவிர்க்கிறோம். இந்த முன் அனுமானங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடைகளாகிவிடுகின்றன. பேச்சு வார்த்தைகளுக்குப் போகிறோம். அவர்கள் கலகலப்பாகப் பழகாவிட்டால், நம் கருத்துகளை எடுத்துவைக்கத் தயங்குகிறோம். பேச்சு முன்னேறுவதேயில்லை, டீல்கள் முடிவதேயில்லை. ஒவ்வொருவர் ஆளுமையும் மாறுபடும், அவர்கள் பின்புலத்தால், குடும்பச் சூழ்நிலையால், வளர்க்கப்பட்ட விதத்தால் வித்தியாசப்படும் என்பதை உணர்ந்து, முன் அனுமானங்கள் ஏதுமின்றி, திறந்த மனத்தோடு அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். புரிந்துகொண்டால், பயன்படுத்தத் தெரிந்துகொண்டால், இந்த ஏழு தடைக்கற்களும் டீல்களின் வெற்றிக்குப் படிக்கற்கள்!

டீல்களும் பெண்களும்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல்.ஐ.சி, டாபே (டிராக்டர் தயாரிக்கும் நிறுவனம்), அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பேஸ்புக் (இந்தியா) இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளும் சேவைகளும் வேறு வேறானவை. ஆனால், இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவற்றை வழி நடத்தும் அத்தனை பேரும் பெண்கள்! இந்தியாவில் மட்டுமா? உலகம் முழுக்கவும், ஏராளமான நிறுவனங்களில் பெண் சி.இ.ஓ – க்கள். நமக்கு பரிச்சயமான இந்திரா நூயி தலைமை வகிக்கும் பெப்ஸி மட்டுமல்ல, யாஹூ, ஹ்யூலட் பக்கார்ட் (Hewlett Packard) , ஜெராக்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், ஐ.பி.எம், லாக்ஹீட், ட்யூப்பா (DuPont) எனப் பல கம்பெனிகளின் சி.இ.ஓக்கள் பெண்கள். நம் ஊர் சாப்ட்வேர் கம்பெனிகளில் ஏராளமான பெண்கள். இவை கடந்த சில ஆண்டுகளில் வந்துள்ள மாற்றங்கள். கார்ப்பரேட் உலகமே பெண்கள் கைகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால், இது நிஜம் இல்லை, வெறும் மாயத்தோற்றம்தான் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அண்மையில், எமிலி அமானத்துல்லா (Emily Amanatullah), மைக்கேல் மோரிஸ் (Michael Morris) என்னும் இரு அமெரிக்க மேனேஜ்மென்ட் பேராசிரியர்கள் நடத்தியிருக்கும் ஆராய்ச்சி. எமிலி, டெக்ஸாஸ் ஆஸ்டின் பல்கலைக் கழகத்திலும், மைக்கேல் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் பணியாற்றுகிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா?
இங்கும் வாரிசுகள்தான்
அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை ஒவ்வொரு வருடமும், உலகத்தின் கம்பெனிகளை, அவர்களின் விற்பனை அடிப்படையில் பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் 1000 கம்பெனிகளில் 46 கம்பெனிகளில் மட்டுமே, பெண் சி.இ.ஓக்கள். அதாவது, மீதி 954 கம்பெனிகளில் சி.இ.ஓக்கள் ஆண்கள்! இந்த 1000 கம்பெனிகளின் இயக்குநர்களில் 16 சதவிகிதம் மட்டுமே பெண்கள். கார்ப்பரேட் உயர் அதிகாரிகளில் பெண்கள் 14 சதவிகிதம் மட்டுமே. சம திறமைகள் கொண்ட ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் எடுத்துக்கொண்டால், வாழ்நாளில், ஆணைவிடப் பெண் 7,13,000 டாலர் குறைவாகச் சம்பாதிக்கிறார். அமெரிக்கா சி.இ.ஓ.க்களில் பெண்களின் எண்ணிக்கை 4.6%. ஆசிய நாடுகளில் 6% இந்தியாவில் 11%. நம் நாடு பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறது என்று பெருமைப்படாதீர்கள். இந்தியாவின் பெரும்பாலான பெண் சி.இ.ஓக்கள், நிறுவன உரிமையாளர்களின் வாரிசுகள். இந்த ரத்தத்தின் ரத்தங்களில், எத்தனை பேர் திறமையால் அந்தப் பதவிகளுக்கு வந்தார்கள்? விடை காணமுடியாத கேள்வி இது.
பிஸினஸை விட்டு விடுவோம். நாட்டு நிர்வாகத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் 30 முதல்வர்கள் இருக்கிறார்கள். இவர்களில் வெறும் நான்கு பேர் மட்டுமே பெண்கள்: 35 ஆளுநர்கள் இருக்கிறார்கள். இவர்களிலும் மூன்றே மூன்று பேர்தான் பெண்கள்! நார்வே நாட்டில் இருக்கும் Norwegian School of Economics & Business Administarion – இல் பைனான்ஸ் துறை பேராசிரியர் கரீன் தாபர்ன் (Karin Thorburn). இவருடைய ஆராய்ச்சிப்படி, பெண் சி.இ.ஓக்கள் நடத்தும் கம்பெனிகள் ஆண்கள் நடத்தும் போட்டிக் கம்பனிகளைவிட, 42 சதவிகிதம் அதிக லாபம் ஈட்டுகின்றன.
பெண்கள் ஏன் திணறுகிறார்கள்?
மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய பெண்களே, இத்தனை திறமைகள் கொட்டிக் கிடக்கும் நீங்கள், அலுவலகம் தொடர்பான டீல்களை வெற்றிகரமாக முடிக்கும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கை டீல்களில் ஏன் திணறுகிறீர்கள்? எமிலி, மைக்கேல் நடத்திய ஆராய்ச்சி, அறிவியல் முறையில் இந்தக் கேள்வியை அணுகியது. ஒரு பெண்ணோ, ஆணோ தனியாக இந்த ஆராய்ச்சியைச் செய்தால், ஆணாதிக்கக் கொள்கை (Male chauvanism) என்னும் பாரபட்சம் வந்துவிடலாம். அதைத் தவிர்க்கும் வகையில், எமிலி பெண்: மைக்கேல் ஆண். முன் அனுமானங்கள் எதுவுமின்றி, ஆராய்ச்சியில் பங்கெடுக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பல கேள்விகள் கேட்டும், பரிசோதனைகள் நடத்தியும், அந்தப் பெண்களின் டீல் போடும் திறமைகளைக் கணித்தார்கள். அவர்கள் நடத்திய ஒரு பரிசோதனை. இதில் இரண்டு அம்சங்கள். முதலில், அவர் உயர் அதிகாரியிடம் தன் சம்பள உயர்வுக்காக வாதாடவேண்டும்: இரண்டாம் அம்சம், தன் பெண் சகாவுக்காகப் பேச்சு வார்த்தைகள் நடத்தவேண்டும். பெரும்பாலான பெண்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சக ஊழியர்களுக்கு வெற்றிகரமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள், சம்பள உயர்வு வாங்கிக் கொடுத்தார்கள். தங்கள் சொந்த விஷயங்களில் சொதப்பினார்கள்.
சமுதாய எதிர்பார்ப்பு
எமிலியும், மைக்கேலும் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். காலம் காலமாக, ஆண்களும், பெண்களும் எப்படி நடந்துகொள்வார்கள் என்று சமுதாயத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன்படி, பொதுவாக, ஆண்கள் தனக்குப் பிறகுதான் தானம் என்று நம்புபவர்கள். தங்கள் உரிமைக்குப் போராடுவார்கள், தங்கள் தேவைகள் பூர்த்தி ஆன பிறகு, அடுத்தவர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள். மாறாகப் பெண்கள், தியாக உணர்வு அதிகமானவர்கள். பிறருக்காக வேகத்துடன் குரல் கொடுப்பார்கள். தங்கள் உரிமைகளைக் கேட்கத் தயங்குவார்கள். பரிசோதனையில், பெண்கள் தங்கள் சகாக்களுக்குச் சம்பள உயர்வு கேட்டபோது, அவர்களின் மேலதிகாரிகள் (ஆணோ, பெண்ணோ) ‘பெண்கள் பிறருக்கு உதவுபவர்கள்’ என்னும் அவர்களுடைய மனபிம்பத்தோடு இந்தச் செய்கை ஒத்துப்போனதால், இந்த வேண்டுகோள்களைத் திறந்த மனங்களுடன் கேட்டுக்கொண்டார்கள், பூர்த்தி செய்தார்கள். பெண்கள் தங்களுடைய சொந்தச் சம்பள உயர்வு பற்றிப் பேசியபோது, மேலதிகாரிகள் இந்த வேண்டுகோள்களைக் கேட்கும் மனநிலையில் இல்லை. சூடுபட்ட பூனை தெரியுமா? பூனை ஒரு நாள் பால் குடித்தது. பால் சூடாக இருந்தது. அதன் நாக்கு பொத்துவிட்டது. அன்று முதல், பூனை ஜில் என்று இருக்கும் பாலையும் குடிக்க மறுத்தது. பெண்களும் இப்படித்தான், தங்களுக்காக எதையும் கேட்கத் தயங்குகிறார்கள். தட்டுங்கள் திறக்கப்படும் பெண்களே, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். காலம் மாறிவிட்டது. இன்று, அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன். மார்க் ஸூக்கர்பெர்க், பேஸ்புக் தொடங்கிய ஆரம்ப நாட்கள். கூகுள் கம்பெனியில் வைஸ் பிரசிடென்ட் பதவியில் இருந்தார் ஷெரில் ஸான்ட்பெர்க் (Sheryl Sandberg) என்னும் பெண்மணி. அபாரத் திறமைசாலி. பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ- வாக ஷெரிலை நியமிக்க மார்க் விரும்பினார். பல சந்திப்புகள், பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. டீல் முடிந்தது. ஷெரில், பேஸ்புக் நிறுவனத்தில் சேரச் சம்மதித்தார். ஸூக்கர்பெர்க் தருவதாகச் சொன்ன சம்பளத்தை மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டார். வீடு திரும்பிய ஷெரில் தன் கணவரிடமும், மைத்துனரிடமும் விவரங்களைச் சொன்னார். ”நீ இன்னும் அதிகச் சம்பளம் கேட்டிருக்கவேண்டும்” என்றார் கணவர். மைத்துனர் குரலை எழுப்பிச் சொன்னார், ” இதே வேலையை ஒரு ஆணுக்குக் கொடுத்தால், நிச்சயமாக அவர் வரமாட்டார். பெண் என்னும் ஒரே காரணத்துக்காக நீ ஏன் குறைந்த சம்பளத்துக்குச் சம்மதிக்கிறாய்?” ஷெரில் தயங்கினார். ஸூக்கர்பெர்க் என்ன நினைப்பாரோ என்கிற பயம். மறுநாள், மனதை உறுதிப்படுத்திக்கொண்டு, தனக்கு என்னென்ன காரணங்களால் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நியாயப்படுத்தினார். ஸூக்கர்பெர்க் சம்மதித்தார். சி.இ.ஓ. ஷெரில் தலைமையில் பேஸ்புக் 800 கோடி டாலர்கள் வருமானத்தைத் தொட்டிருக்கிறது. திறமைசாலிப் பெண்களே, ஷெரில் ஸான்ட்பெர்க் காட்டிய வழியைப் பின்பற்றுங்கள். சம்பள உயர்வா, பதவி உயர்வா, தயக்கங்களைத் தூக்கி எறியுங்கள். தட்டுங்கள், கதவுகள் திறக்கும். தன்னம்பிக்கையோடு, மன உறுதியோடு உங்கள் உரிமைக் கோரிக்கைகளை எடுத்துவையுங்கள். நீங்கள் ஈடுபடும் டீல்கள் அத்தனையும் ஜெயிக்கும்.

ஆண்கள் வீடு செவ்வாய்: பெண்கள் வீடு சுக்கிரன்!

இன்று பெண்கள் பலர் அரசியல் கட்சித் தலைவிகளாக இருக்கிறார்கள்: தொண்டர், வட்டம், மாவட்டம் என்னும் பல படிநிலைகளில் பணியாற்றுகிறார்கள். நிர்வாகத்தில் முதல் அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர், சி.இ.ஓக்கள், இயக்குநர்கள், மேலாளர்கள், நிர்வாக ஆலோசகர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், பொறியியல் வல்லுநர்கள் என்று ஜொலிக்கிறார்கள். இவர்களில் பலர் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கிறார்கள். இதனால், பேச்சு வார்த்தைகள் பற்றிய பயிற்சிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இரண்டு: பெண்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தும்போது, நாம் நம் அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமா? பெண்கள், ஆண்கள் சாதாரணமாகக் கடைப்பிடிக்கும் வழிகளைப் பின்பற்றலாமா, அல்லது தனி வழியில் பயணிக்க வேண்டுமா? உங்கள் பதில் என்ன? “இல்லை” என்று சொல்கிறீர்களா? பேச்சு வார்த்தை என்பது தமக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ எடுக்கும் முயற்சி. இதில், ஆண் பெண் என்கிற வித்தியாசம் கிடையாது என்று நீங்கள் சொல்லலாம். நண்பர்களே, உங்கள் தீர்ப்பு தவறானது. நான் மட்டும் இதைச் சொல்லவில்லை. நூற்றுக்கணக்கான மனோதத்துவ மேதைகள், நிர்வாகவியல் நிபுணர்கள், மனிதவளத் துறை அறிஞர்கள் சொல்கிறார்கள். பேச்சு வார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமானால், இரண்டு தரப்பினருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கை வரவேண்டும். அவர்கள் கண்ணோட்டத்தில் நாம் பிரச்சினையைப் பார்க்கவேண்டும். இதற்கு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய குணநலன்கள், எதிர்பார்ப்புகள், அவர்களைப் பாதிக்கும் விஷயங்கள் ஆகியவை பற்றி நமக்குத் தெரியவேண்டும். ஆண்களும், பெண்களும் மனோ தத்துவ ரீதியாக ஒரே மாதிரியா னவர்கள் அல்ல, அவர்களுக்குள் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. நாம் ஆண்களாக இருந்தால், சின்ன விஷயங்களைக்கூட இவர்களால் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று எரிச்சல் படுவோம்: பெண்களும், இந்த ஆண்கள் ஏன் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று சலிப்பார்கள். எரிச்சலும் சலிப்பும் உரசலுக்குக் கொண்டுபோகும். கண்டுகொள்ளாமல் விட்டால், உரசல் விரிசலாகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அப்படி என்ன அடிப்படையான மனோதத்துவ வித்தியாசங்கள்? எண்ணங்களில், மனத் தேவைகளில், உறவு எதிர்பார்ப்புகளில், பிரச்சி னைகளை அணுகும் விதத்தில், கருத்துக் களை வெளிப்படுத்தும் முறையில், பழகும் பாணியில், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நாம் எதிர்பார்க்கவே முடியாத வித்தியாசங்கள் இருப்பதாக அறிஞர்கள் சொல்கிறார்கள். இவர்களுள் முக்கியமானவர் ஜான் க்ரே (John Gray). பழகும் முறை பற்றிய ஆலோசனைகளும், பயிற்சிகளும் தரும் ஜான் க்ரே, இது தொடர்பாக 20 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவை 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. 5 கோடிப் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனை யாகியிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, Men are from Mars, Women are from Venus. 25,000 ஆண், பெண்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து க்ரே இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார். இரண்டு வேறுபட்ட கிரகவாசிகள்போல், அவர்கள் குணங்கள் வித்தியாசமானவை என்பது புத்தகத் தலைப்பின் அர்த்தம்.

க்ரே என்ன சொல்கிறார்? ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை – அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள். பெண்களோ இவற்றுக்கும் அதிகமாக, அன்பு, உறவுகள், தாங்கள் பிறரால் மதிக்கப்படும் விதம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷம் பெறுகிறார்கள். ராம், அவர் மனைவி மாலதி. ராம் ஒரு நாள் மல்லிகைப் பூ வாங்கிவருகிறார். மாலதிக்கு மகிழ்ச்சி. இன்னொரு நாள். ராமுக்கு போனஸ் வருகிறது,. மனைவிக்கு சர்ப்ரைஸ் தர நினைக்கிறார். நகைக் கடைக்கு அழைத்துப்போகிறார், நெக்லஸ் வாங்கிக் கொடுக்கிறார். இப்போதும் மாலதி முகத்தில் வழக்கமான காதல் கலந்த சிரிப்புதான். மாலதி சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார் என்று எதிர்பார்த்த ராமுக்கு ஏமாற்றம். அவருக்குத் தெரியாது, பெண்களின் மனோபாவங்கள் ஆண்களிடமிருந்து வித்தியாசமானவை – அவர்களுக்கு மல்லிகைப் பூவும், வைர நெக்லஸும் ஒன்றுதான். பரிசுகளின் விலை மதிப்பைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இரண்டுமே, அவர்களுக்கு அன்பின் அடையாளங்கள். இரண்டுமே ஒரே மகிழ்ச்சி தருகின்றன. ஆணோ, பரிசின் விலைக்கு ஏற்ற சந்தோஷத்தை எதிர்பார்க்கிறான். 
அலுவலகத்திலும் இப்படித்தான். ஆண்கள், பெண்கள் இருவரும் உயர் அதிகாரிகள் தரும் பாராட்டுதல்களை, அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆண்களுக்கு இவை வருடம் ஒரு முறை சம்பள, பதவி உயர்வுகளாக இருந்தால் போதும்: பெண்கள் இவற்றுக்கும் மேலாகத் தேடுவது உயர் அதிகாரிகள் தரும் பாராட்டு வார்த்தைகளை. இந்த அங்கீகாரம் அடிக்கடி கிடைத்தால், தங்கள் வேலைகளில் அதிக அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறார்கள்.
ஸ்ட்ரெஸ் என்னும் மன அழுத்தம் வரும்போது, ஆண் பெண் ஆகிய இருவரின் நடைமுறைகளையும் கவனித்துப் பாருங்கள். வித்தியாசம் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெரிய பிரச்சினைகள் குறித்து மட்டுமே மனைவியோடு பேசு கிறார்கள். பெண்களுக்கோ, சின்ன விஷயத்தைக் கூடக் கணவரிடம் பகிர்ந்துகொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும்.
மனைவியிடம் பிரச்சினை பற்றிப் பேசும்போது கணவன், அவள் தீர்வு சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மனைவி, கணவன் தான் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறாள். அவன் தன் பேச்சைக் கவனமாகக் கேட்காமல் டி.வி பார்க்கிறான், பேப்பர் படிக்கிறான் என்று நினைத்தால் மனம் உடைந்துபோகிறாள். அவன் கவனமாகக் கேட்கவேண்டும் என்பதுதான் அவள் ஆசை. அவன் தீர்வுகள் சொன்னால், அவள் ஆழ்மனம் அதை எதிர்க்கிறது. மன அழுத்த நேரங்களில் ஆண்கள் எதிர்பார்ப்பது தீர்வுகளை, பெண்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்ப்பது, தன் குறைகளை யாராவது கவனமாகக் கேட்பதை.

உங்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தும் எதிர் அணியில் பெண்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்யவேண்டும்? பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களைச் சமமாக நடத்துங்கள். அவர்கள் உடல் வலிமையிலோ, மன உறுதியாலோ ஆண்களுக்குத் தாழ்வானவர்கள் என்னும் எண்ணம் அவர்கள் மனங்களில் தோன்றாமல் கவனித்துக்கொள்ளுங்கள். நாசூக்காக, நேர்மையாகப் புகழுங்கள். அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். கேள்விகள் கேளுங்கள். இந்தக் கேள்விகள் அவர்களைச் சோதிப்பவையாக இருக்கக்கூடாது: அவர்கள் கருத்துக் களை விளக்கும் வாய்ப்புகளாக இருக்க வேண்டும்.

பேச்சு வார்த்தைகள் நடத்தும் பெண்கள் என்ன செய்யவேண்டும்? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, “பெண்களிடம் இரண்டு ஆயுதங்கள் உண்டு. ஒன்று மேக்கப், இன்னொன்று கண்ணீர். அதிர்ஷ்டவசமாக, இவை இரண்டையும் அவர்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்தமுடியாது.” இந்த அடிப்படையில் பெரும்பாலான ஆண்கள், பெண்கள்பற்றி வைத்திருக்கும் அனுமானங்கள் என்ன தெரியுமா? பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். தங்கள் அழகையும், அழுகையையும் காட்டி ஜெயிக்கப் பார்ப்பார்கள் என்பதாகும்! பெண்களே, இது நிஜமல்ல என்று உங்கள் அணுகுமுறையால் நிரூபியுங்கள். அறிவு பூர்வமாக விவாதியுங்கள். செவ்வாயும் சுக்கிரனும் சந்திக்கட்டும், கை குலுக்கட்டும், பிரச்சினைகள் தீரட்டும்.
slvmoorthy@gmail.com. Thanks to the hindu & எஸ்.எல்.வி. மூர்த்தி

No comments:

Post a Comment