Thursday, July 23, 2015

முள்ளு சீத்தா பழம் முள்ளு சீத்தா பழம். விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும்.
ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும்.
இது தொடர்பாக விருத்தாசலம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனீசாராணி கூறியதாவது:
மருத்துவ குணம் கொண்ட இந்த தாவரத்தின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாக காணப்படும். தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும்.
முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுத்தினார்கள்.
அதிக சக்தி
ஹீமோதெரப்பி சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இயற்கையான முள்ளு சீத்தாவில் புற்று நோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிக சக்தி உள்ளது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள அஸிட்டோஜெனின்ஸ் எனும் மூலப்பொருள் தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கிய காரணம்.
இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே முள் சீத்தா பழ மரங்களை அதிகமாக விளைவித்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் விநியோகிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ரப்பர் நர்சரி உரிமையாளர் சசி என்பவர் கூறும்போது, “இந்தப் பழம் குறித்து கேரள மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. கேரள மாநில மக்கள் இப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வதோடு, முள் சீத்தா மரங்களை அதிகம் விளைவிக்க தொடங்கியுள்ளனர். தற்போது மாதம் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனையாகிறது. ஊட்டி செல்லும் வழியில் உள்ள பரலியாற்றிலும், கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரியில் இப்பழங்கள் அதிகம் விளைகின்றன” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “முள் சீத்தா பழம் புற்று நோய்க்கான மருந்து எனக் கூற இயலாது. ஆனால் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஒரு உணவு பொருளாகும். பொதுவாக சீத்தா பழத்தின் உருவம் புற்றுநோய் செல்களை போன்று இருப்பதால் இதை புற்றுநோயை குணப்படுத்தும் என்று கணிக்கின்றனர். புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை இப்பழத்தால் குணப்படுத்த இயலாது” என்றார்.

No comments:

Post a Comment