Friday, February 21, 2014

ரத சப்தமி

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் பெருகும் இந்த விரதம் எளிமையானது.
ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர் நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.
இந்நாள் தியானம் செய்ய உகந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது இவ்வாறு எருக்க இலையைத் தலையில் வைத்துக் குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம்.
பீஷ்மர் செய்த பாவம்
எருக்கம் இலையின் மகத்துவம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத் தில் உயிர் விடலாம் என்ற வரம் பெற்றவர். உத்தராயணத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருந்து காத்திருந்தார். காலம் போய்க்கொண்டே இருந்தது. பீஷ்மரின் உயிரோ பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா, ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல், இருப்பதும் கூடப் பாவம்தான், அதற்கான தண்டனையை அவரவர்களேதான் அனுபவித்துத் தீர வேண்டும்“ என்று கூறினார்.
பீஷ்மருக்கு, சபை நடுவே பாஞ்சலியின் உடைகளைக் களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் இருந்து மிகப் பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா என்று கேட்டதற்கு, வியாசர், ``எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அப்பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனையை அனுபவித்துதானே ஆக வேண்டும “ என்றார் வியாசர்.
சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ``அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உன்னையும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன்” என்றார்.
சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி யன்று உயிர் நீத்தார். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், “கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும்” என்று கூறினார்.
ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் பக்தர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று வியாசர் அருளினார்.
ரத சப்தமி நாளில் தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில், திருமலை னிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. ஏழு மலைகளை ஏழு குதிரைகளாக பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் ஊர்வலமாகத் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment