Friday, October 5, 2018

திருச்சி அருகே உள்ள சுடுகாட்டில் தாயின் உடல் மீது அமர்ந்து, அகோரி வினோத பூஜை நடத்தினார்.

பொன்மலைப்பட்டி,

அகோரிகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் அதிகம் வாழ்கின்றனர். தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். நீண்ட தலைமுடி, உடலில் சாம்பல் அல்லது மண்ணை குழைத்து பூசிக்கொண்டு தியானத்தில் ஈடுபடுவது, சுடுகாட்டில் பூஜைகள் செய்வது இவர்களது வழக்கம். மனித நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். நடிகர் ஆர்யா நடித்த “நான் கடவுள்“ திரைப்படத்தில் அகோரிகளின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.

வட மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் அகோரி பயிற்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அகோரிகள் தங்களது இஷ்ட தெய்வங்களை கோவில் கட்டி பூஜை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரம் ஜெய் அகோர காளி கோவிலை அகோரி மணிகண்டன் என்பவர் கட்டி பூஜை நடத்தி வருகிறார்.

இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் அகோரி மணிகண்டன் சிறப்பு பூஜை நடத்துவது உண்டு. மேலும் அருகில் உள்ள சுடுகாட்டிலும் சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் நின்று சங்கு ஊதி பூஜை நடத்துவார். உடல் முழுவதும் சாம்பல் பூசியபடியும், இடுப்பில் சிறிய அளவு துணிமட்டும் கட்டி, நீண்ட தலைமுடியை கொண்ட இவரிடம் சில பக்தர்கள் குறி கேட்க வருவது உண்டு.

அகோரி மணிகண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மதத்தை சேர்ந்த ஒருவரை பார்த்து குறிப்பிட்ட நாளில் ரத்தம் கக்கி சாவாய் என கூறி, பூஜை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். அப்போது போலீசார் தலையிட்டு அந்த பூஜைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகோரி மணிகண்டனின் தாய் இறந்த பின் அவரது உடல் மீது அமர்ந்து பூஜை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அகோரி மணிகண்டனின் தாய் மேரி (வயது 67) கடந்த 30-ந்தேதி காலமானார். அவரது உடலுக்கு நேற்று முன்தினம் இறுதி சடங்குகள் நிகழ்ச்சி அரியமங்கலம் மத நல்லிணக்க சுடுகாட்டில் நடந்தது. அவரது உடலுக்கு வழக்கமான இறுதி சடங்கினை உறவினர்கள் செய்தனர். மேரியின் உடலை அடக்கம் செய்வதற்காக படுத்த நிலையில் வைக்கப்பட்டது. அப்போது அகோரி மணிகண்டன் இறந்த தனது தாயார் உடல் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்து, தியான நிலையில் ருத்ராட்ச மாலையை விரல்களால் உருட்டியபடி வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்.

அவருடன் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு ஊதி பூஜை நடத்தினர். ஒரு அகோரி தலை கீழாக நின்று தியானம் செய்தார். சிறிது நேர பூஜைக்கு பின் இறந்த மேரியின் உடலுக்கு தீபாராதனை செய்து அடக்கம் செய்தனர். சுடுகாட்டில் நடந்த வினோத பூஜையானது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வினோத பூஜை குறித்து அகோரி மணிகண்டனுக்கு நெருங்கியவர்கள் கூறுகையில், “இறந்தவரின் உடல் மீது அமர்ந்து பூஜை நடத்தினால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடையும் என அகோரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் தான் இறந்த தனது தாயின் உடல் மீது அமர்ந்து மணிகண்டன் பூஜை நடத்தினார். வட மாநிலங்களிலும் அகோரிகள் இதேபோல பூஜை நடத்துவது வழக்கம். மணிகண்டன் சிறுவயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். அதனால் வட மாநிலம் சென்று அகோரிக்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்” என்றனர்.

சுடுகாட்டில் இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய பூஜை தொடர்பாக போலீசாருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. பொதுமக்கள் மத்தியில் நேற்று காலை பரபரப்பாக பேசப்பட்ட பின்புதான் போலீசாருக்கும் தெரியவந்தது. அகோரி நடத்திய பூஜையை சுடுகாட்டில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். இதன் மூலம் அகோரி நடத்திய பூஜை வீடியோ வைரலாக பரவியது.

No comments:

Post a Comment