Tuesday, January 19, 2016

ஸ்ரீராம ஜெயம் எழுத ஆசையா? அணைப்பட்டியில் ஆரம்பியுங்க!

ஆஞ்சநேயருக்குரிய தாரக மந்திரம் ஸ்ரீ ராம ஜெயம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர் மனம் மகிழ்ந்து பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருவார். இந்த மந்திரத்தை தினமும் சொல்லவோ, எழுதவோ விரும்புவோர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள மேட்டுப்பட்டி அணைப்பட்டி வீர ஆஞ்சநேயரை வணங்கி எழுத துவங்கலாம். இதனால் எடுத்த செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
 
தல வரலாறு:  300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தார் காமயசாமியின் கனவில் தோன்றிய வீர ஆஞ்சநேயர், தான் வேகவதி ஆற்றின் (வைகையின் புராணப்பெயர்) தென்கரையில் ஒரு தாழம்பூ புதருக்குள் இருப்பதாகவும், தனக்கு கோவில் அமைத்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி புதரை சுத்தம் செய்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை.
அந்தப் பாறையே ஆஞ்சநேயர் சிலை போல் மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதனால் இது சுயம்பு ஆஞ்சநேயர் என்றும் போற்றப்படுகிறது. மாவீரனான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் "வீர ஆஞ்சநேயர்' என்று பெயர் சூட்டப்பட்டது.

ஸ்ரீராம ஜெயம் துவக்கம்: ஸ்ரீராம ஜெயத்தை முதன் முதலாக எழுத விரும்பும் பக்தர்கள், அனுமன் ஜெயந்தியன்றும், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் இந்தக் கோவிலுக்கு வந்து மந்திரம் எழுதத் தொடங்கலாம். இதனால் பீமனைப் போல் வீரம், தர்மரைப் போல் நல்ல புத்தி, அர்ஜுனன் போல் கலங்காத மனம், சகாதேவன் போல் புத்தி சாதுர்யம், நகுலன் போல் உடல் பலம் ஆகியவற்றை பெறலாம். பணிமாற்றம், இடமாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் உண்டு.

கிரக தோஷ நிவர்த்தி: இங்கு நவக்கிரக பீடம் ஒன்று உள்ளது. கிரக தோஷம் உள்ளவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பணசாமி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். 

இருப்பிடம்: மதுரையில் இருந்து 50 கி.மீ., தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 33 கி.மீ., தூரத்திலும் நிலக்கோட்டை. இங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அணைப்பட்டி (மேட்டுப்பட்டி) ஆஞ்சநேயர் கோவில்.
திறக்கும் நேரம்: காலை 6.00-மாலை 6.00 மணி. அலைபேசி: 97860 40907

No comments:

Post a Comment