Sunday, December 14, 2014

காசிக்கு இணையாக முக்தி தரும் திருவுடையார்பட்டி திருமூலநாதர்.

காசிக்குச் செல்லவதால் கிடைக்கும் பலன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஆலயத்துக் சென்றாலும்  கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வாண்டாகோட்டை ஊராட்சியைச் சார்ந்த கிராமம் திருவுடையார்பட்டி. இங்குள்ள வெள்ளாற்றங்கரையில் தோன்றிய சுயம்பு லிங்கத்தின் மீது கி.பி.12 -ம் நூற்றாண்டில்  சோழர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. தைப்பூச நாளி தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.
காசிக்குச் சென்று வருவதற்கு இணையான பலன் கிடைக்கும் என்ற ஐதீகத்துக்குப் பின்னணியாக அப்பகுதி மக்களால் கூறப்படும் நிகழ்வு யாதெனில்...அக்காலத்தில் செட்டிநாட்டுப்பகுதியைச் சேர்ந்த ஒரு வணிகர் தனது பெற்றோரின் அஸ்தியுடன் உதவிக்கு வேலை ஆளையும் அழைத்துக்கொண்டு காசிக்கு பாதயாத்திரையாகச் சென்றாராம். அப்போது இரவு வேளையாகிவிட்டதால் இவ்வூர் கோயிலில் இருவரும் தங்கினர். வணிகர் உறங்கிக்கொண்டிருந்த போது வேலையாள் அஸ்தி வைத்திருந்த கலசத்தை திறந்து பார்த்தபோது உள்ளே மல்லிகைப்பூவின் குவியல் தென்பட்டதால் மீண்டும் அதை மெதுவா மூடிவைத்தார். இதையடுத்து பல மாதங்கள் கழித்து இருவரும் காசியைச் சென்றடைந்தனர். அங்கு கரும காரியம் செய்வதற்காக அஸ்திக்கலசத்தை திறந்தபோது உள்ளே எலும்பும் சாம்பலும் இருந்ததாம். இதைப்பார்த்த வேலையாள் திருவுடையார்பட்டி கோயிலில் நான் திறந்தபோது உள்ளே மல்லிகைப்பூ இருந்ததைப் பார்த்தாக கூறியுள்ளார். இதை வணிகர் நம்பவில்லையாம். ஆனால், வேலையாள் காசிவிஸ்வநாதர் மீது ஆணையிட்டுச் சொன்ன பிறகு வணிகர் பாதி அஸ்தியை கலசத்தில் வைத்துவிட்டு மீதியை கங்கை ஆற்றில் கரைத்து தனது கடமையைச் செய்தார். இதையடுத்து இருவரும் மீண்டும் தாங்கள் ஏற்கனவே தங்கிய கோயிலுக்கு வந்து தங்கினர். மறுநாள் அஸ்திக்கலசத்தை திறந்தபோது உள்ளே மல்லிகைப்பூக்கள் இருந்ததைப் பார்த்தார். இதைத்தொடர்ந்து வெள்ளாற்றில் நீராடி அங்கேயே அஸ்தியைக் கரைத்து தனது கடைமையை முழுமை செய்தார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காசிக்கு சிரமப்பட்டு செல்ல இயலாதவர்கள் அனைவருமே இக்கோவிலுக்கு வந்து தங்கள் கருமத்தையும், முன்னோர்களுக்கான கடமையையும் நிறைவேற்றுவது இன்றும் தொடர்கிறது. தினமும் குறைந்தது நூறு பேர்களாவது இங்கு வந்து செல்கின்றனர். மேலும், திருமூலநாதரை நினைத்து வேண்டினால் அன்று இரவே அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.
இங்கு மூலவர் சுயம்புவான திருமூலநாதரும், திரிபுரசுந்தரி அம்மன், சொர்ணகால பைரவர், தெட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகிய தெய்வ சன்னதிகளும், கோவிலுக்கு வெளியே காவல் தெய்வமாக முனீஸ்வரரும் வீற்றிருக்கிறார்.
கங்கா தீர்த்தம் :இத்திருத்தலத்தின் கன்னி மூலையில், கங்கா தீர்த்த ஊற்று உள்ளது. இந்த ஊற்று கங்கைக்கு இணையான புண்ணியம் பெற்று உள்ளது. இத்திருத்தலத்தில் நவக்கிரகங்கள் அந்தந்த கிரகங்களுக்கு உண்டான திசையில் இருந்து மாறுபட்ட திசையில் அமர்ந்து இருக்கின்றன. இவை தெய்வ வாக்கின்படி நடந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டையிருந்து அறந்தாங்கி சாலையில் 7 கிமீ தொலைவில் வாண்டாகோட்டையிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
 http://www.dinamani.com/religion/article1387297.ece

No comments:

Post a Comment