தனக்காக கட்டியுள்ள ஜீவசமாதி முன் நிற்கும் பாண்டியன்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச்
சேர்ந்த 50 பேர் ஜீவசமாதி அடைவதற்காக நிலம் வாங்கி பதிவு செய்து
வைத்துள்ளனர்.
சித்தர்கள் பூமியான சிங்கம் புணரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
புலவர் பாண்டியன். மத்திய - மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகளை பெற்ற
இவர், ஜீவசமாதிக்காக பத்து சென்ட் நிலம் வாங்கி அதில் சமாதி கட்டி மூடி
வைத்திருக்கிறார்.
“சராசரி மனிதனும் சித்தர் ஆவதற்கான திறவுகோல்தான் சித்த வித்தை. இதை
சாமானியனுக் கும் போதித்தார் சித்த சமாஜ ஸ்தாபகரான சுவாமி சிவானந்த
பரமஹம்சர். அவரது உதவியாள ரான நாராயண நம்பியாரிடம் நானும் என் மனைவியும்
சித்த வித்தை போதனை பெற்றோம்.
சித்த வித்தை என்பது புற வித்தை அல்ல; அது அகவித்தை. அது ஆன்மாவை இறைவனோடு
இணைக்கின்ற முயற்சி. நமக்குள்ளே ஜீவன் இருக் கிறது. அது ஆற்றலாகி கொஞ்சம்
கொஞ்சமாக வெளியில் போய்க் கொண்டு இருக்கிறது. ஆற்றல் தீர்ந்துவிட்டால் நமது
உடம்பில் சத்துப் போய்விடுகிறது. அதைத் தான் ’செத்துப் போய் விட்டது’
என்கிறார்கள்.
அப்படி நமக்குள் இருக்கும் ஜீவ சக்தியை வெளியில் போக விடாமல் தடுத்து
நிறுத்தி, உள்ளில் கூடி நம்முடைய கபாலத்தில் அன் னாக்கிற்கு மேல் உள்ள இரு
துவாரங்களின் வழியாக மேலும் கீழும் ஏற்றி இறக்கி உச்சியில் இருக்கின்ற
பிரம்ம ரந்திரத்தை தட்டித் திறந்து அதனுள் ஜீவனை லயித்து இருக்கும்படி
செய்வது தான் ஜீவ சமாதி. அந்த நிலையில் ஐம்புலங்களின் செயல்பாடுகள் அடங்கி
இருக்கும். வெளி உலக பாதிப்புகள் நம் உடலை பாதிக்காது” என்கிறார்
பாண்டியன்.
“நாம் தினமும் 21,600 தடவை மூச்சு விடுகிறோம். உச்சியிலிருந்து நாசி வரை 12
அங்குல தூர மூச்சுக் காற்றானது திரும்பிப் போகும் போது எட்டு அங்குலம்தான்
போகிறது; மீதி 4 அங்குலம் வீணாகி விடுகிறது.
வெளியில் விடும் இந்த 12 அங்குலத்தை படிப்படியாக குறைக்க குறைக்க நமக்கு
அபூர்வ சக்தி பெருகும். இறுதியாக, மூச்சுக் காற்றை தொடங் கும் நிலையிலேயே
நிறுத்தும்போது உடம்பில் சலனமே இல்லாமல் போய்விடும். அதுதான் மரண மில்லா
பெருவாழ்வு நிலை. ஜீவ சமாதிக்கான பயிற்சியில் இருப்பவர்களுக்கு இந்த நிலை
எந்த நேரத்திலும் வரலாம்’’ என்கிறார்கள் சித்த வித்தி யார்த்திகள்.
பாண்டியனைப் போலவே சிங்கம்புணரி, மேலூர், திருப்பத் தூர் பகுதிகளில் 50
பேர் வரை உள்ளனர். இவர்கள் ஜீவசமாதி அடைவதற்காக சிங்கம்புணரியில் பொது
மயானம் அருகே பத்து சென்ட் நிலம் வாங்கி ‘சித்த வித்தியார்த்திகள் அடக்க
ஸ்தலம்’ என்ற பெயரில் பத்திரப் பதிவும் செய்து வைத்துள்ளனர். இதில்
ஏற்கெனவே 3 பேர் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.
“அடக்கம் அமரருள் உய்க்கும்..” இந்தக் குறளுக்கு வள்ளுவன் தரும் விளக்கம்
வேறு, ஆனால், ‘‘உயிருடன் இருக்கும்போதே ஜீவ சமாதியானால் தெய்வமாகலாம்’
என்பதைத்தான் வள்ளுவம் அப்படிச் சொல்லி இருக்கிறது’’ என்கிறார்
பாண்டியன். http://tamil.thehindu.com/tamilnadu/article7052377.ece
No comments:
Post a Comment