Saturday, April 4, 2015

அம்பிகையை அடையாளம் காட்டிய ஜோதி

நெல்லை மாநகரை தென்னகத்து காஞ்சி என்று அழைப்பர். இந்த நகரில் காட்சி மண்டபம் என்ற இடத்துக்கு அருகேயுள்ள கம்பாநதி காமாட்சி சமேத ஸ்ரீமூல மகாலிங்க சுவாமி கோயிலால்தான் அந்தப் பெருமை. இந்தக் கோயில் தோன்றிய வரலாறு ஆச்சரியமானது. ஈசனை அடைய அம்பிகை பல தலங்களில் தவமிருந்தார். அப்படி தவமிருந்த தலங்கள் எல்லாம் பிரசித்தி பெற்றவை. அவற்றில் ஒன்றுதான் திருநெல்வேலி.  ஒருமுறை கயிலையில் தேவர்களும் ரிஷிகளும் குழுமியிருந்தனர். அப்போது வேதங்கள் ஓதி சிவபூஜை செய்யும் சிறப்பை ஈசனே தமது வாக்கினால் கூறினார். இதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி தேவியார், தாமும் அவ்வாறே பூஜை செய்ய வேண்டுமென்ற தன் விருப்பத்தை ஈசன்முன் வைத்தார். அதோடு அவ்வாறு தவமிருக்க தலத்தினையும் அவரையே தேர்வு செய்யச் சொன்னார்.

இதைக் கேட்ட பரமன் மகிழ்ந்தார். ‘‘தென் பகுதியில் பொதிகை மலையின் கீழ் வேணு வனம் என்ற ஒரு புனிதமான இடமுள்ளது. அந்த இடத்தினை பிரம்ம விருத்தபுரம் என்று உலகம் புகழ்கிறது. அங்கு சென்று தவம் செய். மேலும், அன்பு, ஞானம், அருள், முக்தி போன்ற சிந்தனையுள்ளவர்களே அங்கு கூடுவார்கள். எனவே, அப்படிப்பட்ட உத்தமமான தலத்திற்கு செல்வாயாக’’ என்று கூறி அனுப்பினார்.   

ஐயனின் அறிவுரைப்படி தற்போதைய நெல்லை எனும் வேணு வனத்திற்கு வந்தார். கம்பா நதியில் திரு மூலலிங்கத்தினை கண்டெடுத்தார். பின்னர் தவம் புரியத் தொடங்கினார். ஈசன் தன்னில் பாதியை அளித்தால் கூட, தானே தவமிருந்து அடைவதுதானே சிறப்பு! எனவே அன்னை மலர்கள் தூவி, மஞ்சள் பூசி மகிமை தரும் அகிலின் புகையைப் பரவ விட்டார். பின்னர் தூபம் காட்டி தீபம் ஏற்றினார். இந்தப் பூஜை பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அன்னையின் பூஜையை சிவபெருமான் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். சட்டென்று  சூரியனுக்கு எதிராக மற்றொரு சூரியன் போல் ஒளி வடிவத்தில் நெல்லையப்பராக தோன்றினார். அதைக் கண்டவுடன் அன்னை நெகிழ்ந்து, ‘‘பரம்பொருளே, இந்த வேணு வனத்தில் நான் என்றென்றும் வாசம் புரிய அருள வேண்டும். இங்கு வந்து வணங்குபவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் தீர வேண்டும்; நற்கதியை அருள வேண்டும்’’ என்று வேண்டி நின்றார். அதன்படியே சிவனும் அருளினார். அதன்பின் காமாட்சியம்மன், காந்திமதியாக நெல்லையப்பரை மணந்தார்.     

அன்னை தவமிருந்த தலத்துக்கு தென்காஞ்சி என்றும் அன்னைக்கு அறம் வளர்த்தாள், பாடலங்கம்பை காமாட்சி என்றெல்லாம் பெயர்களை சூட்டினார், சிவபெருமான். அதன்பின் இந்த இடத்தில் அறங்கள் தடை இல்லாமல் நடைபெற அருள் செய்தார். இந்த கம்பாநதி பற்றி வேத வியாச பகவான் எழுதிய ஆதி புராணமாகிய தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பு உள்ளது.
ஒரு சமயம் அகத்தியர் கம்பா நதிக்கரைக்கு வந்து, சிவபெருமானை வணங்கினார். அப்போது அவர் வேண்டுகோளுக்கு இணங்க சுவாமி பாதாள வாகினியாகவும் அன்னை ஆகாய வாகினியாகவும் தோன்றி பாடலங்கம்பை என்ற தீர்த்த ரூபத்தில் காட்சி தந்தார்கள். இந்த பாதாள வாகினிதான் கம்பாநதி. இந்த நதி கோயில் வளாகத்தின் உள்ளேயே காணப்
படுகிறது.

அன்னை, காமாட்சியாக இந்த கம்பா நதியின் அருகில் தவமிருக்கிறாள். தவம் முடிந்து இறைவன் திருக்காட்சி கிடைக்கப் பெற்ற இடம் இதுதான். இந்த இடத்தில்தான் ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் மிகச்சிறப்பாக, 15 நாள் திருவிழாவாக நடக்கிறது. திருவிழாவின்போது இறைவனும் இறைவியும் காட்சி அளிக்கிறார்கள். இந்த சமயத்தில் கம்பை நதி பெருக்கெடுத்து ஓடுவதும் இந்த தலத்திற்கே உண்டான சிறப்பாகும். அன்னை தவம் செய்த பாடலங்கம்பை தீரத்திலுள்ள அன்னை காமாட்சி, திருமூலநாதர், நந்தி, நீரில் அமிழ்ந்த  லிங்கமாகிய விஸ்வேஸ்வரர் ஆகியோர் ஒரே நேர்கோட்டியில் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அன்னை ஆதியில் இங்கு காமாட்சியாக தவமிருந்து அதன்பின் நெல்லையப்பரை வணங்கி மணமுடித்து காந்திமதியம்மனாக மாறியுள்ளார். எனவே ஆதியில் அன்னை வந்து தங்கிய இடம் இங்குதான்.   

  இந்த ஆலயத்தின் வாயில் வடக்கு பார்த்து அமைந்துள்ளது. உள்ளே இடப் புறம் கம்பாநதி பூமிக்கு அடியில் ஓடுகிறது. இந்த இடத்தில் அகத்தியருக்கு நீரில் இருந்து காட்சியளித்த விஸ்வேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக  நீருக்குள் மேற்கு பார்த்து காட்சியளிக்கிறார். அதன் பின்னேயும் ஒரு தீர்த்தம் உள்ளது. இதை வருண தீர்த்தம் என்றழைக்கிறார்கள். இந்த தீர்த்தம் சரும வியாதிகளையும் தீர்க்கிறது. இங்கு வந்து நீராடி சரும நோய் நீங்கிச் செல்பவர்கள் அநேகம். வாயிலில் இருந்து வலது புறம் திரும்பினால் அங்கே அன்னை காமாட்சியும் அவர் முன்னே சிவபெருமானும் காட்சியளிக்கிறார்கள். இவர்கள் கிழக்கு நோக்கியுள்ளனர். அன்னையே சிவ பூஜை செய்வதுபோல அமர்ந்திருப்பது அபூர்வமானது.

  கோயில் உள்ளே விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன் அருள்பாலிக்கின்றனர். சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட இந்தக் கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். கும்பாபிஷேக வைபவத்தின்போது அர்ச்சகர் தீபாராதனை காட்டியபோது, தனியே ஒரு தீபம், மின்னல் வெட்டுபோலத் தோன்றி மறைந்தது, தெய்வீக பிரமிப்பை ஏற்படுத்தியது. அன்னை அங்கே அப்போது பிரசன்னமாகியிருந்ததன் சாட்சி அது!  இந்தக் கோயிலில் அம்மை சிவனை வணங்கி, அவருடன் சேர்ந்த காரணத்தினால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது. இந்தப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்பவர்கள், வருண தீர்த்தத்தில் குளித்து, கம்பாநதியில் தீர்த்தம் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த கோயிலுக்கு செல்ல டவுன், பேட்டை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் ஏறி  டவுன் காட்சி மண்டபம் என்கிற இடத்தில் இறங்கி நடந்து செல்லலாம். நெல்லை சந்திப்பிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆட்டோ மற்றும் பேருந்து வசதி எப்போதும் உண்டு.

No comments:

Post a Comment