Sunday, April 12, 2015

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த கோமதி, ஃபேஷன் டிசைனர்.

படம்: என்.முருகவேல்.
ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக் காலம். ஆடைதான் இன்று ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்களின் ஆடைகள் என்றால் சொல்லத் தேவையில்லை. இழைகளே தெரியாத அளவுக்குக் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கோலோச்சுகின்றன. திருமணம், திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான உடைகள் கிடைக்காதா என்று ஆதங்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் அந்த ஆதங்கத்தையே தன் அடையாளத்துக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் கோமதி. இவரின் கைவண்ணத்தில் சாதாரணத் துணியும் பளபளக்கும் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறது.
திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த கோமதி, அந்தப் பகுதியின் பெயர் சொல்லும் டிசைனர். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்புப் பெண்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடையின் அளவை மட்டும் கொடுக்கின்றனர். மற்றபடி எந்த மாடல், என்ன டிசைன் என்பதையெல்லாம் கோமதியின் விருப்பத்துக்கே விட்டுவிடுகின்றனர். இதற்குக் காரணம், வாடிக்கையாளரின் உடல் வாகு மற்றும் அவரவர் முகத்தோற்றத்திற்கேற்ற வகையில் புதுப் புது டிசைன்களை கோமதி அறிமுகம் செய்துவிடுவார்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கோமதி, திருமணத்துக்குப் பிறகு திருச்சியில் குடியேறி 16 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் முடித்த இவர், ஃபேஷன் டிசைனிங் படிப்பிலும் பட்டம் வாங்கியிருக்கிறார். கல்லூரிக் காலத்திலேயே டிசைனர் சுடிதார் ரகங்கள் மீது கோமதிக்கு அலாதிப் பிரியம். அவ்வப்போது புதிய டிசைன்களை வடிவமைப்பார்.
“டிசைனர் ஆடைகள் என்றாலே வட இந்தியாதான் என்ற நிலையை மாற்றி இங்கேயும் அதே போன்ற ஆடைகள் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். என் சிந்தனைக்கு என் கணவரும் உறுதுணையாக நிற்க, அப்படித்தான் தொடங்கியது இந்தப் பயணம்” என்று சொல்லும் கோமதிக்கு, நீண்ட போராட்டத்துக்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தங்களின் நீண்ட நாள் ஆவல் நிறைவேறிய மகிழ்ச்சியைத் தன் வாடிக்கையாளர்களின் கண்களில் பார்ப்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். வாடிக்கையாளர்களின் திருப்தி ஒன்றுதான் தனது குறிக்கோள் என்று சொல்லும் கோமதி, அவர்களின் பாராட்டு தனக்கு உத்வேகம் அளிப்பதாகச் சொல்கிறார்.
திருச்சி மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் கோமதிக்கு வாடிக்கையாளர்கள் உண்டு. மணப்பெண்களுக்கான பிரத்யேக ப்ளவுஸ் ரகங்கள் கோமதியின் தனிச் சிறப்பு. கச்சோரி, பிரின்சஸ், த்ரீ டாட், ஃபோர் டாட், பாடட், பேட்ச் வொர்க் எனப் பலவிதமாக வேலைப்பாடு அமைந்த பிளவுஸ் வகைகளைத் தைப்பதில் கோமதி தேர்ச்சியுடன் விளங்குகிறார். சுடிதாரிலும் வெவ்வேறு டிசைன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
நாளுக்கு நாள் மாறிவரும் ஃபேஷன் உலகில் புதுப் புது டிசைன் வகைகள் குறித்து எப்போதும் தன்னை அப்டேட் செய்து கொள்கிறார். ஒவ்வொரு சீசனிலும் எதற்கு அதிக வரவேற்பு இருக்குமோ அதை முன்கூட்டி யோசித்து, அதற்கேற்ப ஆடைகளை வடிவமைகிறார். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஆர்கானிக் டையிங் (இயற்கை உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சாயங்கள்) சுடிதார்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
“இவை மிருதுவாக இருக்கும். ரசாயனக் கலப்பில்லாத சாயங்களைப் பயன்படுத்துவதால் உடலுக்கும் கேடு ஏற்படாது. இந்தவகை ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது” என்கிறார் கோமதி. கோமதியின் இந்த சமயோசிதமே அவரை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறது.
http://tamil.thehindu.com/society/women/%8D/article7093518.ece?widget-art=four-all

No comments:

Post a Comment