போலீஸ், ராணுவம் போன்ற, பாதுகாப்பு துறை பணியிடங்களுக்கு இலவச பயிற்சியளித்து, 1,308 பேரின் கனவை நிறைவேற்றிய, பாரதி: நான், விழுப்புரம் மாவட்டம், கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவன். என் சொந்த முயற்சியால், மத்திய காவல் துறை பயிற்சி மையத்தில், பயிற்சியாளராக பணிக்கு சேர்ந்தேன். கிராமப்புற இளைஞர்களிடம், போலீஸ், ராணுவம் போன்ற பாதுகாப்பு துறை பணியிடங்களுக்கான தேர்வில், போட்டியிட்டு வெற்றி பெற இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை அதிகம்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, நகர்ப்புற மக்களுக்கு நிகராக உயர்த்த, கிராமப்புற இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து, பாதுகாப்புத் துறை பணிகளில், அதிக அளவு இடம் பெறச் செய்தால் தான் சாத்தியமாகும் என்பது, என் நம்பிக்கை. அதனால், 14 ஆண்டு கால பயிற்சியாளர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, 2008ம் ஆண்டு, "நிலா அறக்கட்டளை'யை, என் சொந்த ஊரிலேயே ஆரம்பித்தேன். இதன் மூலம், பாதுகாப்புத் துறை பணிகளுக்கு தேவையான உடற்தகுதி, பொது அறிவு, தனித் திறன், நேர்மை, ஒழுக்கம் என, அனைத்து பயிற்சி வகுப்புகளையும், இலவசமாக நடத்துகிறேன். இவர்களுக்காக இலவச தங்கும் விடுதியும், உடற்பயிற்சிக் கூட வசதியும் செய்து தந்துள்ளேன். அரசுப் பணிக்கு தேர்வாகும் வரை, இங்கேயே தங்கியிருக்கலாம் என்றாலும், இங்கு பயிற்சி பெறுவோர் அதிகபட்சம் இரண்டு ஆண்டிற்குள், பணிக்கு தேர்வாகி விடுகின்றனர். தற்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் என, மொத்தம், 586 பேர் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரை, எங்கள் மையத்திலிருந்து, 1,308 பேர் போலீஸ், ராணுவம் போன்ற பாதுகாப்பு துறை பணிகளுக்கு தேர்வாகி, வெற்றிகரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், 452 இளைஞர்கள், போலீஸ் பணிக்கு தேர்வாகினர். இதன் மூலம், நகர்ப்புற இளைஞர்களுக்கு இணையாக கிராமப்புற இளைஞர்களாலும், சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினேன். தொடர்புக்கு: 96261 14560
No comments:
Post a Comment