ஆசியாவிலேயே முதல் முறை! காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,வாய் பேச முடியாத, பட்டப் படிப்பை ஏற்படுத்திய, முகமது இப்ராஹிம்: நான், சென்னை மாநில கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவர்களிடம் பேச்சு கொடுக்கும் வரை, அவர்களின் குறைபாடு வேறு யாருக்கும், வெளிப்படையாக தெரியாது. சாதாரண மாணவர்களைப் போலவே, அவர்களும் இருப்பர். மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது போன்ற பட்டப் படிப்புகள், வாய் மற்றும் செவி திறன் குறைந்தவர்களுக்கு இல்லை. இதனால், ஆசியாவிலேயே முதல் முறையாக, வாய் மற்றும் செவி திறன் குறைந்தவர்களுக்கு, பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவை, தமிழக அரசு உதவியுடன், 2007ல், மாநில கல்லூரியில் ஆரம்பித்தோம். பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரிடமிருந்து, அடையாள அட்டை பெற்றிருப்பவர், இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைவான இடங்களே உள்ளதால், அதிக மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்கிறோம். மூன்றாண்டுக்கான கல்வி கட்டணம், 1,265 மட்டுமே. அரசின் மானியம் மூலம், "ஹியரிங் எய்டு, ஸ்காலர்ஷிப்' போன்றவற்றை வழங்குகிறோம். "ஹாஸ்டல்' வசதியும் அருகில் உள்ளது. இவர்களுக்கு, சாதாரண மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்றே இருந்தாலும், செய்முறை தேர்வை தவிர்த்து, மற்ற அனைத்தையும் எளிதாக்கியுள்ளோம். புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்பதால், முக பாவனை, உதடு அசைவு, சைகை மொழி மூலம், பாடங்களை பொறுமையாக நடத்துகிறோம். தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மூலம், கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகிறோம். எங்களிடம் படித்த மாணவர்களில் பலர், பெரிய ஷாப்பிங் மால்களில் கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவிலும், கே.எப்.சி., ஸ்பென்சர் போன்ற நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். கல்லூரியில் படித்து கொண்டே, பகுதி நேரமாகவும் பணியாற்றலாம்.
ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யலாம்!
சோலார் மின்சாரம் மூலம், ஆழ்துளை கிணற்றி லிருந்து நீர் இறைத்து, ஆண்டு முழுவதும் விவசாயத்தில் ஈடுபடும், செந்தில்: நான், தஞ்சை யை சேர்ந்தவன். தமிழகத்தில், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் மாவட்டங்களில், தஞ்சாவூரும் ஒன்று. இங்கு, எவ்வித தொழிற்சாலைகளும் இல்லை. நீண்ட கால வறட்சி காரணமாக, போதுமான தண்ணீரின்றி, நெல்லை பயிரிட முடியாத அவலநிலை. மின்வெட்டு மற்றும் டீசல் விலை உயர்வால், தொடர்ந்து மோட்டார் மூலம், நீர் இறைக்க முடியவில்லை. இப்படி, பல பிரச்னை களால், விவசாயம் செய்ய முடியாமல், நான் வறுமையில் வாடிய போது, "சோலார் மின்சாரம்' கை கொடுத்தது. 2 லட்சம் ரூபாயை, வட்டிக்கு கடன் வாங்கி, 2 கே.வி., அளவுள்ள, "சோலார் பேனல்கள்' அமைத்தேன். இதன் மூலம், 2 எச்.பி., மோட்டார் பொருத்தி, 5 ஏக்கர் வரை, காய்கறி விவசாயம் செய்கிறேன். தஞ்சாவூரில், பகல் நேரங்களில் அதிக வெயில் அடிப்பதால், மின்வாரியம் தரும் மின்சாரத்திற்கு இணையாக, சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கிறேன். இதனால், அதே வேகத்திலேயே மோட்டார் இயக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் இறைக்கப்படுகிறது. மேலும், தண்ணீர் வீணாவதை தடுக்க, தெளிப்பு நீர் பாசனத்தை பயன்படுத்தி, தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். இம்முறையில் கத்திரி, வெண்டை, கீரைகள் என, நீர் ஆதாரத்திற்கு ஏற்றவாறு காய்கறிகளை பயிரிட்டு, அறுவடை செய்கிறேன். ஆண்டிற்கு, மூன்று மாதம் மட்டுமே விவசாயம் செய்து வந்த நான், தற்போது சோலார் மின்சாரம் மூலம், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். மேலும், விவசாயத்தை லாபகரமாகவும் செய்ய முடிகிறது. எவ்வித தொடர்ச்சியான பராமரிப்பும் இன்றி, சோலார் பேனல்களை எளிதாக இயக்கலாம். சோலார் பேனல்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு, 80 சதவீதம் மானியம் வழங்குவதாக, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால், எல்லா விவசாயிகளும், ஆண்டுமுழுவதும் விவசாயம் செய்து பயனடையலாம். தொடர்புக்கு: 99442 98638
No comments:
Post a Comment