புதுடில்லி:"காசோலை மோசடி விவகாரங்களில், புகார்தாரரின் சார்பாக, அவரின் பொது அதிகாரம் பெற்றவரும், காசோலை கொடுத்தவருக்கு எதிராக, கிரிமினல் வழக்குத் தொடரலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.காசோலை மோசடி விவகாரம் தொடர்பான வழக்குகளில், சில ஐகோர்ட்டுகளும், சுப்ரீம் கோர்ட்டின், இரு நீதிபதிகள், "பெஞ்ச்'சும், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்தன. இதையடுத்து, இந்த வழக்குகள் எல்லாம், சுப்ரீம் கோர்ட்டின், மூன்று நீதிபதிகள் பெஞ்சின், விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் தேசாய் மற்றும் ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம்:காசோலை மோசடி விவகாரங்களில், புகார்தாரரின் சார்பாக, அவரின் பொது அதிகாரம் பெற்றவரும், காசோலை கொடுத்தவருக்கு எதிராக வழக்குத் தொடரலாம். புகார்தாரரின் சார்பாக, மோசடி செய்தவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதோடு, வழக்கு விசாரணைகளிலும் ஆஜராகலாம்; இது சட்டப்படி சரியானதே.
அதேநேரத்தில், பொது அதிகாரம் பெற்றவர், காசோலை தொடர்பான பண பரிமாற்றங்களை நன்கு அறிந்தவராக, அதற்கான சாட்சியாக இருக்க வேண்டும். இருந்தாலும், புகார்தாரருக்கு பதிலாக, தன் பெயரில், அவர் வழக்குத் தொடர முடியாது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment