மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரையும் அறியச் செய்தவர்.
கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். தர்ப்பைகளை காலுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, விரலிடுக்குகளில் பவித்ரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை அதாவது ராம... ராம... என்று ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம், அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள், ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.
மேலே சற்றே சுருக்கமாக் கூறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்தணர்களை வைத்துச் செய்யும்போது மிக மிக விஸ்தாரமாக கூடச் செய்யலாம். செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டவே இக்கட்டுரை.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது எளிமையான பேருண்மை. எப்போதுமே பேருண்மை சூரியனைப் போன்று பிரகாசமாக தெரியும். அதுபோலத்தான் ஆனைமுகனின் வழிபாடும்.
No comments:
Post a Comment