Saturday, May 16, 2015

ஸ்ரீசைலம் ராமர் வலம்வந்த தலம்

தரிசன பலன் குருஷேத்திரத்தில் லட்சக் கணக்கான செலவில் தானம் செய்வது; இரண்டாயிரம் தடவை கங்கையில் நீராடுவது; நர்மதை நதிக்கரையில் பல ஆண்டுகள் தவம் செய்வது; காசி ஷேத்திரத்தில் லட்சம் ஆண்டுகள் வாழ்வது; ஆகியவற்றால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு மகா புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியை ஒருமுறை தரிசனம் செய்வதால் கிடைக்கும் என்கிறது கந்த புராணம். 

அதிசயம்  யுகயுகங்களாகப் பிரசித்தி பெற்ற சைவத் திருக்கோயில் இது. திரேதா யுகத்தில் இரண்யகசிபு இங்கே பூஜை செய்தானாம். ஸ்ரீராமன் வனவாசம் செய்யும் காலத்தில், தம்பதி சமேதராய் ஸ்ரீசைல நாதனை வணங்கி, சகஸ்ரலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறுவர். 

பஞ்ச பாண்டவர்கள் தமது வனவாச காலத்தில் திரெளபதியுடன் இக்கோயிலில் சில காலம் தங்கி இருந்து, லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இத்திருக்கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்த சகஸ்ரலிங்கத்தையும், பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட “சத்யோஜாத” என்ற ஐந்து லிங்கங்களையும் பக்தர்கள் இன்றும் வழிபட்டுவருகின்றனர் என்பது ஐதீகம். உற்சவ காலங்களைத் தவிர, சாதாரண நாட்களில் பக்தர்கள் தாங்களே மல்லிகார்ஜுன சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம் என்பது இத்திருகோயிலின் சிறப்பு. 

புனித நதி  பிரம்மகிரி, விஷ்ணுகிரி, ருத்ரகிரி ஆகிய மூன்று மலைகளுக்குப் பாதாபிஷேகம் செய்வதுபோல, கிருஷ்ணா நதி, பாதாள கங்கை என்ற பெயர் தாங்கிப் புனித நதியாக ஓடுகிறது. இந்த ஆலய பிராகாரத்தில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்கள் இருக்கின்றன. இந்த நான்கு கோபுரங்களுக்கு இடையில் தங்கச் சிகரமாக மல்லிகார்ஜுன சுவாமியின் பிரதான சன்னிதி ஆலய விமானம் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.
 
கீர்த்தி பெரியது சுவாமியின் கர்ப்பக்கிரகம் சிறியது. இதிலுள்ள மல்லிகார்ஜுன லிங்கம் மிகச் சிறியது. இந்த ஜோதி லிங்கத்தைத் தரிசிக்கும் பக்தர்கள், சுவாமி மீது தலையை முட்டி வேண்டிக்கொள்வது இங்கு சம்பிரதாயம். உற்சவ நாட்களில் தூரத்தில் நின்று தரிசிக்க மட்டுமே அனுமதி. 

நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேரு பர்வதம் வில்லாகவும், ஆதிசேஷன் அதன் நாணாகவும், பாற்கடல் அம்பாரியாகவும், மன்மதன் பாணமாகவும், பிரம்மா சாரதியாகவும், தேவர்களைப் பரிவாரமாகவும் ஆக்கிக் கொண்டு ராட்சசர்களை அழிக்கப் புறப்பட்ட சிவன், நள்ளிரவுக்குள் அவர்களை சம்ஹாரம் செய்தார். திரிபுராசுரர்களின் சம்ஹாரம் இங்கு நடந்ததால், அன்னை ஜகதாம்பாள் திரிபுரசுந்தரியாக அக்னித் தடாகத்தில் உருவானாள். சுவாமியும் திரிபுராந்தகராக இங்கே நிலைத்தார். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் இத்தலத்தில் தங்கி இருந்தபொழுது சிவானந்தலஹரி உருவானதாகக் கருதப்படுகிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள புனித நகரம் இது.
திருமலை, அஹோபிலம், ஸ்ரீசைலம் ஆகிய புண்ணிய தலங்களை கொண்ட மலைத் தொடராய் ஆதிசேஷன். ஆதிசேஷனின் தலைப்பகுதியில் திருமலையும், உடற் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில், ஸ்ரீராமபிரான் சீதையுடன் வலம்வந்த, ஸ்ரீசைலமும் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment