Saturday, May 16, 2015

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள்

உலகில்உள்ள எல்லாச் சமயத்தவர்களிடமும் மங்கலப் பொருட்கள் பற்றிய நம்பிக்கை நிலவுகிறது. இல்லங்கள் தொடங்கி ஆலயங்கள் வரை மங்கலப்பொருட்களைப் பராமரிக்கும் வழக்கம் உள்ளது. இந்து சமயத்தைப் பொருத்தவரை பூரணகும்பம், ஸ்வஸ்திகம், வட்டக் கண்ணாடி, தீபம், குங்குமச் சிமிழ், சந்தனக் கிண்ணம், சங்கு மற்றும் தாம்பூலம் மங்கலப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. இவை அஷ்ட மங்கலங்கள் என்றழைக்கப்படுகின்றன.
பூரணகும்பம்
மகாலட்சுமி தேவியின் வடிவம். மழைக்கு அதிபதியாக விளங்குகிற வருணன் நீர் வடிவத்தில் கும்பத்துக்குள்ளிருந்து இல்லத்தின் தூய்மையைக் காக்கிறார் என்பது நம்பிக்கை.
ஸ்வஸ்திகம்
உலகில் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் சுழற்சியாக வரும் என்று கூறும் வடிவம் அது. துன்பங்களை விலக்கி விடும் சக்தி வடிவம்.
வட்டக்கண்ணாடி
தர்ப்பணம் என்று இதைக் கூறுவர். நம் முகத்தை நாமே காண்பதால் ஒரு உத்வேகம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் கண்ணாடி மங்கலப் பொருட்களாகக் கருதப்படுகிறது.
தீபம்
பூஜை அறையில் ஒளியைக் கொடுத்து இறை பிம்பங்களைக் காணவைக்கும். அதிகாலை ஐந்தரை மணிமுதல் ஆறு மணிக்குள் நெய்யும் நல்லெண்ணையும் கலந்து ஏற்ற வேண்டிய மங்கலச் சின்னம். வீட்டில் திருமகளை நிலைக்கச் செய்யும் தன்மை கொண்டது.
குங்குமச்சிமிழ்
பெண்கள் திலகமாக வைக்கும் தெய்வீகக் குங்குமத்தைத் தாங்குகிற பேழை இது. இல்லத்திற்கு வரும் சுமங்கலிகளை வரவேற்கிற அபூர்வ பெண் தெய்வ வடிவம் இது. அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மையுடைய பொருள்.
சந்தனக் கிண்ணம்
பழங்காலத்தில் ‘சந்தனப் பேலா’ என்ற பெயரால் பூஜை மாடத்தை அலங்கரித்திருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட பேழை. திருமணச் சடங்குகளில் முகப்பில் இருந்து வரவேற்பது. சந்தனத்தில் அந்த நாராயணரின் தர்மபத்தினி மகாலக்ஷ்மி வாசம் செய்வதால் வீட்டிலும் விழா மேடைகளிலும் வரவேற்புக்கான பிரதான பொருளாகத் திகழ்கிறது.
சங்கு
வலம்புரி, இடம்புரி என்ற இருவகைகளில் காணப்படும் மங்கலச் சின்னம். வலம்புரிச் சங்கை வீட்டுப் பூஜை அறையில் வைத்து வணங்குவர். புதிய வீடு கட்டும்போது நிலைவாசல் மேல் சங்கு ஸ்தாபனம் என்ற விதிப்படி பூஜை செய்து பதிப்பார்கள். இதனால் குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தாம்பூலம்
வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து வைக்கப்பட்டால் அதைத் தாம்பூலம் என்பர். மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள் இது. அஷ்டமங்கலப் பொருட்களில் அடிக்கடி உலரும் பொருள் இதுவே. வெற்றிலை பாக்கை அடிக்கடி மாற்ற வேண்டியிருப் பதால் அதற்குப் பதிலாக மரச்சீப்பை வைத்துள்ளனர்.
அஷ்ட மங்கலப் பொருட்களை வீட்டில் வைத்து சௌபாக்கிய லக்ஷ்மி பூஜையைச் செய்துவந்தால் இல்லத்தில் துர்சக்திகள் விலகி நல்லதே நடக்கும் என்று சமய நூல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment