Sunday, May 10, 2015

ஜி மெயிலுக்கு இரண்டடுக்குப் பாதுகாப்பு

பத்தாண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நண்பர்கள் ஜி மெயிலைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதன் வசதிகளை முழுமையாக அனுபவிக்கிறோமா? அவசரத்துக்கு நமக்கு உதவும் என்பதற்காக நம்மில் பலர் டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற பெரும்பாலான ஆவணங்களின் விவரங்களை மெயிலில் சேமித்து வைப்பதை வழக்கமாக்கிவைத்துள்ளனர். வங்கிகள் பலமுறை தொடர்ந்து எச்சரித்துவருகிறபோதும் சிலர் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டுகளைக்கூட மெயிலில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.
நமது மெயிலை யார் பார்க்கப் போகிறார்கள் நம்மிடம் தானே பாஸ்வேர்டு என நினைத்துக்கொள்கிறார்கள். இது அறியாமை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெயில்களின் பாஸ்வேர்டுகள் கண்டறியப்பட்டுத் தனிநபர் தகவல்களைத் திருடுவது சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. இதைத் தடுக்க மின்னஞ்சல் நிறுவனங்களும் பல்வேறு வகையான பாதுகாப்பு உத்திகளை அறிமுகப்படுத்திவருகின்றன.
ஜி மெயிலைப் பொறுத்தவரை அதன் ‘டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ என்னும் வசதி பாதுகாப்புக்காக உள்ளது. ஆனால் அதை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த வசதியை மிகவும் சுலமாக நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் நமது ஜி மெயிலை ஹேக்கர்களிடமிருந்து எளிதாக நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.
இதனால் என்ன நன்மை என்று கேட்டால் இந்த வசதியை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜி மெயில் அக்கவுண்டில் லாக் இன் செய்யும்போது உங்கள் மொபைலுக்கு எண்களால் ஆன சங்கேதக் குறியீடு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டும்.
அதை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்கள் மெயிலைத் திறக்க முடியும். தவறான நபர்கள் உங்கள் மெயிலின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்தால்கூட உங்கள் மொபைலுக்கு வரும் சங்கேதக் குறியீடு அவர்களுக்குத் தெரியாது என்பதால் மெயில் பாதுகாப்பாக இருக்கும்.
தினந்தோறும் நாம் பயன்படுத்தும் கணினியில் தினமும் சங்கேதக் குறியீடு கேட்குமோ எனப் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட கணினியில் நீங்கள் ஒருமுறை சங்கேதக் குறியீட்டை உள்ளீடு செய்து, அதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி பணித்தால் போதும்.
மறுமுறை அதே கணினிக்கு சங்கேதக் குறியீடு தேவைப்படாது. ஆனால் புதிதாக நீங்கள் ஒரு கணினியில் மெயிலைத் திறக்க முயன்றால் அது சங்கேதக் குறியீடு கேட்கும். அதை உள்ளீடு செய்தால் மட்டுமே மெயில் திறக்கும். சரி ‘2 ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ வசதியை எப்படிப் பெறுவது?
ஜி மெயில் அக்கவுண்டை லாக் இன் செய்துகொள்ளுங்கள். இப்போது, மேலே தெரியும் பட்டையின் வலது மூலையில் வட்ட வடிவமாகத் தெரியும் உங்கள் புரொஃபைல் ஐகான் மீது மவுஸை நகர்த்திச் சொடுக்குங்கள்.
கீழே தென்படும் உங்கள் பெயர், மெயில் ஐடி ஆகியவற்றுக் கீழே அக்கவுண்ட் என்னும் சொற்கள் தெரியும். அதில் அக்கவுண்ட் என்னும் சொல்லின் மீது மவுஸை வைத்துச் சொடுக்குங்கள்.
பின்னர் தென்படும் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் signing in என்னும் தலைப்பின் கீழே ‘2-Step Verification’ என்னும் சொற்கள் காணப்படும். அது ஆஃப் என்றிருக்கும். அதைச் சொடுக்கினால் தென்படும் பக்கத்தில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண் கேட்கப்படும்.
மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் கூகுளில் இருந்து மொபைல் எண்ணைச் சரிபார்ப்பதற்காகச் சங்கேதக் குறியீட்டை அனுப்புவார்கள். அதைக் கணினியில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். இந்த வசதி செயல்பட ஆரம்பித்துவிடும். மொபைல் போன் இல்லாதவர்கள் எண்களாலான சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தலாம் அதற்கும் வசதி உள்ளது.
மொத்தம் 10 சங்கேத எண்கள் தரப்படும். அவற்றைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் சங்கேத எண்களைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவோர் இந்த வசதியை இதுவரை பயன்படுத்தவில்லை என்றால் இப்போதே பயன்படுத்தத் தொடங்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://bit.ly/ZjTQPp

No comments:

Post a Comment