இது அதைவிட பெஸ்ட்… அது இதைவிட
பெஸ்ட்…’ என்று டூத்பேஸ்ட் அளவுக்கு வேறு விளம்பரங்கள் ஏதும் இத்தனை
விதங்களில் மக்களைக் குழப்புமா என்பது சந்தேகம்தான். ‘எல்லாமே இந்த
டூத்பேஸ்ட்டில் இருக்கு’ என்று சொல்வதை நம்பி வாங்கிப் பயன்படுத்த
ஆரம்பித்தால், அடுத்த நாளே ‘எல்லாமே இருக்கலாம்… ஆனா, அதுல காரம் இருக்கா,
புளிப்பு இருக்கா?’ என்று இன்னொரு லேடி டாக்டர் இன்னொரு டூத் பேஸ்ட்டை
கையில் வைத்துக் கொண்டு திகில் கிளப்புகிறார். கிராபிக்ஸ் மிரட்டலோடு
பற்களை கிருமிகள் ஆக்கிரமிக்கும் காட்சிகளைப் பார்த்தால் திகில் படம்
பார்ப்பது போலவே இருக்கும். இவை எல்லாவற்றையும்விட, டூத்பேஸ்ட்டுகளில்
கலக்கப்படும் வேதியியல் பொருட்களைப் பற்றிக் கேள்விப்பட்டால், இது
டூத்பேஸ்ட்டா
இல்லை விஷமா என்று இன்னும் அதிர்ச்சியாகவே இருக்கும். வாசனை,
வசீகரமான நிறம் என்றெல்லாம் நம்மைக் கவரும் இந்த டூத்பேஸ்ட்டுகள் ஆபத்தான
வேதியியல் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை என்கிறார்கள் நிபுணர்கள்.
சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின், டூத்பேஸ்ட்டில் கலந்திருப்பதாக
சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத
அத்தியாவசியப் பொருளாகிவிட்ட டூத்பேஸ்ட்டில் இத்தனை வில்லங்கமா?பல்
மருத்துவத்தில் 53 வருட அனுபவம் பெற்ற டாக்டர் ஜானகிராமனிடம் பேசினோம்…
”அடிப்படையில் பற்களைப் பாதுகாப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் தேவையான
எதிர்ப்பு சக்திகள் (Antibodies) நம் உமிழ்நீரிலேயே இருக்கின்றன. எந்த
பற்பசையும் பயன்படுத்தாமலேயே கால்நடைகளின் பற்கள் எல்லாம் வெண்மையாக
இருப்பதற்கு இந்த உமிழ்நீர்தான் காரணம். இரையை உண்ட பின்பு அசைபோட்டுக்
கொண்டே இருப்பதால், உமிழ்நீர் அதிகமாக சுரந்து கால்நடைகளின் பற்களை
சுத்தமாக வைத்திருக்கின்றன. நமக்கும் அடிப்படையில் தேவைப்படுவது இந்த
உமிழ்நீர் மூலம் ஏற்படும் சுத்தம்தான். அடுத்தது, நாம் உண்ணும் உணவின்
துகள்கள் பற்களின் இடுக்கில் படிந்துவிடாமல் இருக்க வாயை நன்கு கொப்புளிக்க
வேண்டும். அப்படி, பற்களின் இடுக்குகளில் படிந்துவிட்டால் அந்த
துணுக்குகளை சுத்தம் செய்வதற்காக பிரஷ் தேவை. இந்த உணவுத் துகள்கள்
தங்கிவிடுவதாலேயே கிருமிகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. இதில் நறுமணம் என்ற
காரணத்துக்காக பற்பசை சேர்ந்து கொள்கிறது… அவ்வளவுதான் விஷயம். இந்த
நறுமணத்தைத் தாண்டி பேஸ்ட் செய்கிற வேலை எதுவும் இல்லை என்பதே என் கருத்து”
என்கிறார் ஆரம்பத்திலேயே அதிரடியாக. இது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று
நாம் கேட்டதற்கு தன்னுடைய அனுபவத்திலிருந்தே விளக்கமளிக்கிறார் ஜானகிராமன்.
”என்னுடைய அனுபவத்தில் பல்வேறு ஆய்வுகளை செய்து பார்த்திருக்கிறேன். டூத்
பேஸ்ட் அவசியம்தானா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக 10 பேரைத்
தேர்ந்தெடுத்தேன். பற்பசையோ வேறு பொருட்களோ பயன்படுத்தக் கூடாது என்பதுதான்
முதல் நிபந்தனை. ஆனால், சாப்பிட்ட பிறகு நன்றாக வாய்கொப்புளிக்க வேண்டும்,
காலையும் மாலையும் இருவேளைகள் வெறும் டூத் பிரஷ் ஷைக் கொண்டு பற்களை
துலக்க வேண்டும். இதுதான் அந்த ஆய்வு. மூன்று மாதங்கள் கழித்து அவர்களை
பரிசோதித்தபோது, அவர்களின் பற்கள் ஆரோக்கியமாகவே இருந்தன. விளம்பரங்களில்
வருவதைப் போல டூத்பேஸ்ட்டுகளால் எந்த நோயையும் குணப்படுத்திவிட முடியாது.
எந்த மாறுதலும் வந்துவிடப் போவதில்லை. வாய் துர்நாற்றத்தைத் தடுக்க ஒரு
டூத் பேஸ்ட், பற்களில் ரத்தம் வழியாமல் இருக்க ஒரு டூத்பேஸ்ட் என்று
சந்தைகளில் நிறைய டூத்பேஸ்ட்டுகள் கிடைக்கின்றன. ஒரு டூத் பேஸ்ட்டில் பல்
துலக்குவதன் மூலம் துர்நாற்றம் போகலாம். ஆனால், டூத் பேஸ்ட்டில்
நறுமணத்துக்குச் சேர்க்கிற வேதியியல் பொருள் சில நிமிடங்களுக்குத்தான்
தன்னுடைய திறமையைக் காண்பிக்க முடியும். உண்மையில் வாய் துர்நாற்றம்
ஏற்படுவதற்கு மருத்துவ ரீதியாக நிறைய காரணங்கள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, வயிற்றில் புண் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அது
ஒரு நோயின் அறிகுறி. இதற்கு, வயிற்றுப் புண்ணைக் குணமாக்குவதுதான் தீர்வு.
ஆனால், மேலோட்டமாகப் புரிந்துகொண்டு ஒரு நறுமணம் சேர்த்த டூத் பேஸ்ட்
உபயோகித்தால் துர் நாற்றம் போய்விடும் என்று நினைப்பது அறியாமைதான்”
என்கிறார். சரி… டூத்பேஸ்ட்டுகளை தவிர்க்க முடியாது என்ற நிலையில், நல்ல
டூத்பேஸ்ட்டை எப்படித் தேர்ந்தெடுப்பது? யார் யாருக்கு எந்த பேஸ்ட்
சரியானது? என்று கேட்டோம். ”பல் சொத்தை ஏற்படாமல் இருக்க ஃப்ளோரைடு கலந்த
பேஸ்ட், பற்களில் கூச்சம் இருந்தால் டிசென்சிடைஸிங் வகை டூத்பேஸ்ட்
(Desensitising toothpaste), சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃப்ரீ வகை டூத்
பேஸ்ட், ஈறுகளில் ரத்தம் வருவதற்கு டேனிக் ஆசிட் கலந்த டூத்பேஸ்ட்
(Antiplaque toothpaste), பற்களை வெள்ளையாக்குவதற்காக கார்போமைட்
பெராக்ஸைடு கலந்த டூத்பேஸ்ட் (Whitening toothpaste), இயற்கையான முறையில்
தயாரிக்கப்படுகிற ஹெர்பல் டூத் பேஸ்ட் என சந்தைகளில் நிறைய வகைகள்
கிடைக்கின்றன. ஆனால், உங்கள் பற்களின் தன்மை என்ன? எந்த பற்பசை உங்களுக்கு
சரியானது என்பதை ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவு செய்வததே
சிறந்தது. ஏனெனில், பற்பசைகளில் கலந்திருக்கிற வேதிப் பொருட்கள் உடல்நலனைக்
கெடுக்கும் திறன் கொண்டவை!” என்கிறார். டூத்பேஸ்ட்டுகளில் அப்படி என்னதான்
ஆபத்தான வேதிப் பொருட்கள் கலந்திருக்கின்றன? மருந்தியல் துறை பேராசிரியை
மாலதியிடம் கேட்டோம்… ”டூத்பேஸ்ட் என்பதே ரசாயனங்களின் கலவைதான். ஆனால்,
அந்த ரசாயனங்கள் நமக்கு நன்மை தராவிட்டாலும் பரவாயில்லை, ஆரோக்கியக் கேட்டை
உண்டாக்குவதாக இருக்கக் கூடாது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
குறிப்பாக, பற்களில் சொத்தை ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஃப்ளோரைடு (Fluoride)
என்ற வேதியியல் பொருளைக் கலக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை நாம்
அருந்தும் தண்ணீரிலேயே நம் உடலுக்குத் தேவையான ஃப்ளோரைடு கிடைக்கிறது.
அதனால், டூத்பேஸ்ட் பயன்படுத்தித்தான் ஃப்ளோரைடு பெற்றுக் கொள்ள வேண்டும்
என்ற அவசியம் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம், இந்த ஃப்ளோரைடு
பயன்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அமெரிக்காவின் உணவு
மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமான எஃப்.டி.ஏ. (Food and Drug
Agency) ஃப்ளோரைடு டூத்பேஸ்ட்டுகளின் மேல், ‘ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்
கைகளுக்கு எட்டும் இடத்தில் வைக்க வேண்டாம். வழக்கத்தைவிட சிறிதளவு
அதிகமாக ஃப்ளோரைடு டூத் பேஸ்ட் எடுத்துக் கொண்டாலும் உடனடியாக மருத்துவ
உதவியையோ அல்லது விஷமுறிவு மையத்தையோ நாடுங்கள்’ என்று அச்சடிக்க
உத்தரவிட்டுள்ளது. இப்போது மேற்கத்திய நாடுகளிலேயே ஃப்ளோரைடு இல்லாத
டூத்பேஸ்ட்டுகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இங்கோ, ஃப்ளோரைடு
டூத்பேஸ்ட்டுகள்தான் அதிகம் விற்பனையாகி வருகின்றன. டூத்பேஸ்ட்டுகளில்
சோடியம் லாரில் சல்பேட்(Sodium lauryl sulfate) என்ற வேதியியல் பொருளை நுரை
வருவதற்காக சேர்க்கிறார்கள். இந்த சோடியம் லாரில் சல்பேட் துணி துவைக்கிற
சோப்புகளிலும் வாகன இன்ஜின்களை சுத்தப்படுத்தும் க்ளீனர்களிலும்
பயன்படுத்தப்படுபவை. இதைக் கொண்டு பல் துலக்கினால் என்னவாகும் என்பதை
யோசித்துப் பாருங்கள். அதேபோல் சோடியம் பென்ஸீன்(Sodium benzene) என்ற
வேதியியல் பொருளும் டூத்பேஸ்ட்டுகளில் கலக்கப்படுகிறது. இந்த பென்ஸீன்
புற்றுநோயை உண்டுபண்ணக் கூடியது. பேஸ்ட்டுகளில் கலக்கப்படும் ட்ரைக்ளோஸன்
(Triclosan) காரணமாக தைராய்டு குறைபாடு ஏற்படலாம். வாடிக்கை யாளர்கள்
மீண்டும் தங்களுடைய டூத்பேஸ்ட்டையே வாங்க வேண்டும் என்பதற்காக
பேஸ்ட்டுகளில் நிக்கோடின் கலக்கப்படுவதாக சமீபத்தில் புகார்
எழுந்திருக்கிறது. டூத்பேஸ்ட்டின் இடம் இன்று தவிர்க்க முடியாதது என்பதால்,
டூத்பேஸ்ட்டை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
ஒரு பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பேஸ்ட்டை தேர்ந்தெடுப்பது
பாதுகாப்பானது. பேஸ்ட் பயன்படுத்தும்போது பிரஷ்ஷில் பட்டாணி அளவுதான் வைக்க
வேண்டும். விளம்பரங்களோ பிரஷ் முழுவதும் பேஸ்ட் வைக்க வேண்டும் என்று
கற்றுக் கொடுத்திருக்கின்றன. இது தவறு. நீண்ட நேரம் பேஸ்ட்டை வாயில்
வைத்துக் கொண்டு பல் துலக்குவதும் தவறு. பல் துலக்கிய பிறகு வாயை நன்கு
கொப்பளிக்க வேண்டும். குழந்தைகள் டூத்பேஸ்ட் பயன்படுத்தும்போது இந்த
வழிமுறைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம்”என்கிறார். இப்போது
நாம் சோதித்துக் கொள்ள வேண்டியது நம் டூத் பேஸ்ட்டில் விஷம் இருக்கா…
இல்லையா என்பதையே. ஸோ, அலர்ட் ஆகிக்கோங்க லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்!
விளம்பரங்களில் வருவதைப் போல டூத் பேஸ்ட்டுகளால் எந்த நோயையும்
குணப்படுத்தி விட முடியாது. எந்த மாறுதலும் வந்து விடப் போவதில்லை…on நன்றி-தினகரன்
No comments:
Post a Comment