Saturday, November 22, 2014

புதிய பட்ஜெட் போன்

ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவை புதிய அறிமுகங்கள் மூலம் மேலும் போட்டியைத் தீவிரமாக்கியுள்ளன. சீனத்து வரவான ஜியோமியின் எம்.ஐ3 மற்றும் ரெட்மி 1S ஆகியவற்றின் வரவேற்பைத் தொடர்ந்து இந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை (எம்.ஐ 4) இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறத
இதைத் தவிர வேறு ஒரு ஸ்மார்ட் போனும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இந்தப் புதிய போன் 5,000 ரூபாய் அளவிலான பட்ஜெட் போனாக இருக்கலாம் என்றும் சீனச் செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன.
720p டிஸ்பிளே மற்றும் 1 ஜிபி ராம் ஆகிய அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகலாம் என்றும் தெரிகிறது. பட்ஜெட் போன் மட்டுமல்ல, கோ புரோ கேமரா போன்றவற்றையும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் திட்டம் இந்நிறுவனத்திற்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செல்ஃபி பிரிண்டர்

செல்ஃபி எனும் சுயபடம் எடுக்கும் பழக்கம் தேவையானதா இல்லையா என்பதை விட்டு விடுங்கள். ஆர்வத்தோடு எடுக்கும் சுயபடத்தைச் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டால் போதுமா? அதை அப்படியே சுடச்சுட பிரிண்ட் போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு விருப்பம் உள்ளவர்களுக்காக அல்லது இத்தகைய விருப்பத்தை ஏற்படுத்துவதற்காக பிரைண்ட் எனும் பிரெஞ்சு நிறுவனம் கையடக்க பிரிண்டரை உருவாக்கியிருக்கிறது. கையடக்க பிரிண்டர் என்றவுடன் இதைத் தனியே சுமக்க வேண்டியிருக்குமோ என்று நினைக்க வேண்டாம்.
இந்த பிரிண்டர் ஸ்மார்ட் போனுக்கான கேஸ் வடிவில் வருவதால், இதை போனுடன் இணைத்துக்கொண்டால் போதும். ப்ளுடூத் மூலம் செயல்படும் இந்த பிரிண்டர் ஒரு நிமிடத்துக்குள் புகைப்படத்தை பிரிண்ட் செய்து கொடுத்துவிடுமாம். எதிர்காலத்தில் அரை நிமிடத்தில் பிரிண்ட் எடுக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே போல இப்போதைக்கு இந்த கேசில் ஒரு காகிதத்தை மட்டுமே நுழைக்க முடியுமாம். இதையும் 30 காகிதங்களாக அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனராம்.
இந்த கேசை ஸ்மார்ட் போனுடன் இணைந்தால் போதும், படத்தை க்ளிக் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். ப்ளுடூத் அல்லது வைஃபை இணைப்பு ஏற்படுத்துவது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எல்லாம் தானாக நிகழுமாம். இது ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களுக்குப் பொருந்தும். பேப்லெட்களுக்கு அடுத்ததாக வரவிருக்கிறது. விலை 99 டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, சந்தைக்கு எப்போது வரும்? இதன் இணையதளத்தில் இமெயில் முகவரியைப் பதிவுசெய்தால் முதலில் தகவல் சொல்கிறோம் என்கின்றனர். நிதி திரட்டும் தளமான கிக்ஸ்டார்ட்டர் மூலம் ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: http://www.pryntcases.com/  

No comments:

Post a Comment