விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால்,
ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட
இடம்தான் ராமேசுவரம்.
ராவணன் மாவீரனும்கூட! கார்த்த வீர்யார்ஜூனனையும், வாலியையும் தவிர, தான்
சண்டை போட்ட அனைவரையும் ஜெயித்தவன். இப்படிப்பட்டவனைக் கொன்றதால்,
ராமருக்கு `வீரஹத்தி தோஷம்’ உண்டாயிற்று. இந்த தோஷத்துக்குப்
பிராயச்சித்தமாகத்தான் வேதாரண்யத்திலே ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்
ராமர்.
ராவணன் சிவபக்தன். வீணை வாசிப்பதில் நிபுணன். சாம கானம் பாடுவதில் வல்லவன்.
இம்மாதிரியான நல்ல அம்சங்களை `சாயை' என்பார்கள். `சாயை' என்றால் ஒளி,
நிழல் என்ற இரண்டு அர்த்தங்களும் உண்டு. ஒளி என்ற பெருமைவாய்ந்த குணங்களை
எல்லாம் குறிப்பிடும் `சாயை' உடைய ராவணனை வதம் செய்ததால், ராமருக்கு `சாயா
ஹத்தி' தோஷம் உண்டாயிற்று. இது தீர்வதற்காக, பட்டீஸ்வரத்தில்
ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர்.
ராமலிங்க பிரதிஷ்டைத் திருவிழா, ராமேசுவரத்தில் மிகவும் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில்
உள்ள சந்நிதியில், ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியானது, தத்ரூபமாகக் காட்சி
அளிக்கும் வகையில் சுதை உருவங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இதில்,
ராமனும் சீதையும் லிங்கப் பிரதிஷ்டை செய்வதைத் தரிசிக்கலாம். சீதையின்
முழங்கால், பீடத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. ராமனின் இடது
பக்கம், அவனது வில் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும்
சுக்ரீவன், அனுமன், விபீஷணன் முதலியோரின் உருவங்களையும் காணலாம்.
திருவிழாவின் முதல் நாளில், ராவண வதம் நிகழ்ச்சி நடைபெறும். இது
திட்டக்குடியில் துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும். இரண்டாவது நாளில்,
ராவணன் சம்ஹாரம் செயயப்பட்டதையொட்டி அவரின் தம்பி விபீடணருக்கு இலங்கை
மன்னராக பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி கோதண்டராமசாமி கோவிலில்
நடைபெறும். மூன்றாம் நாள், ராமலிங்கப் பிரதிஷ்டை நிகழ்ச்சி ராமேசுவரம்
ராமநாதசுவாமி கோவிலில் நடைபெறும். அடுத்த ஏழு நாட்களுக்கு இவ்விழா
தொடர்ந்து நடைபெறும். விழா முடிவில், ராமரும், ராமநாதரும் ரதத்தில் பவனி
வருவர்.
விழா தொடங்கும்போதும், அது முடிவடையும்போதும், அர்ச்சனையின்போதும்,
திருவமுது படைக்கும்போதும், உற்சவத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்
கோயிலில் உள்ள பெரிய மணிகள் அடிக்கப்படும். இது அனைத்து பக்தர்களின்
கவனத்தையும் ஈர்க்கும்.
No comments:
Post a Comment