Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

Thursday, July 24, 2014

ராமனின் தோஷம்

ராமேசுவரம் கோவில்விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேசுவரம்.
ராவணன் மாவீரனும்கூட! கார்த்த வீர்யார்ஜூனனையும், வாலியையும் தவிர, தான் சண்டை போட்ட அனைவரையும் ஜெயித்தவன். இப்படிப்பட்டவனைக் கொன்றதால், ராமருக்கு `வீரஹத்தி தோஷம்’ உண்டாயிற்று. இந்த தோஷத்துக்குப் பிராயச்சித்தமாகத்தான் வேதாரண்யத்திலே ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர்.
ராவணன் சிவபக்தன். வீணை வாசிப்பதில் நிபுணன். சாம கானம் பாடுவதில் வல்லவன். இம்மாதிரியான நல்ல அம்சங்களை `சாயை' என்பார்கள். `சாயை' என்றால் ஒளி, நிழல் என்ற இரண்டு அர்த்தங்களும் உண்டு. ஒளி என்ற பெருமைவாய்ந்த குணங்களை எல்லாம் குறிப்பிடும் `சாயை' உடைய ராவணனை வதம் செய்ததால், ராமருக்கு `சாயா ஹத்தி' தோஷம் உண்டாயிற்று. இது தீர்வதற்காக, பட்டீஸ்வரத்தில் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர்.
ராமலிங்க பிரதிஷ்டைத் திருவிழா, ராமேசுவரத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் உள்ள சந்நிதியில், ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியானது, தத்ரூபமாகக் காட்சி அளிக்கும் வகையில் சுதை உருவங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இதில், ராமனும் சீதையும் லிங்கப் பிரதிஷ்டை செய்வதைத் தரிசிக்கலாம். சீதையின் முழங்கால், பீடத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. ராமனின் இடது பக்கம், அவனது வில் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் சுக்ரீவன், அனுமன், விபீஷணன் முதலியோரின் உருவங்களையும் காணலாம்.
திருவிழாவின் முதல் நாளில், ராவண வதம் நிகழ்ச்சி நடைபெறும். இது திட்டக்குடியில் துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும். இரண்டாவது நாளில், ராவணன் சம்ஹாரம் செயயப்பட்டதையொட்டி அவரின் தம்பி விபீடணருக்கு இலங்கை மன்னராக பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி கோதண்டராமசாமி கோவிலில் நடைபெறும். மூன்றாம் நாள், ராமலிங்கப் பிரதிஷ்டை நிகழ்ச்சி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நடைபெறும். அடுத்த ஏழு நாட்களுக்கு இவ்விழா தொடர்ந்து நடைபெறும். விழா முடிவில், ராமரும், ராமநாதரும் ரதத்தில் பவனி வருவர்.
விழா தொடங்கும்போதும், அது முடிவடையும்போதும், அர்ச்சனையின்போதும், திருவமுது படைக்கும்போதும், உற்சவத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் கோயிலில் உள்ள பெரிய மணிகள் அடிக்கப்படும். இது அனைத்து பக்தர்களின் கவனத்தையும் ஈர்க்கும்.

வாசுகி தவம் செய்த இடம்

அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகியைச் சுருட்டி பந்துபோல் எறிந்தனர். அது கடற்கரையில் அமைந்திருந்த ஒரு மூங்கில் காட்டில் விழுந்தது. உடல் நைந்து உயிர் போகும் நிலையில் இருந்த அப்பாம்பின் வாலிலிருந்த உயிர் தலைக்கேறிப் பிழைத்துக்கொண்டது.

சிவன் தனது நஞ்சை உண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று மனம் வருந்திய வாசுகி, சிவனிடம் மன்னிப்பு வேண்டித் தவம் இருந்தது. சிவனும் அதன் தவத்திற்கு இரங்கிக் காட்சி தந்தார். வாசுகி தன் பாவத்தைப் பொறுத்தருளியதற்கு சிவனிடம் நன்றி கூறியது. தான் தவம் செய்த மூங்கில் காட்டிலேயே கோயில் கொண்டு வழிபட வருவோரின் கேது கிரகத் தொல்லைகளை நிவர்த்தி செய்யுமாறு வேண்டியது. 

வாசுகி வழிபட்ட இந்த இடம் மூங்கில் தோப்பு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள கேது பரிகாரத் தலம்தான் நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பெரும்பள்ளம். இங்கு செல்பவர்கள் மூங்கீல் தோப்பையும் தரிசனம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின நம்பிக்கை.