Wednesday, July 23, 2014

அரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா?

அரசாங்க வேலையா, கார்ப்பரேட் வேலையா என்றால் மத்திய தட்டு மக்கள் தனியாரைத்தான் அதிகம் தேடிப் போகிறார்கள். ‘நாற்பதுக்குள் நன்றாகச் சம்பாதித்துவிட்டுப் பின் ஓய்வு பெற வேண்டும்’ போன்ற எண்ணங்களைப் பல இளைஞர்கள் சொல்லக் கேட்கிறேன். அதற்கு மேல் ஆரோக்கியம் இடம் கொடுக்காது என்று எனக்குச் சொல்லத் தோன்றும்.
லாப நோக்கம், போட்டி மனப்பான்மை, குறுக்கு வழிகளில் நம்பிக்கை, சுய நலம் போன்றவை தனியார் நிறுவனங்களின் விழுமியங்களாக வெளிப்படுகின்றன. காலக்கெடுவிற்குள் எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் குறி. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு. மறுக்கவில்லை.
லஞ்சம், ஏமாற்று வேலை என்பதெல்லாம் இரு பக்கங்களிலும் உண்டு. தனியார் துறையில் மேல் தட்டில் அல்லது சில குறிப்பிட்ட பணிகளில்தான் இவை சாத்தியம். அரசுப் பணியில் கீழ் நிலைவரை கிட்டத்திட்ட எல்லாப் பதவிகளிலும் இவை சாத்தியம்.
ஆனால் நேர்மையான, திறமையான ஆட்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் முன்னுக்கு வருகிறார்கள். எங்கு பணி செய்தாலும்.
அரசாங்கப் பணிகளில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஆட்கள் அமர்ந்தால் நம் தேசம் உலக அரங்கில் தலை நிமிரும்.
எல்லையில் ஆயுதம் ஏந்தி நிற்கும் ராணுவ வீரர்களும், பழங்குடிகள் வாழும் மலைப் பகுதியில் பணியாற்றும் அரசாங்க மருத்துவர்களும், குக்கிராமத்தில் கட்டிட வசதிகூட இல்லாமல் மர நிழலில் போதிக்கும் ஆரம்ப நிலை ஆசிரியர்களும், பேரிடர் காலத்தில் களம் இறங்கிப் பணி புரியும் ஆட்சியாளர்களும்தான் நிஜ நாயகர்கள்!
எந்தப் பணமும் வசதியும் தராத மன நிம்மதி மக்கள் தொண்டில் கிடைக்கும். இது அரசாங்கப் பணியில் தான் இயல்பாகச் சாத்தியமாகிறது. அரசியல் தலையீடு, வசதிக்குறைவு, திறமைக்குத் தேவையான ஊக்குவிப்பு இல்லாமை போன்றவை பெரிய சவால்கள்தான். ஆனால் இவை தாண்ட முடியாத தடைகள் அல்ல.
அரசாங்கப் பணிகள் மீது வேலை தேடுவோரின் கவனம் திரும்ப வேண்டும் என்றால் அரசுத் தேர்வாணையம் போன்ற அமைப்புகள் நியாயமாகத் திறமையின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டும். தவிர, தனியார் துறையில் உள்ள நல்ல நிர்வாக வழிமுறைகளை அரசாங்கத் துறைகள் பின்பற்றலாம்.
வேலை என்பது நம் பிழைப்பிற்கு மட்டும்தானா? பிறர் துன்பம் துடைக்கக் கிடைத்த வாய்ப்பா?
இந்தக் கேள்விக்கான பதில்தான் உங்கள் வேலை தேடும் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும்.
டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்- தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment