Sunday, July 6, 2014

உங்களை வரவேற்கும் கோபுர வாசல் காற்று அதிசயம் !!


சில வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு செல்லும்  வாய்ப்பு கிட்டியது. சுமார் 5 நாட்கள் தொடர்ச்சியாக தங்கினேன். நல்ல சீசன் நேரம். தென்றலும், சாரலும் மனதை மயக்கியது. அனுபவித்தவர்களுக்கு தெரியும்.. நிச்சயமாக தமிழ் நாட்டில் , இந்த அளவுக்கு மனதை மயக்கும் இடம் , என் அனுபவத்தில் வேறு எங்கும் இல்லை... கொட்டும் அருவி, மூலிகை மனத்துடன் தென்றல் காற்று, எவ்வளவு சாப்பிட்டாலும் , வழிய வழிய எண்ணெய் தேய்த்து .. குளித்து முடித்து விட்டு வந்தவுடனே திரும்பவும் , பசியை தூண்டும்..  உடலுக்கு முழுக்க புத்துணர்ச்சி.. அருகிலேயே குற்றாலீஸ்வரர் ஆலயம்... அதிகமாக கூட்டமும் இருப்பதில்லை ... சலிக்க சலிக்க தரிசனம் செய்யலாம். 

அங்கேயே இருந்த லோக்கல் நண்பர் ஒருவர் கூடவே இருந்ததால் , மலையின் இண்டு இடுக்கு எல்லாம் - ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்தோம். 

அப்படி இருந்த போது, அருகில் இருக்கும் தென்காசி சென்று வரலாமே  என்று , ஒருநாள் மாலை நேரம் கிளம்பினோம். உங்கள் அனைவருக்கும்  ஒரு வேண்டுகோள்.. உங்கள் வாழ்வில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் - ஒரு முறை , இந்த தென்காசி - விஸ்வநாதரை தரிசிக்க வாருங்கள்..  

இறைவனே , கை கோர்த்து உங்களுடன் ஆலயம் வருவது போன்ற ஒரு உணர்ச்சி , நிச்சயம் உங்களுக்கு ஏற்படும். அந்த சிவனின் பூரண அருள் அலைகள் , அபரிமிதமாக வெளிப்படும் இடம் இது.  இங்கு வந்த பிறகு, ஒவ்வொருவரும், ஆண்டவனின் அருள் அலைகளை மனப்பூர்வமாக , சில முக்கியமான ஆலயங்களில் உணர முடியும்.

அதன் பிறகு, நீங்கள் ஆலயம் செல்லும்போது உங்களுக்கு ஏற்படும் கண்ணோட்டமே வித்தியாசமாக இருக்கும். அந்த ஆலயத்துடன் , ஏதோ ஜென்ம ஜென்ம தொடர்பு இருப்பதை போல உணர முடியும். நமது வாசக அன்பர்களில் , யாருக்காவது அந்த அனுபவம் ஏற்பட்டால் , உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.. 

அம்பிகையின் பெயர் - குழல்வாய்மொழி. பெயரைக் கேட்கும்போதே...  நீங்கள் clean bowled !!    அந்த ஆலயம் பற்றி , ஒரு கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில், பெரும் மகிழ்ச்சி.. 

ஸ்தல வரலாறு : 
குலசேகரபாண்டியனுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து வந்த பராக்கிரம பாண்டியன் வடநாட்டின் காசி விஸ்வநாதரின் மேல் அபார பக்தி பூண்டு மனதுக்குள் வழிபட்டு வந்தான். காசி நகரத்து விஸ்வநாதர் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டு அதே போல் இங்கும் ஒரு கோயில் கட்டி அதில் விஸ்வநாதரைப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணினான்.

அதே நினைப்போடு இருந்த மன்னன் கனவில் காசி விஸ்வநாதரே தோன்றி, அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த லிங்கம் அந்த ஊரின் செண்பக வனத்தில் இருப்பதாகவும். கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்பின் தொடர்ந்து செல்லுமாறும் பணித்தார். அவ்விதமே செய்த மன்னன் குலசேகரனால் வழிபட்டு வந்த லிங்கத்தைக் கண்டு பிடித்தான். அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயரிட்டு கோயிலையும் கட்டினான். வடக்கே இருக்கும் காசி விஸ்வநாதர் தெற்கேயும் வந்து அருளுவதால் இந்த ஊரின் பெயரே அதன் பின்னர் தென்காசி என அழைக்கப் பட்டது.



இவனுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவ ஈசனே சிவனடியார் உருவில் வந்து உதவியதாகவும், பின்னர் அந்த அடியார் இந்தக் கோயிலிலேயே தங்கியதாகவும் கூறுகின்றனர். அவருக்கெனத் தனிச் சந்நிதியும் உள்ளது. அந்தச் சந்நிதியில் விக்ரஹம் எதுவும் இல்லாமல் சதுர பீட உருவில் அமைக்கப் பட்டு, அங்கே அடியாரை வணங்கி வருகின்றனர்.

அம்பிகை குழல்வாய்மொழிநாயகி என்னும் உலகம்மை அருளாட்சி புரிகின்றாள். கோயில் பிராகாரத்தில் ஸ்ரீசக்ர அமைப்புடன் கூடிய பராசக்தி பீடம் உள்ளது. இதையும் தரணி பீடம் என்றே அழைக்கின்றனர். அம்பிகை பூமியில் தோன்றியதால் அவ்விதம் அழைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. 40 முக்கோணங்களுடன்கூடிய இந்தப் பீடத்திற்குப் பச்சைப் புடைவை சார்த்தி வழிபடுகின்றனர்.



ஸ்ரீசக்ர சந்நிதிக்கு எதிரேயே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இங்கே நவகிரஹங்களும் மண்டபத்தினுள் ஒவ்வொரு திக்கையும் பார்த்தவண்ணமும், மண்டபத்துக்கு வெளியே நேர் வரிசையாகவும் காணப்படுகின்றனர். இதன் தாத்பரியம் புரியவில்லை. ஒருவேளை இடைக்காட்டுச் சித்தர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று இங்கே நடந்திருக்கலாமோ? அவர் தாம் நேரே ஒன்றாக இருந்த நவகிரஹங்களையும் ஒவ்வொரு திசைக்குத் திருப்பினார் என்பார்கள். அதை நினைவு கூரும் விதத்தில் அமைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. 

தில்லையில் நடராஜருக்குக் கணக்குகளை ஒப்பிப்பது போன்றதொரு நிகழ்ச்சி இங்கேயும் நடை பெறுகிறது. இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஈசனே நேரே கண்காணிப்பதாக ஐதீகம். ஈசனுக்குத் தனி அரியாசனம் உண்டு. ஆவணிமாதம் முதல் தேதி அன்று சொக்கநாதர் என்ற பெயரோடே அரியாசனம் ஏறும் உற்சவர் முன்னே ஒரு வருஷத்துக் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படுகின்றன. கங்கை நீரால் விஸ்வநாதருக்கு நீராட்டு  செய்யவேண்டும் என விரும்பிய மன்னனின் விருப்பத்துக்காக ஈசனே இங்கே கிணறு வடிவில் கங்கையை வரவழைத்தார் என்கின்றனர்.

இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்த பராக்கிரம பாண்டியன் கோயில் சரிவர நிர்வகிக்கப் படவேண்டும் என்பதிலும், கோயிலின் பராமரிப்புப் பணிகள் செம்மையாக நடைபெறவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறான் என்பதை இங்கே உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலினுள் நுழையும் ராஜகோபுரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “ காலத்தால் இந்தக் கோயில் சிதைவடையுமானால், அதைச் சரி செய்பவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்.” என எழுதப் பட்டுள்ளது. இது தவிரவும், கோயிலுக்கு வரும் பக்தர்களை வணங்கும்விதமாய் மன்னன் கீழே விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பம் அம்மன் கோயிலின் நுழைவு வாயிலிலும் அமைத்திருக்கின்றனர்.



அப்படியும் காலப் போக்கில் இந்தக் கோயில் கோபுரம் இரண்டாய்ப் பிளந்து காட்சி அளித்ததாகவும், பின்னர் 1990 ஆம்  ஆண்டு வாக்கில் புதிய கோபுரம் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். இந்தக் கோபுர வாசல் காற்றின் விசேஷம் என்னவென்றால் கோபுரத்துக்குள் நுழையும்போதே காற்று நம்மை முன்னோக்கித் தள்ளி உள்ளே கொண்டு சேர்க்கும் வண்ணம் கட்டப் பட்டிருப்பது தான். நுழையும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று கோபுரத்தைக் கடந்ததும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதையும் உணரும் விதம் கட்டப் பட்டுள்ளது. 

அருமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் பாலமுருகன் சந்நிதி ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே அமைந்துள்ளது. சோமாஸ்கந்த அமைப்புக் கோயிலாகச் சொல்லப் படுகிறது. தல விருக்ஷங்கள் இரண்டு உள்ளன. ஏற்கெனவே இருந்த செண்பகம் தவிர, பலா மரமும் இங்கே தலவிருக்ஷம் ஆகும்.

இங்கே ஊரைச் சுற்றி இருக்கும், பச்சை பசேல் வயல் வெளியை பார்த்தீர்களேயானால் , ஏதாவது நிலம், வயல் வாங்கி , இங்கேயே "செட்டில்" ஆகிவிடத் தோன்றும்.. இங்கே கிடைக்கிற சுத்தமான காற்றுக்கு , என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். 

சில வருடங்களுக்கு முன், இந்து - முஸ்லீம் இடையே , ஏதோ பிரச்னை என்று , கொஞ்சம் பதற்றம் நிலவியது.. அதை எல்லாம் விட்டு தள்ளுங்க.. கடவுளுக்கு முன்னாலே , ஜாதியாவது , மதமாவது... ? 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. சதுரகிரிக்கு, குற்றாலத்திற்கு வரும் அன்பர்கள், தவறாமல் ஒருமுறை வந்து பாருங்கள்... 

 உங்கள் கருத்துக்களை, மறக்காமல் பின்னூட்டங்களில் பதிவு செய்யவும்.

No comments:

Post a Comment