Thursday, March 5, 2015

ஆலயம்

திருமுருகநாத சுவாமிதிருமுருகன் பூண்டியில் எழுந்தருளியுள்ள திருமுருகநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வேடுபறி திருவிழா பிரசித்தமானது. இந்தாண்டு மார்ச் 7-ம் தேதி இந்தத் திருவிழா நடக்கின்றது.பரிகார ஆலயம் : இன்றும், சிவன், பொருட்களைத் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது. திருட்டு, மனநோய், திருமணத் தடை என எத்தகைய இடர்களையும் தீர்க்கும் ஆலயமாக இது உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டிப் பாடிய பத்துப் பாடல்களையும், பாடி வணங்க, நினைத்த காரியம் கைகூடும் என்பதும் ஐதீகம்.

மாசிமகமும் குதிரையும்...!
 கேட்டால் கேட்டதைக் கொடுப்பார், கேட்காவிட்டால் தன்னையே கொடுப்பார் என்பதற்கு ஏற்ப வேண்டுதலை நிறைவேற்றுவதால்தான் வருடாவருடம் குதிரைக்கு அணிவிக்கப்படும் ஜிகினா மாலைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. மாசிமகத் திருவிழாவுக்கு வர இயலாதவர்கள் பங்குனி உத்திரத்துக்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
கீரமங்கலம் வழியாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அறந்தாங்கியில் இருந்து 12-வது கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது. 

கருணை தெய்வம் கஜேந்திர வரதன் - திருமோகூர் கஜேந்திர மோட்சம் மார்ச் 5

அழகிய வளம் மிக்க நாடு அது. மன்னன் இந்திரஜூம்னன் விஷ்ணு பக்தன். அப்பெருமாளின் பெயரை உச்சரிக்காத நாள் என்ன நாளோ என எண்ணுபவன். விஷ்ணுவைக் குறித்து தியானத்தில் அமர்ந்துவிட்டால், பூவுலகையே மறந்துவிடுவான்.. இயற்கை வளம் கொட்டிக் கிடந்ததால் நாடு போற்றும் நல்ல மன்னனாக வாழ்ந்தான்.
சாபம் ஏன்?
விஷ்ணு பூஜையும், பணிவும் கொண்ட அவ்வரசனுக்கும் சோதனை வந்தது. முனிவர்களை உபசரிக்கும் வழக்கம் கொண்டவன் அம்மன்னன். ஒரு நாள் காலை வழக்கம் போல் விஷ்ணு பூஜையில் அமர்ந்த இந்திரஜும்னன் மெய் மறந்தான். அதனால் அங்கே வந்த தூர்வாசர் நெடு நேரம் காக்க வேண்டிவந்தது. இதனால் கோபமடைந்த அவர், இந்திரஜும்னன் மதம் பிடித்த யானையாக பிறக்கக் கடவது எனச் சாபமிட்டார்.
சாபம் தீர வழி
தன் நிலையை விளக்கிய மன்னன், இச்சாபத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தாழ்மையுடன் கோரினான். கோபம் தணிந்த முனிவரும், நீ ஆதிமூலமே என்று விஷ்ணுவை அழைக்கும் காலம் வரும்பொழுது, முக்தி அடைவாய் என்று கூறினார்.
காலம் கடந்தது. மன்னனும் மறுபிறவி எடுத்தான். அவன் யானைக் கூட்டத்திற்குத் தலைவன் ஆனதால், கஜேந்திரன் என்று அழைக்கப்பட்டான். ஐந்தறிவு கொண்டிருந்தாலும் பூர்வ ஜென்ம வாசனையால், அவன் விஷ்ணுவைத் தொழுவதைத் தொடர்ந்தான்.
முதலையான அசுரன்
இந்த நிலையில், ஒரு குளத்தில் ஹுஹூ என்ற பெயர் கொண்ட அசுரன் வாழ்ந்துவந்தான். குளிப்பதற்காகக் குளத்திற்கு வரும் பக்தர்களைக் காலைப் பிடித்து இழுத்துக்கொண்டு குளத்தின் அடிவரை சென்றுவிடுவான். ஒரு நாள் அகத்திய மாமுனி அங்கு வந்து ஸ்நானம் செய்தார். மற்றவர்களை வம்பிழுப்பதுபோல அகத்தியர் காலையும் பிடித்து இழுத்துக்கொண்டு, நீரினடியில் செல்ல முற்பட்டான் அசுரன். கோபம் கொண்ட அகத்தியர் அவனை முதலையாகக் கடவது என சாபமிட்டார்.
சாபம் நீக்க வேண்டுதல்
அரக்கன் ஹூஹூ பதறினான். அகத்தியரைப் பணிந்து சாப விமோசனத்தை வேண்டினான். இக்குளத்திலேயே இருந்து விஷ்ணுவைப் பிரார்த்தித்து வருமாறு அறிவுறுத்தினார். அத்தெய்வத்தால் உரிய காலத்தில் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். அவனும் முதலை உருவெடுத்தான். மகேந்திரன் எனப் பெயர் சூட்டப் பெற்றான். நீருக்குள் சென்று விஷ்ணு தியானத்தில் மூழ்கினான்.
ஆயிரம் இதழ் தாமரை
ஆண்டுகள் பலவாயின. அசுரன் முதலையாகக் குளத்தில் இருந்ததால், ஆடு, மாடு மட்டுமல்ல மனிதர்களும் அக்குளத்தை அணுகவில்லை. அக்குளத்தில் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த தாமரைக் கொடியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மொட்டவிழ்ந்தது. விடியலில் ஆதவனின் கிரணங்கள், அதன் மீது பட, மலர் விரிந்து மலர்ந்தது. இதனை அவ்வழியே வந்த கஜேந்திரன் கண்டான்.
தாகம் தீர்ந்தது
குளத்தில் இறங்கி நின்று நிதானித்துத் தன் குடும்பத்தாருடன் நீர் அருந்தினான். அவர்களுடன் உடன் வந்த மான்களும், முயல்களும், அணில்களும் நீர் அருந்தின. அங்கு வந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தாகம் தீர்ந்தது.
மூர்க்கமான முதலை
நீரில் ஏற்பட்ட சலசலப்பு மகேந்திரனை உசுப்பேற்றியது. அதே நேரம் கஜேந்திரனும் பூக் கொய்ய நீருக்குள் போனான். தும்பிக்கையை நீட்டி பூக் கொய்த அதே கணம், மகேந்திரன் அவன் காலைக் கவ்வியது. கஜேந்திரனுடன் வந்த யானைகள், தம் வலிமையெல்லாம் திரட்டி கஜேந்திரனை மீட்க முயற்சித்தன. அது பலிக்கவில்லை. பின்னர் அவை ஒவ்வொன்றாக விலகிச் சென்றன. எஞ்சியது கரை நோக்கி இழுக்கும் கஜேந்திரனும், தண்ணீருக்குள் இழுக்கும் மகேந்திரனும் மட்டுமே.
காலங்கள் சென்றன. இந்த இழுபறி ஆயிரம் ஆண்டுகள் நீடித்ததாம். இரண்டும் சக்தியை இழந்து ஓய்ந்தன. இனி தாங்க முடியாது என்ற நிலையில், தூக்கிய தும்பிக்கையில் அந்த அதிசய மலருடன் ஆதிமூலமே என்று பிளிறியது கஜேந்திரன்.
பறந்து வந்த பரந்தாமன்
அரைக் கண் மூடி இருந்த, ஆதிமூலமான பாற்கடல் வாசன் கண் விழித்தான். அவசரமாக எழுந்தான். கருட வாகனம் ஏறக்கூட நேரமின்றிப் பறந்து வந்தான் கஜேந்திரனைக் காக்க. எப்போதும் பீதாம்பரத்துடன் காட்சி தரும் எம்பெருமான், அதனை எடுத்துக்கொள்ளக்கூட நினைவின்றி ஒரே சிந்தனை கொண்டு ஓடோடி வந்தான்.
அதி வேகத்திற்குப் பெயர் பெற்றவர் கருடன். பெருமாள் தனியே செல்வதைப் பார்த்து, கருடன் அதிவேகமாகப் பறந்து வந்து, பெருமாளைத் தன் முதுகில் தாங்கிக்கொண்டார். இதனால் நொடிப் பொழுதில் அவ்விடம் வந்த பெருமாள் சக்கரத்தை ஏவினார். சக்கரம் முதலையின் தலையைச் சீவியது.
ஆயிரம் ஆண்டுகளாகக் கட்டுண்டு கிடந்த கஜேந்திரன் விடுபட்டான். பெருமாளுக்கு ஆயிரம் இதழ் தாமரையை அர்ப்பணித்தான். யானையைக் காப்பாற்ற வந்ததால் கஜேந்திர வரதன் என்பது பெருமாள் திருநாமம் ஆனது. முதலையும் சாபம் நீங்கப் பெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் என்ற இடத்தில் அருள்மிகு கஜேந்திர வரதன் கோயில் இன்றும் இப்புராண நிகழ்ச்சியை நினைபடுத்திக்கொண்டிருக்கிறது.
கஜேந்திர மோட்சம் புராண நிகழ்ச்சியைக் கேட்டாலோ, படித்தாலோ அந்த பக்தனின் இறுதிக் காலத்தில் பகவான் கூடவே இருப்பான் என்பது ஐதீகம். 

மாமல்லபுர கடற்கரையில் நிலமங்கை நாயகனுக்கு மாசி மகப் பௌர்ணமி அன்று காலை நீராட்டம் என்னும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.. இந்தக் கடற்கரையில் எந்த காலத்திலும் நீராடலாம். என்றாலும் மாசிப் பௌர்ணமி புண்ய காலத்திலே ஆதவன் தோன்றும் வேளையில் நிலமங்கை நாயகனுடன் நீராடும்போது பல மடங்கு பலன் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
பரிகாரம் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலம். தலசயனத்துறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் இம்மண்ணுலகை ஆள்வார். இதுவே ஆழ்வார்களின் வாக்கு..
நீராட்டம் 5.3.2105 வியாழன் காலை 7.00 மணிக்கு கடற்கரையில் தீர்த்தவாரி. அன்றைய தினம் ஸ்தலயனப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள் ஆகியோரின் கருடசேவை காணக் கண் கொள்ளாக் காட்சி. கண்டார் கண்ணுக்கு இனியன் நிலமங்கை மணாளன.


சென்னை திவ்ய தேசமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாசி மகத்தையொட்டி மெரினா கடற்கரையில் எழுந்தருளுவார். மயிலை மாதவ பெருமாளும் கண்ணகி சிலை அருகே கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். மாசி மக நீராட்டம் மனித வாழ்க் கையை மலர் தேரோட்டமாக்கும்.
http://tamil.thehindu.com/society/spirituality//article6959900.ece

No comments:

Post a Comment